முகப்பு
மகளிர்மணி

கதை சொல்லும் குறள்- 12: நியாயப்படி  நடக்கட்டும்!

ஸ்வர்ணா,  ""அண்ணா இன்னும் ஒரு பருப்புருண்டையை வெச்சுக்கோங்க'' என்றதும் தணிகாசலம், ""அம்மாடி, வயித்திலே இடம் இல்லையம்மா'', என்று வலது கையை வாழையிலையின் குறுக்கே வைத்துக் கொண்டார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:


ஸ்வர்ணா,  ""அண்ணா இன்னும் ஒரு பருப்புருண்டையை வெச்சுக்கோங்க'' என்றதும் தணிகாசலம், ""அம்மாடி, வயித்திலே இடம் இல்லையம்மா'', என்று வலது கையை வாழையிலையின் குறுக்கே வைத்துக் கொண்டார்.

""டேய், சும்மா அலட்டிக்காதேடா, உனக்கு பிடிக்குமேன்னு தான், உன் தங்கச்சி, காலையிலே பத்துமணிக்கே பருப்பு உருண்டைக் குழம்பைத் தயாரிக்க ஆரம்பிச்சுட்டா'', என்றார் பரமேஸ்வரன்.

தணிகாசலத்திற்குக் கண்கள் கலங்கிவிட்டன. அவரின் மனைவி மீனாட்சி, ஊருக்குக் கிளம்பிப் போய்விட்ட இந்த நான்கு நாளா ஸ்வர்ணா வீட்டில்தான் சாப்பாடு.

தணிகாசலத்திற்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது.  இதுவரை குழந்தை இல்லை. திடீர் என்று மாமியாருக்கு நெஞ்சுவலி என்று தகவல் வர, மீனாட்சி, சிதம்பரத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

ஸ்வர்ணாவும், பரமேஸ்வரனும் கீழ் போர்ஷனில் குடியிருக்க, தணிகாசலம் மேல் மாடியில் வசிக்கிறார். இரண்டு பேருமே குடித்தனக்காரர்கள்தான். வீட்டின் சொந்தக்காரர் அமெரிக்காவில் இருக்கிறார். மாதம் பிறந்தால், கரெக்டாக ஒன்றாம் தேதி வாடகையை வசூலிக்க அவரின் மாமா ஆஜராகி விடுவார்.

ஸ்வர்ணாவும், மீனாவும் நெருங்கிய தோழிகளாக வலம் வந்தனர். ஸ்வர்ணாவுக்கு இரண்டு வயதில்,  அழகுச் சிலையாக அம்ருதா இருந்ததும், மீனாட்சிக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம் என்பதாலும் அடிக்கடி மீனா கீழ் போர்ஷனுக்குச் செல்வது சர்வசாதாரணமாக நிகழ்ந்தது.

பல நேரங்களில் அம்ருதா, மீனாவுடனேயே மேல்மாடியில் விளையாடிக் கொண்டிருப்பாள். எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டுதான் இருந்தது. ஆனால் விதியின் போக்கை யாரால்தான் அறுதியிட்டுச் சொல்லமுடியும்?

தணிகாசலம் ஒரு வழக்கறிஞர். 

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஹைகோர்ட்டில்  சீனியர் வழக்கறிஞராக இருக்கும் வரதராஜனிடம் ஜூனியராகப் பணியாற்றி வருகிறார்.

வரதராஜன் மிகவும் நேர்மையான வக்கீல் என்று பெயர் எடுத்தவர். நீதிமன்றத்தில் தனக்குரிய வழக்கை வாதாடத் தொடங்கினார் என்றால், கண்களைக் கட்டிக்கொண்டு கைகளில் தராசை ஏந்தி நிற்கும் நீதி தேவதையின் மறுஉருவமாக மாறிவிடுவார். அவரிடம் ஜூனியராகப் பணியாற்றுவதையே இளைய தலைமுறையைச் சேர்ந்த வக்கீல்கள் பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள்.

தணிகாசலமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

அதுசரி, தணிகாசலத்திற்கு வந்த சோதனை என்ன?

பெருநகர சென்னை மாநகராட்சியில், சாலைகளைப் பராமரிக்கும் பிரிவில் பரமேஸ்வரன் பணியாற்றி வந்தார். ஒரு டெண்டருக்கு ஒப்புதல் அளிக்க, லஞ்சமாகப் பணத்தைப் பெறும் பொழுது கையும்களவுமாகப் பிடிபட்டிருக்கிறார். சிறை வரை சென்று, தற்காலிகப் பணி நீக்கத்தில் இருந்தார்.

மீனாட்சியும், தணிகாசலமும் கதிகலங்கிப் போனார்கள். ஸ்வர்ணாவின் நிலைமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியப் போவது இல்லை. சதாகாலமும் கண்ணீரில் மூழ்கிப்போய் இருந்தாள். குழந்தை அம்ருதாவை, மீனாட்சிதான் பார்த்துக் கொண்டாள்.

பரமேஸ்வரனைப் பற்றிய செய்திகள், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்ததால், அவர்களால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.

பரமேஸ்வரன், தான் லஞ்சம் கேட்கவில்லை என்றும், சரியான தகுதிகள் இல்லாத டெண்டருக்கு அனுமதி கொடுக்க மறுத்ததால், அதை அனுப்பிய நபர் திட்டமிட்டு, ஒரு உறையில் பணத்தை வைத்து, ஏதோ ஒரு விண்ணப்பத்தைக் கொடுக்க வந்ததுபோல் கொடுக்க, அந்த வஞ்சக செயலை அறியாத நான் அதைக் கைநீட்டிப் பெற்றுக்கொள்ள எத்தனித்தபொழுது பிடிபட்டதாக, தணிகாசலத்திடம் சொல்லிப் புலம்பினார். மேலும் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்,  தணிகாசலம் ஜூனியராகப் பணியாற்றும் சீனியர் வக்கீல் வரதராஜனிடம் வந்திருப்பதாகவும், அவர் தனக்காக வாதாடி, தன்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்க தணிகாசலம் உதவவேண்டும் என்று வேண்டினார்.

தணிகாசலத்தின் நிலை இருதலைக்கொள்ளி எறும்பானது. ஒருபக்கம் உயிர்நண்பன், உடன்பிறவா தங்கையாகப் பாசம் காட்டும் ஸ்வர்ணா, இவன் சொல்வது உண்மையா, பொய்யா? நடுநிலை தவறாத வரதராஜனிடம் பரமேஸ்வரனுக்காக எப்படி சிபாரிசு செய்வது?

இரண்டு நாட்களாக தணிகாசலம் தூக்கத்தைத் தொலைத்தான். பரமேஸ்வரனின் கேஸ் கட்டுகளை ஆராய்ந்த பொழுது, அவன் பக்கம்தான் தவறு நிகழ்ந்திருப்பது புரிந்தது. என்ன செய்வது? நாளைக்கு வழக்கு நீதிமன்றத்தில் நடக்க இருந்தது.

அன்று இரவு மணி பதினொன்று இருக்கும். முன் ஹாலில் தணிகாசலம் அமர்ந்து இருந்தான். மனம் அமைதியை இழந்து இருந்தது. அப்பொழுது...

வெளியே வாயில் கதவு மென்மையாகத் தட்டப்பட்டது.

யார் இந்த நேரத்தில்? குழப்பத்துடன் கதவைத் திறக்க அங்கே ஸ்வர்ணா நின்றுகொண்டிருந்தாள்.

"உள்ளே வாம்மா,' பதற்றத்துடன் அழைத்தான் தணிகாசலம்.

""அண்ணா, அமர்ந்து பேச நேரம் இல்லை. அவர் வெளியிலே போய் இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்''.

""சொல்லும்மா, நான் என்ன செய்யணும்?''

""அண்ணா, கடந்த ஓராண்டுகளாகவே அவருடைய நடவடிக்கைகள் சரியில்லை. வருமானத்துக்கு அதிகமாகத்தான் செலவு செய்தார். ஏது பணம் என்று கேட்டபொழுது, ஏதாவது சாக்குபோக்குச் சொல்லி என்னை சமாதானப்
படுத்தி விடுவார். நானும் சிறிது அசட்டையாக இருந்துவிட்டேன். அதனால்தான் இன்று அவமானப்பட்டு நிற்கிறேன்.

என் கணவருக்காக நீங்கள் சீனியரிடம் பரிந்துரை செய்யவேண்டாம். எல்லாம் நியாயப்படி நடக்கட்டும். அவர் பக்கம் குற்றம் இருந்தால் தண்டனை கிடைக்கட்டும், இல்லை என்றால் எனக்கு பெருமகிழ்ச்சிதான். வருகிறேன் அண்ணா''  என்று கூறிவிட்டு மின்னலென மறைந்துவிட்டாள்.

ஆச்சரியத்தில் அப்படியே உறைந்து நின்றான் தணிகாசலம். ஸ்வர்ணா சென்ற திசையைப் பார்த்து அவன் கைகள்  குவிந்தது. அவன் கண்களுக்கு அவள் நீதிதேவதையின் மறு உருவமாகவே தெரிந்தாள்.

வக்கீல் தொழில் என்பது ஒரு தராசை ஒத்தது. ஒருபக்கம் சாயாமல், தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசைப் போல, நீதிக்குரிய இலக்கணங்களைப் பிடித்து, கொடுக்கப்பட்ட வழக்கை தீர விசாரித்து நீதி வழங்கக் கடமைப்பட்டது. அந்தத் தொழிலின் இலக்கணம் கெடாமல், தன்னையும், சீனியர் வரதராஜனையும் காப்பாற்றிய ஸ்வர்ணாவை அவன் மனம் வாழ்த்தி வணங்கியது.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்  அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.

(குறள்  எண்: 118) 

பொருள் : சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்தக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களைப் பின்பற்றி, ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாகும்.

(தொடரும்)
 

முழு கட்டுரையைப் படிக்க →