கதம்பம்!
தமிழகத்தில் ஆண்களே மெல்லிசைப் பாடல்களின் முகங்களாக உள்ள நிலையில் பெண்கள் இல்லாத குறையைப் போக்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த ரோஜா ஆதித்யா.
மக்கள் பிரச்னையை பேசும் மெல்லிசை!
தமிழகத்தில் ஆண்களே மெல்லிசைப் பாடல்களின் முகங்களாக உள்ள நிலையில் பெண்கள் இல்லாத குறையைப் போக்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த ரோஜா ஆதித்யா.
சமூக, சுற்றுச்சூழல் கருத்துகளைக் கிராமிய மெல்லிசைப் பாடல்களின் வழியாகப் பாடி அவர் வளர்ந்து வருகிறார். ஃபேஸ்புக்கில் "மக்கள்பாட்டு' என்கிற பக்கம் மூலம் மக்கள் பிரச்னைகளை மையமாக்கி இவர் பாடும் மெல்லிசைப் பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றன. இத்துறைக்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு ரோஜா முன்மாதிரியாக இருக்கிறார்.
பாட்டியின் பாராசூட் பயணம்!
சிக்கிம் மாநிலத்தில் 82 வயது மூதாட்டி துக்மித் எலப்சா என்னும் அம்மையார் கடந்த அக்டோபர் மாதத்தில் பாராசூட் மூலம் 20 கி.மீ. வரை வானில் பறந்து அசத்தியுள்ளார்.
மிக அதிக வயதில் பாராசூட் பயணம் செய்த முதல் பெண்மணி தும்மித் எலப்சா என சிக்கிம் பாராகிளைடர் சங்கம் பதிவு செய்துள்ளது.
- தங்க. சங்கரபாண்டியன்
முதல் பெண் தீயணைப்பு வீராங்கனை!
இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீராங்கனை என்ற பெருமைக்குரியவர், ஹர்சினிகன் ஹேக்கர். நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்புப் பணி கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த முதல் பெண் இவர். 2006- ஆம் ஆண்டு இவர் பணியில் இணைந்த குஜராத் மெக்சானா தீயணைப்பு நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில்தான் ஓ.என்.ஜி.சியின் இரண்டாவது பெரிய உற்பத்தி நிலையம் இருக்கிறது.
- கோட்டாறு. ஆ. கோலப்பன்