முகப்பு
மகளிர்மணி

பி.கே.ரோஸி பிலிம் சொசைட்டி!

1930-ஆம் ஆண்டு. மலையாளத் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆண்டாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

1930-ஆம் ஆண்டு. மலையாளத் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆண்டாகும். மலையாளத் திரையுலகின் தந்தை என குறிப்பிடப்படும் ஜே.சி.டேனியல் தயாரித்து இயக்கிய முதல் மலையாள சமூகப் படமான "விகத குமாரன்' இந்த ஆண்டில்தான் திரையிடப்பட்டது.

இந்தப் படத்தில் நடித்த முதல் கதாநாயகி பி.கே.ரோஸி, நாடக நடிகையும், பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராவர். இவர் இந்தப் படத்தில் உயர்குல இனத்தவராக கருதப்படும் நாயர் சமூகப் பெண்ணாக நடித்திருந்தார். இது நாயர் சமூகத்தினருக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த அவர்கள் ரோஸியையும், குடும்பத்தினரையும் தாக்கியதோடு, அவரது குடிசையையும் தீ வைத்து எரித்தனர். அங்கிருந்து தப்பிய ரோஸி, அதன் பின்னர் எங்கு சென்றார். உயிருடன் இருக்கிறாரா என்ற தகவல் கிடைக்கவில்லை. படத்தையும் திரையிட விடாமல் தியேட்டர்களில் புகுந்து ஆர்பாட்டம் செய்ததால் படமும் திரையிடப்படவில்லை.

காணாமல் போன குழந்தையொன்று பல ஆண்டுகள் கழித்து எதிர்பாராமல் தன் குடும்பத்துடன் இணைவது தான் "விகதகுமாரன்' திரைப்படத்தின் கதையாகும்.

இதில் நடித்த நடிகை ரோஸியும் காணாமல் போய் பல ஆண்டுகள் தேடியபோது, அவரது மரணத்திற்குப் பிறகே அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. திருவனந்தபுரத்தில் ரோஸி வசித்து வந்தபோது, நாடகக் குழுவில் நடித்து வந்தார்.

அப்போது ரோஸியை சந்தித்த ஜே.சி. டேனியல், தன்னுடைய முதல் படமான "விகத குமார'னில் நடிக்க வைத்தார். அந்த நேரத்தில் கேரளாவில் உயர் சமூகத்தினரின் ஆதிக்கம் ஒங்கியிருந்தது.

படத்தில் உயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக, ஒரு பிற்படுத்தப்பட்ட பெண் நடிப்பதா என்ற எதிர்ப்பு பகிரங்கமாகவே வெடித்தது. ரோஸியின் குடும்பம் தாக்கப்பட்டு, அவரது குடிசை தீக்கிரையாக்கப்பட்டது. அங்கிருந்து தப்பிய ரோஸியும், குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் குடியேறி, தங்கள் அடையாளத்தை மறைத்து, வாழ்ந்து இறந்து போனது தெரிய வந்தது.

ரோஸியின் நடிப்புத் திறமையை அறியும் வகையில், அவர் நடித்த "விகதகுமாரன்' படப்பிரதியும் இப்போது இல்லை. அவரைப் பற்றிய நினைவு சின்னமோ, சிலையோ, வீடோ ஏதும் இல்லாததால் 89 ஆண்டுகளுக்கு முன் காணமற்போன ரோஸியை மீண்டும் நினைவுப்படுத்த மலையாள திரையுலகைச் சேர்ந்த பெண்கள், 2019- ஆம் ஆண்டு "உமன்ஸ் கலெக்டிவ் இன் சினிமா' என்ற அமைப்பை கொச்சியில் துவங்கினார்.

இந்த அமைப்பை துவங்குவதற்கு வேறொரு காரணமும் இருந்தது. மலையாள நடிகர் திலீப் மூலம், மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளால், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டி இந்த அமைப்பு உருவானது.

ரோஸியை நினைவூட்டும் வகையில் "பி.கே. ரோஸி பிலிம் சொசைட்டி' என்ற துணை அமைப்பை நிறுவினர். இதில் மலையாளத் திரையுலகில் பணியாற்றும் நடிகைகள், பெண் தொழில் நுட்ப கலைஞர்கள், திருநங்கைகள் என பலரும் உறுப்பினர் ஆனார்கள். பெண்களை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்கள், திரையுலகில் பெண்ணியம் போன்ற கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன.

""இதுபோன்ற பிலிம் சொசைட்டிகளை கேரளா ஏற்றுக் கொண்டாலும், பெண்களுக்குரிய மதிப்பையும், மரியாதையையும் வழங்க தயங்குகிறது. இந்த குறைகளை தீர்க்கவும், பெண்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் இந்த பிலிம் சொசைட்டி அமைக்கப்பட்டது. நீதிக்காக போராடிய பி.கே. ரோஸியை போல், மேலும் பல பெண்கள் தங்கள் உரிமையை இழக்கக் கூடாதென்பது தான் எங்கள் நோக்கம்'' என்று இதன் அமைப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா பத்மினி கூறினார்.

ரோஸியின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத் திரையுலகத்தை சேர்ந்த குன்னுக்குழி எஸ்.மணி என்பவர் புத்தகமாக எழுதி வெளியிட்டதை போல், கே.ஜி. வாழ்க்கை பற்றியும் செலங்காட் கோபால கிருஷ்ணன் என்பவரும், வினு ஆபிராகாம் என்பவரும் எழுதியுள்ளனர்.

இப்புத்தகங்களின் அடிப்படையில் ஜே.சி. டேனியல் வாழ்க்கையை "செலுலாயிட்' என்ற தலைப்பில் இயக்குநர் கமல் தயாரித்து வெளியிட்டார். இதன் பின்னர் "லாஸ்ட் பிலிம்' ( காணாமற்போன படம்) என்ற படத்தை இயக்கிய கே.ஜே. ஜீவா, கூடவே ரோஸியைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

அப்போதுதான் ரோஸியைப் பற்றிய உண்மைகள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த ரோஸி, தன் பழைய வாழ்க்கையை மறைத்து, புதிய பெயருடன் உயர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்து, குழந்தைகளைப் பெற்று வாழ்ந்து இறந்து போனது தெரிந்தது. ரோஸியின் குழந்தைகளோ, பேரக் குழந்தைகளோ ரோஸியின் அடையாளத்தைப் பற்றியோ, அவரைப் பற்றியோ மேற்கொண்டு தகவல்களை கூற மறுத்து விட்டதாக ஜீவா கூறினார்.

மலையாளத் திரையுலகில் ரோஸி மட்டுமே முதலும், கடைசியுமான பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நடிகை என்று கூறிவிட முடியாது. இன்னும் பல பிற்படுத்தப்பட்ட பெண்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து, படங்களில் நடித்து பேரும் புகழுமாக உள்ளனர்.

இதுபோன்ற ஜாதி, மத வேறுபாடுகளை மலையாள திரையுலகம் தவிர்க்க வேண்டுமென்பதுதான் பி.கே.ரோஸி பிலிம் சொசைடியின் நோக்கமாகும். பல நல்ல சமூக கருத்துகளை வெளிப்படுத்த சினிமா ஒரு உதவியாக உள்ளது. இந்த சொசைடியில் திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை.

சமூக உணர்வுள்ள பெண்கள், எந்தத் துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்கள் கருத்துகளைக் கூறவும், செயல்படுத்தும் முறைகளை விளக்கவும் முன்வரும் வகையில் அனைத்துப் பெண்களையும் உறுப்பினர்களாக அழைத்துள்ளோம் என்கிறார் ஜீவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.