பெண்கள் சக்திக்கு தூண்டுகோல்!
கர்நாடகாவில் சில பகுதிகளில் பெண்களை கடவுளுக்கு நேர்ந்து விடும் செயலை முற்றிலும் தடைசெய்யும் நோக்கத்தோடு 1982- ஆம் ஆண்டு கர்நாடகா அரசு மசோதா ஒன்றை நிறைவேற்றியது.
கர்நாடகாவில் சில பகுதிகளில் பெண்களை கடவுளுக்கு நேர்ந்து விடும் செயலை முற்றிலும் தடைசெய்யும் நோக்கத்தோடு 1982- ஆம் ஆண்டு கர்நாடகா அரசு மசோதா ஒன்றை நிறைவேற்றியது.
இருந்தும் பல்லாரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேல் பெண்களும், சிறுமிகளும் நேர்ந்து விடப்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாழ்நாள் முழுவதும் சமூகத்தின் வெறுப்புணர்வுகளுக்கு ஆளாவதோடு, பாலியல் வன்கொடுமைகளாலும், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்படுவதை இப்பெண்களால் தவிர்க்க முடிவதில்லை. வயதாகும்போது ஆதரவின்றி அரசு அளிக்கும் முதியோர் உதவித்தொகை வாழ்க்கை நடத்த போதுமானதாக இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இப்படி சிறுவயதில் கடவுளுக்காக நேர்ந்து விடப்படும் பெண்களுக்கு மறுவாழ்வளிக்க அரசு பல உதவிகளை செய்ய முன்வந்தது. இந்த இக்கட்டான சூழலிலிருந்து மீண்டு வந்தவர்தான் கன்கெரி வெங்கம்மா. தற்போது 50 வயதாகும் இவர் பத்தாண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது சுயமாக தொழில் ஏதாவது செய்ய வேண்டுமென்று முடிவு செய்தார். தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை வெளிப்படுத்த விரும்பாத வெங்கம்மா, கூடவே தன்னைப் போல் சிறுவயதில் மூடத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளுக்குப் பெண்களை நேர்ந்து விடப்படுவதை எதிர்த்து போராடவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீர்மானித்தார்.
இனியும் இந்த சமூகத்தில் பெண் குழந்தைகளை கடவுளுக்கு நேர்ந்து விடுவதை தடுக்க, தன்னுடன் ஒத்த கருத்துடைய பெண்களை திரட்டி பிரசாரத்தில் ஈடுபட நினைத்த வெங்கம்மா, கூடவே அரசு அளிக்கும் உதவித் தொகையைப் பெற்று பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கையுடனும், கௌரவமாகவும் வாழ 15 பெண்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். அதற்கு "ஊரம்மா தேவி சுயப் பெண்கள் அமைப்பு' எனப் பெயரிட்டார்.
இந்த அமைப்பின் மூலம் சிறிய அளவில், கர்நாடகாவில் "சிக்கி' என்ற பெயரில் பிரபலமான கடலை மிட்டாய் தயாரிக்கும் நிறுவனமொன்றை அமைக்க உதவியையும், ஆலோசனைகளையும் பெற மாவட்ட நிர்வாகத்தை அனுகினார் வெங்கம்மா. மாவட்ட தாதுப் பொருள் நிதியிலிருந்து உதவி கிடைத்ததும் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் வீட்டிலேயே கடலை மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். கடலைமிட்டாய் தயாரிக்க குழுவிலிருந்தப் பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இங்கு தயாரிக்கப்பட்ட கடலை மிட்டாய்களை குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச் சத்தாக விநியோகிக்கவும், அங்கன்வாடி மையங்களில் கொடுக்கும் பொறுப்பையும் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை தயாரிக்கும் கடலை மிட்டாய்களை, இருநாள்களுக்கு ஒருமுறை மாவட்ட நிர்வாகம் வாங்கிச் சென்று பல்லாரி மாவட்டத்தில் உள்ள 200 அங்கன்வாடி மையங்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியது. சிறிய அளவில் துவங்கப்பட்ட தொழில் எப்படி விரிவடைந்தது என்பது பற்றி இனி வெங்கம்மா கூறுவதை கேட்போமா?
""தொடக்கத்தில் நிலக்கடலை. வெல்லம் போன்ற பொருள்களை வாங்கவும், கடலைமிட்டாய் தயாரிக்கவும் மிகவும் சிரமப்பட்டோம். தினமும் 5 கிலோ கடலை மிட்டாய் மட்டுமே தயாரிக்க முடிந்தது. இப்போது நிலக்கடலையை வாங்கி சுத்தம் செய்து வறுத்து உடைத்து வெல்லப்பாகுடன் சேர்த்து தினமும் 15 கிலோ தயாரிக்கும் அளவுக்குத் திறமை பெற்றுள்ளனர். வாரந்தோறும் கிடைக்கும் ரூ.20 ஆயிரம் வருவாயில், செலவு மற்றும் கடனுதவி பெற்றதற்காக செலுத்தும் மாத தவணை போக, உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் 7 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தேவை அதிகரித்துள்ளதால் கடலைமிட்டாய் தயாரிக்க நவீன மெஷின்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உதவியை கேட்டுள்ளோம். இதன்மூலம் கடலைமிட்டாய்களை வெளிமார்க்கெட்டிலும் விற்பனை செய்தால் லாபம் அதிகரிக்கக் கூடும்.
எங்களுடைய சுயமுயற்சியை அறிந்த மாநில அரசு. "ராஜ்யோத்சவா விருது' அளித்து கௌரவித்துள்ளது. இது எங்களுக்கு ஊக்கத்தையும், அங்கீகாரத்தையும் அளித்துள்ளது. மேலும், சில பெண்கள் எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாகவும், சுயமாக வேறு தொழில்களை தொடங்கவும் வழி வகுத்துள்ளது.
கடின உழைப்பின் மூலம் கௌரவமாக சம்பாதிக்கவும், வாழ்வதற்கும் தூண்டுகோலாக இருப்பதாக அவர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது'' என்கிறார் வெங்கம்மா.