இன்றைய சூழலில், இயந்திரகதியான வாழ்க்கையில், புத்தகம் வாசிப்பதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது இணைய வழியில் உலாவும் ஆடியோ புத்தகங்கள். அந்த வகையில், ஆடியோ வடிவிலான கதை சொல்லலில் கைத்தேர்ந்தவர் சென்னையைச் சேர்ந்த தீபிகா. பிரபல எழுத்தாளர்கள் பலரது கதைகளை தன்னுடைய குரலால் விவரித்து, வர்ணணை செய்து அதனை ஆடியோவாக பதிவிட்டு வருகிறார். மேலும், "ஸ்டோரிடெல்' நிறுவனத்தின் வெளியீட்டாளர் மற்றும் நேரேட்டராகவும் உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்..
""பொறியியல் படித்துவிட்டு ஐ.டி துறையில் வேலைப் பார்த்து வந்தேன். ஆனாலும் அதில் மனம் ஒன்றவில்லை. அதனால், அந்த வேலையை விட்டுவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியாரானேன். குழந்தைகளுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வெளியே போய் விளையாடுவதற்கு சுதந்திரம் இல்லை. இதனால், செல்போனும், விடியோ கேம்ஸூம் அவர்களது உலகமாகிப்போனது. அதிலிருந்து அவர்கள் சற்று வெளியே வந்து சுயமாக சிந்திக்க என்ன வழி என்று யோசித்தேன். அதற்காக தொடங்கப்பட்டதுதான் ஜுலா. இந்த ஆப் மூலமாக குழந்தைகள் விளையாடலாம், புத்தகம் படிக்கலாம், ஆடலாம், பாடலாம், கதை சொல்லலாம் என வைத்தேன். இதற்காக, ஒவ்வொரு வாரமும் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு கதை சொல்வேன். அதிலிருந்துதான் கதை சொல்லும் பழக்கம் எனக்குள் உருவானது.
பொதுவாக எனக்கு புத்தக வாசிப்பு ரொம்ப பிடிக்கும். "ஹாரிபாட்டர்' கதையை பல முறை படித்திருக்கிறேன். ஒரு முறை என் தம்பி ஹாரிபாட்டர் கதை ஆடியோ வடிவில் வந்து இருப்பதாக சொன்னான். அப்போதுதான் "ஸ்டோரிடெல்' ஆப் எனக்கு அறிமுகமானது. இந்த ஆப்பில் என்னற்ற ஆங்கில கதைகள் ஒலிச்சித்திரமாக உள்ளன. ஹாரிபாட்டர் கதையை கேட்ட போது, ரொம்பவே பிடித்திருந்தது. அதுபோன்று தமிழில் கதை புத்தகங்கள் இருக்கிறதா என்று தேடியபோது, அவ்வளவாக சுவராஸ்யமாக இல்லை. அப்போதுதான் நல்ல தமிழ் கதைகளை ஆடியோ வடிவில் கொடுக்கலாமே என்ற எண்ணம்வந்தது.
எனவே, "கதை ஓசை' என்ற பெயரில் ஆடியோ புத்தக யுடியூப் சானல் ஒன்றை தொடங்கினேன். ஏற்கெனவே, ஜுலாவில் குழந்தைகளுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஏற்ற இறக்கத்தோடு கதை சொன்ன அனுபவம் இருந்ததால் அது சுலபமாக இருந்தது.
எனவே, கல்கி, புதுமைப்பித்தன் போன்ற நாட்டுடமை பெற்ற எழுத்தாளர்களின் கதைகளை வீட்டிலேயே ரெக்கார்ட் செய்து "கதை ஓசை'யில் அப்லோட் செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழர் ஒருவர் என் கதையை கேட்டு பாராட்டினார். அப்போதுதான் தமிழ் ஆடியோ புத்தகங்களுக்கும் மக்கள் மத்தியில் மார்க்கெட் இருக்கிறது என்பது புரிந்தது. இதனை விரிவுப்படுத்த என்ன வழி என்று யோசித்த போது, ஸ்டோரிடெல் நிறுவனத்துடன் இணைந்தால் என்ன என்று தோன்றியது, அதனால், ஸ்டோரி டேல் நிறுவனத்துக்கு ஒரு ஈமெயில் அனுப்பினேன்.
அவர்கள், "உங்களை போன்றவர்களைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இங்கே ஆலோசகராக வருகிறீர்களா?' என்று பதில் அனுப்பி இருந்தனர். தற்போது, அந்த நிறுவனத்தின் நேரேட்டர் மற்றும் வெளியீட்டாளராகவும் இருக்கிறேன்.
அங்கு என்னுடைய பணி, நல்ல கதைகளைத் தேர்வு செய்து எழுத்தாளரிடம் பதிப்புரிமை பெற்று அந்த கதைகளை ஒலிச்சித்திர வடிவில் வெளியிடுவது. இதற்காக தி.ஜானகிராமனின் "மோகமுள்', அசோகமித்திரனின் நாவல்கள், வரலாறு, மனோத்துவம், திரில்லர், கிரைம் என பல முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்களை ஆடியோவாக வெளியிட்டு இருக்கிறோம்.
முதன் முதலில் கல்கியின் "பொய்மான் கரடு' என்ற கிரைம் நாவலை தான் நான் படித்தேன். கிராமத்து கதை. விவசாயி, அவரின் குடும்பம் என எல்லாருக்கும் குரலை மாற்றி பேசினேன். அதன் பிறகு "பார்த்திபன் கனவு'. அதிலும் ராஜா, இளவரசி, ராணி, படகோட்டி என அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப படித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. இது வரை 25-க்கும் மேற்பட்ட கதைகளை ஆடியோவாக பதிவு செய்துள்ளேன்.
ஒரு கதையைப் படிக்கும்போது, அதில் உள்ள சுவராஸ்யம் குறைந்துவிடாமல் சரியான உச்சரிப்பு மற்றும் மாடுலேஷனோடு படிக்க வேண்டும். அப்போதுதான் கேட்பவர்கள் நம்முடன் சேர்ந்து பயணிப்பார்கள்.
என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், இன்றளவும் புத்தகம் வாசிப்பது பலருக்கும் பிடித்த விஷயமாக இருக்கிறது. மேலும் ஒலிச்சித்திரமாக கதையை கேட்பவர்கள் எழுத்தாளரின் மற்ற கதைகளையும் தேடிப் போய் படிக்கிறார்கள். சிலருக்கு தமிழை சரளமாக படிக்கத் தெரியாது, சிலருக்கு படிப்பதற்கான நேரம் இருக்காது. அவர்களுக்கு எல்லாம் இது ஒரு வரப்பிரசாதம். தன்னுடைய வழக்கமான வேலைகளை செய்து கொண்டே கதையை கேட்கலாம்.
எங்களின் அடுத்த திட்டம் மேலும் பல எழுத்தாளர்களின் கதைகளை ஆடியோ வடிவில் கொண்டு வரவேண்டும். அதே சமயம் ஒலி வடிவத்திற்காகவே கதைகளை எழுதி பதிவு செய்ய வேண்டும் ' என்றார் தீபிகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.