பத்ம விருது பெற்ற தமிழக மகளிர்!
இந்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் பல்துறை வித்தகர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் பல்துறை வித்தகர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 119 பேருக்கு 72- ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர். பாடகி சித்ராவுக்கு பத்ம பூஷணும், 105 வயது பாட்டி பாப்பாம்மாள், இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ, விளையாட்டு வீராங்கனை அனிதா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு தொகுப்பு:
பத்ம பூஷண் - பின்னனி பாடகி கே. எஸ். சித்ரா
25ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பல மொழிகளிலும் பாடி மக்கள் மனதில் இடம்பெற்ற "சின்னக்குயில்' சித்ராவுக்கு "பத்ம பூஷண்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நன்றி தெரிவித்து சித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்திய அரசு எனக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது என்னுடைய இசைப்பயணத்தின் 42-ஆவது ஆண்டாகும். இந்த நேரத்தில் கடவுளுக்கும், எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
இது சாத்தியமாக உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசைமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், ஒலிப்பதிவாளர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன். அதேசமயம் இது என்னுடைய ரசிகர்களின் பிரார்த்தனை மற்றும் அன்பாலும் இது சாத்தியமானது. எனக்கு இந்த விருதை அறிவித்த நமது நாட்டிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.
பத்மஸ்ரீ விருதுகள்:
பாம்பே ஜெயஸ்ரீ
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் உறைந்து போனேன். இந்த விருது எனது தயாரின் நீண்டநாள் கனவு. மிகச்சிறு வயிதிலேயே எனக்குள் இசை ஆர்வத்தை ஊட்டியவர் அவர். அடுத்து எனது சகோதரன் அளித்த ஆதரவு. பின்னால் எனது கணவர் மற்றும் மகனின் ஒத்துழைப்பு ஆதரவும்.
இந்த சமயத்தில் நான் நன்றி கூறவும், நினைத்துப்பார்க்கவும் உள்ளவர்கள் எனது குருமார்கள். அவர்கள் அளித்த ஆசி பயிற்சி - அசாத்தியமானது. திரைத்துறையிலும் நான் பாடியிருக்கிறேன். இதன்மூலம் பலரும் என்னை அறிந்திருக்கிறார்கள். பாடல் பாட வாய்ப்பு அளித்த இசை அமைப்பாளர், பாடல் எழுதிய கவிஞர்கள், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இவர்கள் எல்லாம் என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்களாயிற்றே!
செய்தி அறிவிக்கப்பட்டதும் மும்பையிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சங்கர் மகாதேவன் 30ஆண்டுகால நண்பர். இருவரும் சேர்ந்தே இசை பயின்றோம். அவர் என்னை வாழ்த்தினார். மகிழ்ந்து போனேன்; நன்றி சொன்னேன்.
முகம் தெரியாத ரசிகர் ஒருவர் ""ஜெயஸ்ரீ ஒவ்வோர் ஆண்டும் பத்ம விருது அறிவிக்கும்போதும் உங்களது பெயர் வந்திருக்கிறதா என்று பட்டியலில் தேடுவேன். இந்த ஆண்டும் அப்படித்தான். பெயர் இருந்ததும் எனக்கே கிடைத்தது போன்ற மகிழ்ச்சியடைந்தேன்'' என்று குடும்பத்தினர் அனைவரும் 3 வயது, 5 வயது சிறுவர் சிறுமியர் கூட வாழ்த்தியபோது. என் கண்களில் நீர் தளும்பியது. இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்'' என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ.
105 வயது மூதாட்டி பாப்பம்மாள்:
பாப்பம்மாள் பாட்டிக்கு பூர்வீகம். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதி. 1915- ஆம் ஆண்டு பாப்பம்மாள் பிறந்துள்ளார். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். அவரது பாட்டியின் ஆதரவில் வளர்ந்துள்ளார். 20 -ஆவது வயதில் திருமணம் முடிந்துள்ளது. பாப்பம்மாளின் கணவர் ராமசாமி. இவர்களுக்கு குழந்தை இல்லை. அவரது கணவர் ராமசாமி கடந்த 1992 -ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன்பின்னர், சிறு சிறு வேலைகள் செய்து வந்த பாப்பம்மாள் அதில் கிடைத்த வருமானத்தில் விவசாய நிலம் ஒன்றை வாங்கியுள்ளார்.
அது முதல் விவசாயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். எனினும் விவசாயத்தை முறையாக கற்க தமிழக வேளாண் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். பின்னர் இதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராகவும் இருந்தது தனிக்கதை.
105 வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கும் பாப்பம்மாள் பாட்டி இன்றைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல, ஒரு உத்வேகமும் தான். அவரின் இந்த சாதனைகள் காரணமாகத் தான் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாப்பம்மாள் கூறியதாவது:
""மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது. இது தமிழகத்துக்கும், கோவை மாவட்டத்துக்கும் கிடைத்த பெருமை ஆகும். இந்த விருது கிடைத்ததற்கான காரணமே விவசாயம் தான். இதனால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வயது மூப்பு காரணமாக நான் அளவான உணவே எடுத்துக் கொள்கிறேன். தினமும் காலையில் குளித்து விட்டு கடந்த 50 ஆண்டுகளாக வாழை இலையில் தான் சாப்பிட்டு வருகிறேன். அந்த காலத்தில் அனைத்து வேலைகளையும் நாங்களே செய்ததால் எனக்கு எந்த நோயும் வந்ததில்லை. எனக்கு மட்டுமல்ல, எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலோருக்கும்தான். அதனால் கிராமங்களில் மருத்துவமனைகளே இல்லாமல் இருந்தது. அதேபோல நம்முடைய வேலையை நாமே செய்து கொண்டால் உடல் நலத்துடன் வாழலாம்'' என்றார்.