முகப்பு
மகளிர்மணி

கலை படைப்புகளின் மூலம் உதவும் இளம் பெண்!

கிடைக்கும் விடுமுறை வாய்ப்பினை பயன்படுத்தி சுய முன்னேற்றம் அடைவோரில் உதகையை சேர்ந்த கல்லூரி மாணவி தீபாவும் ஒருவர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:


கிடைக்கும் விடுமுறை வாய்ப்பினை பயன்படுத்தி சுய முன்னேற்றம் அடைவோரில் உதகையை சேர்ந்த கல்லூரி மாணவி தீபாவும் ஒருவர். இவருக்கு கல்லூரியில் விடுக்கப்பட்ட விடுமுறையையடுத்து வீட்டில் தனது பொழுதை வீணாக்காமல் "பாட்டில் ஆர்ட்' எனப்படும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளதோடு, இந்த கலையை பள்ளி செல்லாமல் வீட்டிலிருக்கும் மாணவ, மாணவியருக்குஇலவசமாகவும் கற்றுத் தருகிறார். அத்தகைய படைப்புகளை விற்பதால் கிடைக்கும் பணத்தையும் ஏழை பள்ளி மாணவர்களுக்கே வழங்கி உதவியும் வருகிறார்.

உதகையில் பட்பயர் பகுதியை சேர்ந்தவர் தீபா. இவர் தனது கல்லூரி படிப்பை உதகையில் முடித்து விட்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் முதுகலை படித்து வருகிறார். தற்போது கரோனா வைரஸ் தொற்று தடுப்பின் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் உள்ளார். இருந்தாலும் பொழுதை வீணாக கழிக்காமல் அதை பயனுள்ள வகையிலும் மாற்றியுள்ளார். இதன் மூலம் தனக்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் உதவும் வகையில் பள்ளி செல்லாமல் வீட்டிலிருக்கும் ஏராளமான மாணவ, மாணவியரும் பயனடைந்து வருகின்றனர்.

இது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""எனக்கு சிறு வயதிலிருந்தே வீணாக தூக்கியெறியும் பொருட்களை மீண்டும் சேகரித்து அவற்றை பயனுள்ளதாக மாற்றுவது பொழுது போக்காகும். இதைத்தொடர்ந்துதான் தூக்கி எறியப்படும் கண்ணாடி பாட்டில்களை சேகரித்து வைத்து பாட்டில் ஆர்ட் எனப்படும் ஓவியம் கலந்த சிற்பக் கலையை கற்றுக்கொண்டேன். இந்த பாட்டில்களின் மீது கடுகு, மரத்தூள், களிமண், சணல் கயிறு, உல்லன் நூல் ஆகியவற்றைக் கொண்டு வித விதமான உருவங்களையும் உருவாக்குவேன். இது போன்ற சிறந்த படைப்புகளுக்காக நாட்டின் பல்வேறு அமைப்புகளிடமிருந்து இதுவரையிலும் 150-க்கும் மேற்பட்ட பாராட்டு சான்றிதழ்களையும்பெற்றுள்ளேன்.

பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து கல்லூரி படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியிருந்ததால் இந்த கலையை தாற்காலிகமாக விட்டு வைத்திருந்தேன். ஆனால், தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் கிடைத்திருக்கும் இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள முடிவெடுத்தேன். அதைத்தொடர்ந்து பாட்டில் ஆர்ட் கலையை மீண்டும் முழுமையாக மேற்கொண்டு வருகிறேன். பாட்டில் ஆர்ட் மட்டுமல்லாமல் இது தொடர்புடைய மண்டல் ஆர்ட், ஜூட் ஆர்ட், கிளே ஆர்ட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கலைகளின் மூலமும் ஏராளமான படைப்புகளை உருவாக்கியுள்ளேன். அதேபோல, பாசி பயிறு, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பருப்பு வகைகளைக் கொண்டும், உடைந்த கண்ணாடி வளையல்கள் போன்றவற்றைக் கொண்டும் பல்வேறு உருவங்களை உருவாக்கியுள்ளேன். அத்துடன் எனக்கு தெரிந்துள்ள இந்த கலை அம்சங்களை பள்ளி செல்லாமல் வீட்டிலிருக்கும் மற்ற மாணவ, மாணவியருக்கும் இலவசமாகவும் கற்றுத் தருகிறேன். நான் உருவாக்கும் பாட்டில் ஆர்ட் கலை படைப்புகளை வெளி மாநிலங்களைச் சேர்ந்தோர் கூடுதல் விலை கொடுத்து வாங்குகிறார்கள், அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஏழை மாணவ, மாணவியரின் கல்விச் செலவிற்காக உதவி வருகிறேன்'' என்கிறார்.

தீபா உருவாக்கிய கலை படைப்புகளில் புத்தர், விநாயகர், நீலகிரியின் பூர்வீக குடிகளான தோடர் பழங்குடியினரின் குடில், படகர் இன மக்களின் கலாசாரம், இயற்கை காட்சிகள், வன உயிரினங்கள் உள்ளிட்ட ஏராளமானவற்றை உருவாக்கியுள்ளார்.

பொதுமுடக்க காலத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடாமல் தான் கற்ற கலையை பிறருக்கும் கற்றுத் தருவதும், ஏழை பள்ளி மாணவ, மாணவியருக்கு உதவி வருவதும் அனைத்து தரப்பினரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →