மின்னல்கள்!: நடிகையாக உணர்ந்த தருணம் அது!
90-களில் திரைத்துறையில் பெரும்பாலானவர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை விசித்ரா.
90-களில் திரைத்துறையில் பெரும்பாலானவர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை விசித்ரா. நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது, "ராசாத்தி' தொடரின் மூலம் சின்னத்திரையின் சிந்தாமணியாக மறுபிரவேசம் செய்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கும் இவரிடம் பேசுவோம்:
பொதுமுடக்கத்தை எப்படி கடந்து வந்தீர்கள், என்ன கற்றுக் கொண்டீர்கள்?
முதல் கட்டமாக பொதுமுடக்கம் அறிவித்த நேரம் குழந்தைகளுக்கு சம்மர் வெக்கேஷன் நேரம். பொதுவாக சம்மர் வெக்கேஷன் நேரத்தில் எங்காவது வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்த வருடம் எங்கும் போக முடியாததால், வீட்டிலேயே பிள்ளைகளுடன் எண்ஜாய் செய்தோம்.
கற்றுக் கொண்டது என்றால், ஒரு மனிதன் எப்பவுமே ஒரே வேலையை நம்பி இருக்கக் கூடாது என்பதை புரிந்து கொண்டேன். ஒரு வேலையை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் எல்லாருக்குமே இந்த முடக்கம் பெரியளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதுவே கைத்தொழிலோ, அல்லது வேறு ஏதாவது கற்று வைத்திருந்தால், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை சமாளித்திருக்கலாம் என்று தோன்றியது.
என்னை பொருத்தவரை, சினிமாவை மட்டுமே சார்ந்து இருந்துவிட்டேன். அப்படியில்லாமல் சைட் பிசினஸாக நான் படித்த கல்வி சார்ந்து ஏதாவது செய்து கொண்டிருந்திருக்கலாம். அது போன்று கணினி அறிவை இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம். ஆன் லைன் பற்றி தெரிந்து வைத்திருந்திருக்கலாம் என்று தோன்றியது.
என் அப்பா திரைத்துறையில்தான் இருந்தார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். அப்போது என்னை பார்க்கும் அப்பாவின் நண்பர்கள் சிலர் என்னை நடிக்க வைக்கும்படி கேட்டிருந்தனர். நான் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
ஏ.வி.எம் ஸ்டூடியோ பக்கத்தில்தான் எங்கள் வீடு இருந்தது. நான் பள்ளிக்கு சைக்கிளில் போகும்போது, வரும்போதெல்லாம் சினிமா ஆட்கள் சிலர் பார்த்து பின்னாலயே வந்து, என்னைப் பற்றி விசாரித்து கண்டுபிடித்து, என் அப்பாவிடம் வந்து கேட்டனர்.
அதன்பின்தான் அப்பா சினிமாவில் நடிக்க அனுமதித்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், ஒரு புறம் என் படிப்பையும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன். பி.ஏ. சைக்காலஜி படித்தேன். பின்னர், எம்.எஸ்.சி சைக்கோ தெரபி அண்ட் கவுன்சிலிங் முடித்திருக்கிறேன்.
பொதுவாக எனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் எல்லாம் எதார்த்தமானதாகவே அமைந்துவிட்டதால், பெரிதாக எந்த கதாபாத்திரத்திற்கும் சிரமப்பட்டதில்லை.
சினிமாவில் மறக்கமுடியாத தருணம். எனக்கு முதல் வெற்றியை கொடுத்த "தலைவாசல்' படம் வெளியாகியிருந்தபோது, என்னுடைய பேட்டி பத்திரிகையில் வந்திருந்தது அதில் என் முகவரியும் போட்டிருந்தார்கள். அடுத்த இரண்டுநாளில், போஸ்ட்மேன் ஒரு பெரிய மூட்டை நிறைய கடிதத்தை தூக்கி வந்தார். ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் சினிமா என்றால் என்ன, ரசிகர்கள் என்றால் என்ன, இப்படிக் கூட ரசிகர்கள் இருப்பார்களா என தெரிந்தது. அந்தத் தருணம்தான் என்னை நடிகையாக உணர்ந்தேன். அதைத் தொடர்ந்து நிறையப் படங்கள் நடித்தேன்.
அதன்பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு "ராசாத்தி' தொடருக்கான வாய்ப்பு வந்தது. நல்ல பவர்புல்லான கதாபாத்திரமாக இருந்தது. அதனால், நிச்சயமாக என்னுடைய ரீஎன்ட்ரிக்கு சரியாக இருக்கும் என்று தோன்றியது. உடனே ஒத்துக்கொண்டேன். நான் எதிர்பார்த்தது போலவே அந்தத் தொடரில் என்னுடைய சிந்தாமணி கேரக்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.