2019-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது, 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக, மொழி பெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள கொளக்குடி அரசுப் பள்ளியில், முதுகலை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் ஜெயஸ்ரீ. விருது பெற்றமைக்காக வாழ்த்து கூறி அவரிடம் பேசினேன்.
முதல் முறையாக தேசிய விருது எப்படிப் பார்க்கிறீர்கள்?
ரொம்ப மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான நிகழ்வு இது. முன்பு நான் எழுதிய நாவல்களுக்கு விருது கிடைத்துள்ளது. ஆனால் தேசிய அளவில் விருது அறிவிப்பு என்பது அதிகப்படியான மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இது ஜெயஸ்ரீ என்ற தனிப்பட்ட நபருக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கவில்லை. என்னுடைய "நிலம் பூத்து மலர்ந்த நாள்' புத்தகத்திற்குக் கிடைத்த மரியாதையாகப் பார்க்கிறேன். கேரளாவில் இதுவரை 18 ஆயிரம் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது. ஆனால் நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இரண்டாயிரம் புத்தகம் மட்டுமே விற்பனையானது. ஆனால் அது சென்ற வாசக பரப்பு என்பது மிகவும் வீரியமானதாக இருந்தது.
"நிலம் பூத்து மலர்ந்த நாள்' நாவலை மொழி பெயர்ப்புக்காகத் தேர்தெடுக்க காரணம் என்ன?
ஒரு படைப்பாளிக்கு அடுத்து என்ன என்ற தேடல் எப்போதும் இருக்கும். யாருடைய எழுத்துக்களை தமிழுக்குக் கொண்டு வரலாம். தமிழுக்கு அது தேவை தானா என்று பார்ப்பேன். நான் கேரளாவில் நடக்கும் விழாக்களுக்குச் சென்றால், அங்குள்ள எழுத்தாளர்கள் அவர்களுடைய படைப்புகளை அள்ளிக் கொண்டு வந்து என்னிடம் தருவார்கள். மொழி பெயர்ப்பு செய்து வெளியிடச் சொல்லிச் சொல்வார்கள்.
இப்படியான ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தது. அப்போது தான் எழுத்தாளர் ஜெயமோகன், "என்னுடைய நண்பர் எழுதிய முதல் நாவல் இருக்கிறது. நீங்கள் தமிழ் இலக்கியம் படித்தவர். அந்த நாவல் நீங்கள் மொழி பெயர்ப்பு செய்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்' என்றார்.
அப்படியான அறிமுகமானது தான் "நிலம் பூத்த மலர்ந்த நாள்' நாவல். சங்க கால வாழ்க்கை சார்ந்தது. மொழி பெயர்ப்பிலும் எந்தச் சிக்கலும் இல்லை. மலையாள எழுத்துக்களைப் படிக்கும் போது தமிழ் காட்சியாகக் கண்முன்னே விரிந்தது. 6 மாதம் இந்த நாவலை மொழிபெயர்ப்பு செய்து புத்தகமாக வெளியிட்டேன். அந்த 6 மாதமும் எழுத்தாளர் மனோஜ் குரூர் என்னுடன் தொடர்பில் இருந்தார். அவருடன் கலந்து ஆலோசித்தேன். இது அவருக்கு மிகவும் மனதிருப்தியளித்தது.
மேலும் மலையாளத்தின் மிகச்சிறந்த எழுத்தாளரான, பால் சக்காரியா எழுதிய, "இதுதான் என் பெயர்', "இரண்டாம் குடியேற்றம்'; அல்போன்சம்மாவின் "மரணமும் இறுதிச் சடங்கும்', "யேசு கதைகள்', சாகித்ய அகாதெமியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளேன். சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதிய, "பிரியாணி' எனும் சிறுகதை, "ஒற்றைக் கதவு' எனும் கதை, "கவிதையும் நீதியும்' எனும் சுகதகுமாரியுடனான நேர்காணல், சியாமளா சசிகுமார் எழுதிய "நிசப்தம்', ஏ.அய்யப்பன் எழுதிய, "வார்த்தைகள் கிடைக்காத தீவில்' எனும் கவிதை தொகுப்புகளையும் மொழி பெயர்த்துள்ளேன்.
உங்கள் பார்வையில் மொழி பெயர்ப்பு அன்றும் இன்றும்?
50 - 60 ஆம் ஆண்டுகளில் எல்லா எழுத்தாளர்களும் பெரும்பாலும் மொழி பெயர்ப்பாளர்களாகவே இருந்தார்கள். அதற்கு உதாரணம் தான். க.நா.சு. இதனை இலக்கிய உலகமே அறியும். மொழி பெயர்ப்பு இல்லை என்றால் இலக்கிய வளமே கிடையாது. 22 ஆண்டுகளுக்கு மேலாக மொழி பெயப்பு என்றால் அதனை இரண்டாம் இடமாகத்தான் பார்க்கிறார்கள். புத்தகத் திருவிழாவின் போது மொழி பெயர்ப்பு மட்டும் தேடி கண்டுபிடித்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள். இப்போது இலக்கிய அமைப்புகளும் மொழி பெயர்ப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
பெண் படைப்பாளியாக நீங்கள் கடந்து வந்த பாதை?
என்னுடைய வாழ்க்கை நான் விரும்பியது போல் அமைந்தது. சிக்கல் இல்லாத வாழ்க்கை. என்னுடைய கணவரும் வாசிப்பாளர். நானும் எப்போதும் வீட்டில் புத்தகம் தான் படிப்பேன். என்னுடைய இரண்டு குழந்தைகளும் எங்களைப் போலவே புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். அதனால் என்னுடைய எழுத்துக்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. இது எல்லா பெண்களுக்கும் அமையாது. ஒரு பெண் எழுதுவது அவ்வளவு எளிதான வேலையில்லை. அவர்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. வெளியே வருவதற்கு அதிகம் போராட வேண்டியுள்ளது.
உங்களைக் கவர்ந்த படைப்பாளிகள் பற்றி?
தமிழில் தி.ஜானகிராமன் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர். மலையாளத்தில் பால் சக்காரியா. அவருடைய புத்தகம் 5 தொகுப்பு என்னுடைய மொழி பெயர்ப்பில் வெளிவந்துள்ளது. ஒரு கட்டத்தில் அவர் எனக்கு மேலும் ஒரு அனுமதி தருகிறார். இனி நான் எழுதும் கதைகளைக் கூட ஜெயஸ்ரீ மொழி பெயர்த்துக் கொள்ளலாம் என்கிறார். அந்தளவு அவருக்கு என் மேல் நம்பிக்கை அதிகம்.
இன்றைய இளையதலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்துள்ளதா? அதிகமாகியுள்ளதா?
இன்றைய இளையதலைமுறையிடம் வாசிப்புப் பழக்கமே இல்லை. அரசுப் பள்ளி ஆசிரியையாக இருந்து பார்க்கும் விஷயம் என்னவென்றால், குழந்தை
களின் வாசிப்புக்கு ஒரு குடும்பம் பின்னணியாக இருக்க வேண்டும். என்னுடைய இரு குழந்தைகளுக்கும் வாசிப்புப் பழக்கம் அதிகம். குடும்பச் சூழல் தான் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. வாசிப்பு பற்றிய தூண்டுதலை பள்ளி ஆசிரியர்கள் தான் ஏற்படுத்த வேண்டும்.
நான் ஐந்தாவது படிக்கும் போதே லட்சுமி, சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி கதைகளைப் படிப்பேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போது பெரும்பாலான படைப்பாளிகள் எழுதிய அனைத்துக் கதைகளையும் படித்து முடித்துவிட்டேன். ஆனால் இன்றுள்ள மாணவர்களிடம் பிரபலமான வார இதழ் ஏதாவது ஒன்றின் பெயரை சொல்லி கேட்டால் கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. இது மிகவும் வருத்தமாக உள்ளது. புதிய கல்வித்திட்டம் மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.