மம்தா என்னும் மாதரசி! 
மகளிர்மணி

மம்தா என்னும் மாதரசி!

அன்றைய கல்கத்தாவின் எளிய குடும்பத்தில் புமாநீஸ்வர் பானர்ஜிக்கும், காயத்ரி தேவிக்கும் மகளாகப் பிறந்த இவர்

முனைவா் ஒளவை அருள்

அன்றைய கல்கத்தாவின் எளிய குடும்பத்தில் புமாநீஸ்வர் பானர்ஜிக்கும், காயத்ரி தேவிக்கும் மகளாகப் பிறந்த இவர் தமது 17ஆம் வயதில் தந்தையை இழந்தார். பள்ளிப்படிப்பு முடித்து, வரலாற்றியியலில் இளங்கலைப் பட்டமும், இசுலாமிய வரலாற்றில் முதுகலைப் படிப்பும் முடித்தவர். கல்கத்தா சட்டக்கல்லூரியில் சட்டமும் பயின்றவர். 

அவருக்கு கல்கத்தா பல்கலைக்கழகம் முதுமுனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறது. 15 வயதிலிருந்தே அரசியலில் பேரார்வம் கொண்ட மம்தா , மாணவர் சங்கத்தில் முதன்மையாகப் பங்கு பெற்று, காங்கிரஸ் கட்சியின் துடிப்பு மிகுந்த எதிர்கால வெற்றிக்கு அடையாளமாக  வீராங்கனையாக வளர்ந்தார். ஆறு உடன்பிறப்புக்களோடு ஆளுமையின் வடிவமாகவே வளர்ந்தார். மோனபாபா என்று பரிவோடு குடும்பத்தில் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

வங்க தேச முதலமைச்சர் மம்தாவின் அன்னையாரின் எளிய இல்லத்திற்கு வருகைப் புரிந்த அன்றைய பிரதமர் வாஜ்பாய், மம்தாவின்  அன்னையார் காயத்ரி தேவியின் காலில் பணிந்து வணங்கினார். அன்றே வாஜ்பாய் மம்தாவை "ஒளிவீசும் உதயதாரகை' என்று பாராட்டினார். மம்தாவின் திறமைகளை முறையாக அளவிடத் தெரியாதவர்களாகவே  அரசியல் கட்சியினர்  இன்றுவரை உள்ளனர்.   

மேற்கு வங்க முதலமைச்சராக  2011 முதல் அரியணையில் வீற்றிருக்கும் அரிமாப் பெண்மணியாக மம்தா அம்மையார் மிளிர்கிறார். திரிணமூல் காங்கிரஸ் மாநில இயக்கத்தை 1998-இல் அவர் தொடங்கியது அனைவரையும் வியக்க வைத்தது. திரிணமுல் என்றால் அருகம்புல்லின் வேர் என்று பொருள். அடித்தட்டு மக்களுக்கு  நன்றாக அறிந்த ஆர்வச்சொல்லாக  அமைந்தது . 
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். தீதி (தமக்கை) என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். 2011-இல் மேற்கு வங்க தேர்தலில் நின்று 34 ஆண்டுகளாக பொது வுடமைக் கட்சியே ஆட்சி செய்து கொடிகட்டிப் பறந்த  அரசைத் தகர்த்தெறிந்து பதவிக்கு வந்தார். 
அதேபோல இம்முறை 2021-இல் மைய ஆளுமை கொண்ட பாரதிய ஜனதா இயக்கத்தின் மிகப்பெரும் வலிமைவாய்ந்த பரப்புரை அணியை முறியடித்து வென்றதைக் கண்டு அகிலமே வியந்துள்ளது. 2011-ஆம் ஆண்டிலிருந்து பவானிப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக பத்து ஆண்டுகளாக வெற்றி பெற்று விளங்குகிறார்.      
 
1984-இல் இந்தியாவிலேயே இள வயது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1991-இல் பிரதமர் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மகளிர்- குழந்தைகள் நல அமைச்சராகப் பணியாற்றினார். விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது அரசு கொள்கையை எதிர்த்துப் பதவியைத் துறந்தார்.

1997-இல் மேற்கு வங்க காங்கிரஸ் உட்கட்சி சிக்கலால், கட்சியை விட்டு விலகி, திரிணமூல் காங்கிரஸ் இயக்கத்தை தொடங்கி 1999-இல் பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ரயில்வே துறை அமைச்சராக அமர்ந்தார்.


ரயில்வே துறையில் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்து, மேற்கு வங்கத்தை  "சுற்றுலா சொர்க்கம்'  என மாற்றிய பெருமையை நாடு நாளும் நினைவுகூர்கிறது. 2011 லிருந்து மேற்கு வங்க முதலமைச்சராக வெற்றி வலம் வருகிறார் . 

மக்களின்  நல்வாழ்வில் பேரார்வம் கொண்டு, இளம்
பிள்ளைவாதத் தடுப்பு நடவடிக்கையிலும் பில்கேட்ஸ்  நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற மாநிலமாக வங்கம் சிறப்படைந்தது.
கொல்கத்தாவில் கடந்த ஈராண்டுகளாக இளம்பிள்ளை வாதத்தால் குழந்தைகள் வருந்தும் நிலையே இல்லை. "இந்தியாவின் தகுதிக்கு மட்டும் இது பொன்சிறகல்ல, உலகிற்கே மாபெரும் மணிமகுடம்' என்று பாராட்டினார் பில்கேட்ஸ். 

2012-இல் புகழ்வாய்ந்த "டைம்' இதழில் 100 பெரும்புள்ளிகளில் ஒருவராக இவர் பெயர் கருதப்பட்டது. உலகப்  பொருளாதாரச் செய்தி மடலில் 50 முக்கியமானவர்களில் ஒருவராக இவரை அமெரிக்கா சித்திரித்துப் போற்றியது. மம்தா மிகச் சிறந்த ஓவியர். அவர் வரைந்த ஓவியம் ஒன்று ரூ.1.5 கோடிக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. 

தமது திரிணமூல் கட்சிக் கொடிக்கு ஆணிவேர் இலச்சினை வரைந்தவரும் இவரே. மேலும் அம்மையார் சிறந்த கவிஞரும் கூட. எளிமையானவர். பகட்டான ஆடை அணிகலன்களை விரும்பாதவர். "தாய், தாய்நாடு, தம்மக்கள்' என்ற புகழ்பெற்ற பொன்மொழித் தொடரை வங்கத்துக்கு வழங்கியவர். மாமணியான இவரை "வங்காள வனிதாமணி'  என்றும் மக்கள் புகழ்ந்து போற்றுகின்றனர்.

எதனையும் உணர்வுமயமாக மேற்கொண்டு பரபரப்பும், துடிதுடிப்பும் காட்டும் மாநிலம் வங்க மாநிலம் என்பதை அனைவரும் அறிவர். "இன்று வங்கம் நினைப்பதைத்தான் நாளை நாடு நினைக்கும்' என்று ஒரு முதுமொழி உண்டு.
நிலக்கரித் துறையின் முதல் பெண் அமைச்சர், வங்க மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் போன்ற பல பெருமைக்குரியவர். 2019-ஆம் ஆண்டு வெளியான வங்காள திரைப்
படமான  "பாகின்' அம்மையாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். மேலும் 32 வங்காள நூல்களையும் 5 ஆங்கில நூல்களையும் எழுதியவர்.

"வாழ்வதற்கான போராட்டம்', "புன்னகை', "இருண்ட எல்லை', "மக்களாட்சிப் படுகொலை', "மறக்க முடியாத நினைவுகள்' ஆகிய ஆங்கில நூல்களின் தலைப்பே நம்மைக் கவர்வதாகும்.

ஐ.நா. சபையில் சிறைச்சாலைகளில் நடக்கும் மரணங்களை எதிர்த்து 1995-ஆம் ஆண்டில் 21 நாள் போராட்டத்தை வழிநடத்தினார். சிங்கூர் நில அபகரிப்பிற்கு எதிராக 26 நாள்கள் இவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் ஒப்பற்றதாகும். 

600 ஏக்கர் நிலத்தில், டாடா நிறுவனம் தொழிற்சாலை அமைத்துக் கொண்டு, 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கு வழங்க  வேண்டும் எனப் போராடி வென்றார். 2016-ஆம் ஆண்டில் பெரும்புகழ் படைத்த துர்கா வழிபாட்டையே நிறுத்தத் தடையுத்தரவிட்டார். இசுலாமியர்களுக்கு பெரிதும் ஆதரவாக இருந்தார். எனினும் நீதிமன்றம்  அந்தத் தடையுத்தரவை நீக்கியது.
வெள்ளை கைத்தறிச் சேலையில் ஹவாய் காலணியில் அங்கும்மிங்கும் ஓய்வின்றி பவனி வரும் எளிமையின் உருவமான மம்தா, ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் -  வீரத்துறவி விவேகானந்தரின் பக்தையும் ஆவார். அளவோடு உண்டு எளிமையாக வாழ்ந்து மக்களுக்குத் தொண்டாற்றி வரும் ஒப்பற்ற தலைவி இவர் என்றால் அது மிகையாகாது.

மம்தா அம்மையார் தம் உடல்நலனில் பெரிதும் ஆர்வம் காட்டுபவர். காலையில் நாற்பது நிமிடங்களுக்கு மேல் நடையோட்ட மின் படிமத்தில் 25 கி.மீ. வேக அளவில் பயிற்சி மேற்கொள்கிறார். அண்மையில் தேர்தலின்போது காலில் அடிபட்டுக் கட்டுப்போட்டிருந்ததால் தள்ளுவண்டியில் அமர்ந்தபடி தேர்தல் பரப்புரையையும் செய்தார். அதனால் ஐந்து கிலோ எடை கூடியது. மருத்துவர் ஆலோசனையின்படி பத்திய உணவையே இப்போது கடைப்
பிடிக்கிறார் .

மேல்சாதி - தாழ்ந்தசாதி என்ற வேறுபாடு வங்கத்தில் இல்லை. முதலாளி - தொழிலாளி , இருப்பவர் - இல்லாதவர் என்ற இரண்டே பிரிவுதான் அங்கே அரசியலில் எப்போதும் கருதப்படுகிறது .

தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவியர் - மாணவர்களுக்கு மம்தா அம்மையார் காட்டிய சலுகைகள் எல்லையற்றவை. தமிழகத்தில் நிறைவேறிய திட்டங்களின் நிழலாகவே பல திட்டங்கள் தீதி ஆட்சியில் செல்வாக்கு பெற்றன. மிதிவண்டியளிப்பு, மடிக்கணினி, சீருடை , மதிய உணவு , வேலைவாய்ப்பு முதலிய திட்டங்கள் மகத்தானவை. 
தாம் கொண்ட கருத்துக்காக எதற்கும் அஞ்சாமல்  - எவரையும் மறுத்து நிற்பது மம்தா அம்மையாரின் திண்மையைக் காட்டுகிறது. 

"வங்கத்தை வாழ்விப்பதுதான் என் நோக்கம்' என்று எப்போதும் மொழிகின்றார்.

வங்க மொழியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்ற அம்மையாருக்கு முழுமையாக இந்தியில் பேச முடியாததைத் தவிர்த்தால், இந்தியாவின் முதன்மையிடத்தைப் பெறுவது எளிது என்று அரசியல் நோக்கர்கள் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் வங்க மாநிலத்தில்தான் வேங்கைப்புலிகள் அதிகம். அதுவும் பெண்புலியின் பெருமிதம் அச்சத்தையும், வியப்பையும் தரும் என்று வனவியலாளர்கள் கூறுவதை இங்கே நினைப்பது பொருத்தமாக இருக்கலாம்.

கட்டுரையாளர்:  இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

SCROLL FOR NEXT