முகப்பு
மகளிர்மணி

பாஸிட்டிவான கதாபாத்திரங்களையே விரும்புவேன்!

சன் தொலைக்காட்யில் ஒளிப்பரப்பாகி வந்த  "அழகு' தொடரில் காவ்யாவாக நடித்தவர்  சஹானா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
பகிர்:


சன் தொலைக்காட்யில் ஒளிப்பரப்பாகி வந்த "அழகு' தொடரில் காவ்யாவாக நடித்தவர் சஹானா. தற்போது "கண்ணான கண்ணே' மற்றும் "தாலாட்டு' ஆகிய இரு தொடர்களில் களம் இறங்கியிருக்கும் இவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"அழகு' தொடருக்கு பிறகு ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தற்போது அதைச் சரி செய்யும் வகையில் 2 தொடர்களில் கமிட் ஆகியிருக்கிறேன். இரண்டிலுமே, இப்போதுதான் எனது கதாபாத்திரம் தொடங்கியிருக்கிறது. அதற்குள் பொதுமுடக்கம் வந்துவிட்டது. எனவே, இப்போது வீட்டில்தான் இருக்கிறோம். பொதுமுடக்கத்திற்குப் பிறகு மீண்டும் நீங்கள் பார்க்கலாம்.

நடிப்புத்துறைக்குள் வந்தது குறித்து?

எனது சிறு வயது முதலே நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், கல்லூரி சேர்ந்தே பிறகே வீட்டில் எனது ஆசையைப் பற்றி கூறினேன். முதலில் மறுத்தாலும், பின்னர் என்னைப் புரிந்து கொண்டு அனுமதி கொடுத்தனர். தற்போது நானும் திரையுலகில் ஒரு நடிகையாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

"கண்ணான கண்ணே' தொடரில் இணைந்தது பற்றி?

"கண்ணான கண்ணே' தொடருக்குள் நான் வந்தது ஒரு கனவு மாதிரிதான் இருக்கிறது. ஒரு நாள் அந்தத் தொடரின் தயாரிப்பு குழுவிலிருந்து போன் செய்து இதில் நடிக்கிறீர்களா என கேட்டார்கள். நான் ஏற்கெனவே இந்த தொடரை பார்த்து வந்ததால், உடனே ஒத்துக் கொண்டேன். தற்போது நாயகன் யுவாவின் அத்தை மகள் அபர்ணாவாக எண்ட்ரி ஆகியிருக்கிறேன். போக போகத்தான் எனது கதாபதாத்திரம் எந்த கோணத்தில் போகும் என்பது தெரியும்.

"தாலாட்டு' தொடர் குறித்து?

"தாலாட்டு' தொடரில் எனது அறிமுக சீன் மட்டும்தான் இப்போதைக்கு வந்திருக்கிறது. இனிமேல்தான் எனது கதாபாத்திரம் முழுமையாக வரும். இதில் ஸ்ருதி அக்காவுக்கு ட்ஃப் கொடுக்கிற பக்கா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளேன். பொதுவாகவே எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரங்களை விட பாஸிட்டிவ்வான கதாபாத்திரங்கள்தான் படிக்கும். அதனால், இது எப்படி வரப்போகிறது என்று பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.

"அழகு' தொடரில் நடித்தது குறித்து?

அழகு தொடரின் காவ்யா கதாபாத்திரம் எனது வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால் இந்தத் தொடருக்கு முன்பு நான் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில்தான் "அழகு' தொடர் வந்தது. அதன் ப்ரோமோ வந்த மறுநாளே வெளியில் எங்குச் சென்றாலும் கேட்க ஆரம்பித்தார்கள். இத்தனைக்கும் தொடர் அப்போது தொடங்கவேயில்லை. அவ்வளவு ரீச் கொடுத்தது. அதிலிருந்து இதுவரை நான் எங்கு வெளியில் சென்றாலும் என்னை காவ்யாவாகத்தான் பார்க்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.