வங்க மொழியில் ராமாயணம் படைத்த கவி சந்திராவதி
கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கிழக்கு வங்காளத்தில் உள்ள புலேசுவரம் என்ற அழகிய சிறு கிராமத்தில் கவி வம்சீதாசர் என்ற பிரசித்தி பெற்ற கவிஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மகளாகப் பிறந்தவர
கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கிழக்கு வங்காளத்தில் உள்ள புலேசுவரம் என்ற அழகிய சிறு கிராமத்தில் கவி வம்சீதாசர் என்ற பிரசித்தி பெற்ற கவிஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மகளாகப் பிறந்தவர் சந்திராவதி. ஒரே மகள் தந்தையைப் போன்றே அவரும் கவிதை புனைவதிலும், பாடுவதிலும் சிறந்து விளங்கினார். அந்தக் காலத்தில் வங்காளத்தில் வாழ்ந்த ஆண் கவிஞர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல சந்திராவதி.
சந்திராவதி இயற்றிய பாடல்களின் தொகுப்புதான் "மய்மன்சிங்' பாடல்கள் என்ற நாடோடிப் பாடல் கதைகள். வங்காளத்தில் மிகவும் பிரபலமானவை. அவர் இயற்றிய இந்தக் கவிதைகளில் அடிப்படையாக இருப்பவை காதலும் அதன் துன்ப விளைவுகளும்தான். அவர் இயற்றிய கதைப் பாடல்களில் சிறந்து விளங்கியது திருடன் கேனாராமின் கதை.
கொள்ளைக்காரன் ஒருவன், சந்திராவதியின் தந்தையான வம்சீதாசரின் இனிய பாடல்களைக் கேட்டு மனமுருகித் தீய நெறிகளிலிருந்து விடுபட்டு தானும் ஒரு சிறந்த பக்தனாக மாறிவிடுகிறான். இந்த அற்புத
மான கதைப்பாடலை எழுதியவர் கவி வம்சீதாசரின் மகள் சந்திராவதி. அவர் வாழ்ந்ததே கொஞ்சகாலம்தான் என்றாலும் அவர் எழுதிய நூல்களின் புகழ் இன்றும் மங்காமல் ஒளிர்கிறது.
நிகழ்ச்சிகளை வர்ணிப்பதும், குணசித்திரம் தீட்டுவதும், தங்கு தடையற்ற எளிய நடையும் அவருடைய கவிதையிலுள்ள சிறப்பு அம்சங்களாகும். அவர் எழுதிய "ராமாயணம்', "திவான் பாப்னா', "கேனாராமின் கதை' இவைகளில் இந்த அம்சங்கள் துள்ளி நடை போடுவதைக் காணலாம்.
இளம் வயதில் தந்தை வம்சீதாசரின் பூஜைக்காகத் தினந்தோறும் அவர் பூப்பறிக்க அக்கம் பக்கம் உள்ள தோட்டங்களுக்குச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது ஒருநாள் அவர் ஜயானந்த சக்ரவர்த்தி என்ற அழகிய இளைஞனைக் கண்டார்.
அவனது அழகில் மயங்கினார். கண்டதும் காதல் கொண்டார். அவனும் அவர் மீது மிகுந்த பிரேமை கொண்டான்.
கவி சந்திராவதியும் அவனைப் பார்த்த நாள் முதலாக அவனையே தன் கணவனாக ஏற்பதென்று முடிவு செய்துவிட்டார். அந்த வாலிபக் கவிஞனும் அவரை மணம் செய்து கொள்ள தம் உள்ளக் கருத்தை அவரிடம் தெரிவித்தான்.
சந்திராவதியின் தந்தை ஒருவிதமாக அவருடைய உள்ளக் கருத்தை அறிந்து கொண்டு அவனுக்கே மணம் முடிக்க இசைந்தார். எல்லா ஏற்பாடுகளும் நடந்து.
ஆனால், விதி வேறுமாதிரி நினைத்தது. மணநாளுக்கு முதல்நாள் இரவு ஜயானந்த சக்ரவர்த்தி அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒரு கட்டழகியின் மேல் மோகங்கொண்டு அவளோடு ஓடிப் போய்விட்டதாக செய்தி வந்தது.
கவி சந்திராவதி துடிதுடித்துப் போய்விட்டார். அவருக்கு உலகமே வெறுத்தது. தன் விதியை எண்ணிக் கண்ணீர் வடித்தார். அதன்பிறகு, வேறொரு வரை மணந்து கொள்ள அவர் விரும்பவில்லை. காலம் முழுவதும் கன்னியாகவே இருப்பதாகத் தன் தந்தையிடம் சொன்னார்.
தந்தையும் சரி என்று அவரது முடிவை ஏற்றுக் கொண்டார். அவர் தன் வாழ்நாட்களை அமைதியாகக் கழிப்பதற்காக ஒரு சிறு கோயிலைக் கட்டிக் கொடுத்தார். அதில் அவர் சிவ பெருமானின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்தார். நாளும் மனமுருகி வழிபட்டு வந்தார்.
தந்தை வம்சீதாசரின் கட்டளைப்படி ராமாயணத்தை எளிய நடையில் ஓய்வு நேரங்களில் எழுதி வந்தார். அவருடைய கவிதை வரிகள் எளிய நடையில் எல்லோரும் விரும்பும் வண்ணம் இருந்தது. கவி சந்திராவதியின் புகழ் நாடெங்கும் பரவியது.
சில ஆண்டுகளுக்குப் பின் ஜயானந்த சக்ரவர்த்தி சோகத்துடன் திரும்பிவந்தான். அந்நிய மதத்துக் கட்டழகியிடம் மோகம் தீர்ந்துவிட்டது. "என்னை மன்னித்து ஏற்றுக் கொள். இனி நான் உன் அடிமை' என்று உறுதி கூறித் தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினான்.
சந்திராவதி மணம் இளகினார். தந்தையாரிடம் அவனுடைய வேண்டுகோளைச் சொன்னார். அவன் நடத்தையில் அருவருப்படைந்த அவரது தந்தை மறுத்து விட்டதோடு அவனை விரட்டியும் விட்டார்.
கவி சந்திராவதி நினைவாகவே அவன் பித்துப் பிடித்தவன்போல் அலைந்து திரிந்தான். ஒருநாள் ஆற்றில் விழுந்து உயிர் துறந்தான். அவனுடைய சடலம் ஆற்றில் மிதப்பதைக் கண்ட சந்திராவதி மனம் வெதும்பி மனநோயால் மிக விரைவில் மாண்டு போனார்.
கவி சந்திராவதி இறந்து 400 - ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இன்றும் கிழக்கு வங்காளத்தில் "மய்மன்சிங்' என்ற புகழ்பெற்ற பாடல்களைப் பகலில் ஓய்வு நேரங்களில் பெண்கள் பாடி மகிழ்கிறார்கள்.
கிழக்கு வங்காளத்தில், சந்திராவதி கதை என்று வழங்கும் சோகமயமான ஒரு பாடலை அந்தக் கிராமவாசிகள் திறந்த வெளியில் பந்தலிட்டுப் பக்தி சிரத்தையுடன் கூடிப் பாடுவதை இன்றும் காணலாம். கவிசந்திராவதி தனது கவிதைகள் மூலம் இன்றும் வாழ்ந்து வருகிறார்.