மகளிர்மணி

ஆன்லைன் கல்வி கற்றதும் - பெற்றதும்!

கல்லூரிகள் திறப்பு என்பது மூன்றாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் என்றாகிவிட்டது. பள்ளிகள் திறப்பு பெற்றோர் விருப்பப்படி தள்ளிப்போய்விட்டது.

கோதை ஜோதிலட்சுமி

கல்லூரிகள் திறப்பு என்பது மூன்றாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் என்றாகிவிட்டது. பள்ளிகள் திறப்பு பெற்றோர் விருப்பப்படி தள்ளிப்போய்விட்டது. ஆன் லைன் வகுப்புகள் தொடங்கி நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இந்த சூழ்நிலையை பள்ளிக் கூடங்கள் எப்படி கையாளுகின்றன?

சென்னை அண்ணாநகர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி மேல்நிலைப் பள்ளி முதல்வர் லட்சுமி, எஸ். ஆர். எம் நைட்டிங்கேல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அமுதா மற்றும் விருதுநகர் மாவட்ட கிராமம் ஒன்றில் பணியாற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆகியோர் தங்களது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்:

பள்ளி முதல்வர் லட்சுமி:

ஒரு பள்ளி முதல்வராக தற்போது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

கல்வி என்பது பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என அனைவரின் கூட்டு முயற்சி. நேரடியாக வகுப்புகள் நடக்கும் பொழுது மாணவர்கள் எங்களோடு இருக்கிறார்கள். சில குழந்தைகளின் முகத்தைப் பார்த்தவுடன் எங்களால் இந்த மாணவன் புரிந்து கொண்டு விட்டான் என்றும், சிலருக்கு கற்றுக் கொடுத்தது புரியவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும். அதற்கேற்ப அந்த மாணவன் மீது தனி கவனம் செலுத்துவது சாத்தியமாகும். தற்போது இணைய வழிக் கல்வியில் அது சாத்தியமற்றுப் போகிறது என்பதில் சற்று வருத்தம் இருக்கிறது. அதே நேரத்தில் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்காக நாங்கள் கட்செவி அஞ்சலில் குழு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறோம். மாணவர்கள் ஆசிரியர்களோடு கலந்துரையாடுவதற்கு தேவையான நேரம் தொழில்நுட்ப வசதி ஆகியவற்றை செய்து தருகிறோம்.

இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கிறதா?

இணைய வழிக் கல்வி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் புதிதுதான். தற்போதைய சூழலில் இணையத்தை நம்பியே கல்வி அமைந்திருக்கிறது. இந்நிலையில் வகுப்புகளை எடுப்பது தொடங்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வரை அனைத்தையும் ஆசிரியர்களும் புதிதாகக் கற்றுக் கொள்கிறார்கள். மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கிறார்கள். பெற்றோர்களும் தொழில்நுட்பத்தைத் தேவையான அளவுக்குப் புரிந்துகொண்டு கையாள முன்வந்திருக்கிறார்கள். மூன்று முனைகளிலும் இதற்கான புரிதல் தற்போது சாத்தியப்பட்டிருக்கிறது.

கல்விக் கட்டணம் தொடர்பான விஷயங்கள் எப்படி இருக்கின்றன ?

எப்போதும் போல் இல்லை என்பதை முதலில் ஒத்துக் கொள்கிறோம். 40% கூட முழுமையான கல்விக் கட்டணம் பள்ளிக்குக் கிடைப்பதில்லை. பெற்றோர்களின் நிலையும் சற்றே கவலைக்குரியதாக இருக்கிறது. அதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் கூட மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களைப் பொருத்தவரை எல்லா மாணவர்களுக்கும் சமமாக கல்வி சென்று சேர வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.

ஆன்லைன் தேர்வுகள் எந்த அளவுக்கு ஏற்புடையன?

ஆன்லைன் தேர்வுகளைப் பொருத்தவரை அது மாணவர்களின் கல்வித் திறனை சோதிப்பது என்பதை விட அவர்களின் நேர்மையை சோதிப்பது என்பதாக இப்போது இருக்கிறது. நாங்களும் அதைத்தான் மாணவர்களுக்குத் தொடர்ந்து போதித்து வருகிறோம். தற்போதைய இணையவழிக் கல்வி என்பது மதிப்பெண்களுக்கானதல்ல; கல்வி கற்பதற்கான திறனைத் தக்கவைப்பது, கல்வியின் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துவது, உண்மையோடு எதனையும் அணுகுவது என்ற நெறிமுறைகளை அவர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறோம். மாணவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எங்கள் அனுபவம்.

இணைய வழி வகுப்புகளில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

இணையம் சரிவர கிடைக்காதவர்களுக்கு ஒரு வகுப்பில் தொடர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. சாதாரணமாக வகுப்புகளில் குழந்தையின் புரிதல் மீது எங்கள் கவனம் இருக்கும். தற்போது இணையம் சரியாக இருக்க வேண்டும், குரல் பதிவு சில நேரங்களில் சரியாக இல்லை என்று மாணவர்கள் சொல்லும்பொழுது அதிலே கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தொழில்நுட்ப காரணங்களில் எங்கள் கவனம் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் அது அதிக சிரமங்களைத் தருகிறது. எல்லா குழந்தைகளுக்கும் சரியான இணையத் தொடர்பு இருக்கவேண்டும். அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அவர்களுக்கு வேறு தொந்தரவுகளும் கவனச்சிதறல்களும் இல்லாமல் இருக்கவேண்டும். இவற்றையெல்லாம் நாங்கள் கட்டுப்படுத்த முடியாது.

சில குடும்பங்களில் தாய், தந்தை இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கும்பொழுது மாணவர்கள் எல்லாவற்றையும் தனித்து கையாள வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்தக் குழந்தைகளை எந்த நேரத்திலும் எங்களோடு தொடர்பு கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம். தங்கள் சந்தேகங்களை அவர்கள் எங்களிடம் கேட்டுத் தெளிவு பெறலாம். அவர்களின் மனநிலையையும் புரிந்து கொண்டு நாங்கள் அதற்கும் தீர்வுகளை சொல்லி அந்த மாணவர்களுக்கு வழி காட்டுகிறோம்.

ஆசிரியர் அமுதா:


ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் எப்படி தயாராகிறார்கள்?

சாதாரணமாகப் பாடம் கற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எங்களைத் தயார்படுத்திக் கொள்வதைவிட இன்னும் சற்று கூடுதலாக தயாரிப்பு வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. மாணவர்களோடு கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால் மாணவர்களுக்கு எந்த சந்தேகமும் தோன்றாத அளவுக்கு மிக நுட்பமாக வகுப்புகளை நடத்த வேண்டி இருக்கிறது. அதற்கான தயாரிப்புப் பணிகள் வகுப்பு நேரத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாகவே ஆகிறது.

பெற்றோரின் பங்களிப்பு எப்படி இருக்கிறது?

பெற்றோர் பெருமளவில் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துகிறார்கள். ஆசிரியர்களின் உழைப்பு அதிகரித்திருப்பதைப் போலவே பெற்றோர்களுக்கும் அதிகரித்திருக்கிறது. பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள அவர்கள் எங்களை அணுகுகிறார்கள். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் உடனிருந்து தேவையான தொழில்நுட்ப வசதிகளை செய்து தருகிறார்கள். முதன் முதலாக எழுத்து கற்றுக்கொள்ளும் குழந்தைக்கு நாங்கள் எப்படி எழுத வேண்டும் என்பதை விடியோவில் பதிவு செய்து காட்டுகிறோம். அந்தக் குழந்தையின் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே வழி காட்டுகிறோம். நேரடி வகுப்புகளுக்கு இணையாக.ஆன்லைன் வகுப்புகளை எப்படி நிர்வகிக்கிறீர்கள்?

காலையில் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. மதிய இடைவேளைக்குப் பிறகு நாங்கள் வகுப்புகளுக்கான தயாரிப்பு, தேர்வு நடந்திருந்தால் அதற்கான விடைகளைத் திருத்துவது, மாணவர்கள் செயல் திட்டங்கள் செய்து அனுப்பும் பொழுது அதனை மதிப்பீடு செய்வது என்று பல வேலைகளிலும் ஈடுபடுகிறோம். எப்போதும் போலவே எங்கள் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

அரசு பள்ளி ஆசிரியர்:

கேமரா முன் பாடம் நடத்தும் அனுபவம் எப்படி இருக்கிறது?

முற்றிலும் புதிதுதான். இயந்திரத்தைப் பார்த்துக் கற்றுக் கொடுப்பது ஆரம்பத்தில் கடினமாகவே இருந்தது. நாங்கள் கற்றுக் கொடுத்த பாடத்தைக் கேட்டுப் புரிந்து கொண்டு தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் தெளிவு பெறுவதற்காக அவர்கள் எங்களை அணுகும் பொழுது எங்களுக்குள் ஒரு புதிய பார்வை தோன்றியிருக்கிறது. கேமரா வழியாக மாணவர்களை நாங்கள் அழைக்கிறோம் என்ற புரிதல் எங்களுக்கு ஏற்பட்ட பின் மாணவர்கள் நம்மை கவனிக்கிறார்கள் அல்லது கவனிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்து விடும் பொழுது மாணவர்களிடம் உரையாடுவது போலவே பேசுவது சாத்தியமாகி விட்டது. அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இன்னும் அதிக கவனத்தோடும் நுட்பமாகவும் எங்களைத் தயார் படுத்திக் கொள்கிறோம்.

கிராமப்புற மாணவர்கள் எப்படி ஆன்லைன் வகுப்புகளை எதிர்கொள்கிறார்கள் ?

எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மாணவனை, வீட்டிலும் படித்த பெற்றோர்கள் இல்லாமல் தனித்து செயல்பட வேண்டிய மாணவர்களைப் பற்றித்தான் நாங்கள் கவலைப்படுகிறோம். இணையம் அவர்கள் கைகளில் திறந்து விடப்படும் பொழுது அதனை உடனிருந்து கண்காணிப்பதற்கு அன்றாட கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெற்றோர்களால் இயலாத சூழ்நிலை இருக்கிறது. அப்படியான குடும்ப சூழ்நிலை உள்ள மாணவர்களை நாங்கள் முடிந்தவரை தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்திப் படிக்கத் தூண்டுகிறோம். மாநகரங்களில் இருக்கும் மாணவர்களின் வசதி வாய்ப்புகள் கிராமப்புறங்களில் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இது ஒருபுறம். மற்றொருபுறம், கிராமத்திலும் மாணவர்கள் அரசின் கல்வித் தொலைக்காட்சி வழியாகப் பாடங்களைத் தங்களால் இயன்ற வரை படித்துவிட்டு அதில் ஏற்படும் சந்தேகங்களை எங்களிடம் நேரடியாக தொலைபேசி வாயிலாகக் கேட்டுத் தெளிவு பெறுகிறார்கள். சில பெற்றோர் நேரடியாக பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகள் படிப்பதற்கு தேவையான குறிப்புகளை வாங்கிச் சென்று படிக்க வைக்கிறார்கள். இரண்டுமே இருக்கிறது.
எங்கள் கவலையெல்லாம் இணையம் மாணவர்களின் கவனத்தை திசை திருப்பி விடக் கூடாது என்பது மட்டுமே. அதே நேரத்தில் இன்றைய சூழ்நிலையில் இணையம் மாணவர்களின் கல்வி தொடர்வதற்கு வரப்பிரசாதமாக இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. பள்ளி ஆசிரியர்களும் வீட்டுக்கு வெளியே மற்றுமொரு பெற்றோராக இருந்து தான் குழந்தைகளின் மேம்பாட்டுக்கு உழைக்கிறோம். பலன்கள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வரும் நாள்களில் தான் பார்க்க வேண்டும். விரைவில் இந்த சூழ்நிலை மாறி குழந்தைகள் பள்ளிக்கு வரவேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை ஆக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT