முகப்பு
மகளிர்மணி

இவாங்கா டிரம்ப் பாராட்டிய இந்திய சிறுமி!

கடந்த சில மாதங்களாக, கரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விட கரோனாவுக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:

கடந்த சில மாதங்களாக, கரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விட கரோனாவுக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம். அதிலும் , வேலையிழந்து, வருமானம் இழந்து ஆங்காங்கே சிக்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை படு துயரம். நடந்தாவது தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிடவேண்டும் என்று நடை பயணம் மேற்கொண்ட சம்பவங்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இப்படியான பரிதாப சூழலில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்தான் பீகார் சிறுமி, அவரது தந்தையுடன் சென்ற சைக்கிள் பயணம்.

பீகாரைச் சேர்ந்த மோகன் பாஸ்வான் என்பவர், டெல்லியில் உள்ள குர்கான் நகரில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநராக இருந்தவர். அவருக்கு காலில் காயம் பட்டிருந்ததால், அவருக்கு உதவியாக இருக்க, அவரது மகள் ஊரில் இருந்து வந்து அவருடன் தங்கியிருந்தார். இந்நிலையில் திடீர் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, தொழில் தடைப்பட்டதால் வருமானம் இழந்த அவர் சில நாட்கள் வரை தில்லியிலேயே தனது மகளுடன் காலத்தை கழித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல், சொந்த ஊரான பீகாருக்கே சென்று விடலாம் என்று நினைத்தபோது, போதிய பணம் இல்லாததாலும், வாகனங்கள் எதுவும் செல்லாததாலும், என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார்.

இந்நிலையில், அவரது மகள் ஜோதி குமாரி (15), காலில் காயம் பட்டிருந்த தன் தந்தை மோகன் பாஸ்வானை சைக்கிளில் அமர்த்திக் கொண்டு அங்கிருந்து 1200 கி.மீ சைக்கிளை மிதித்து 7 நாட்கள் பயணம் செய்து, சொந்த ஊரான தர்பங்கா மாவட்டத்துக்கு சென்று சேர்ந்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுக்க பரவ, ஜோதிகுமாரி, பரபரப்பாக பேசப்பட்டார். இதனை அறிந்த, இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு, வரும் காலங்களில் நடைபெறவுள்ள, தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ளவும், பயிற்சி பெறவும், ஜோதிகுமாரிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஜோதிகுமாரிக்கு டிவிட்டரில் பாராட்டு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், ""15 வயதான ஜோதி குமாரி, காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்துக் கொண்டு 7 நாட்களில் 1,200 கி.மீ தூரத்தைக் கடந்து தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளது, அவரது சகிப்புத்தன்மை மற்றும் அன்பையுமே வெளிப்படுத்துகிறது. இந்த அழகான சாதனையே இந்திய மக்களையும், சைக்கிள் பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது'' என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.