முகப்பு
மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 29:  மனதில் பட்ட சூடு

""கண்மணி, ராசாத்தி சீக்கிரம் எழுந்திரு, நேரத்தோட குளிச்சிட்டுப் புறப்பட்டாத்தான் சித்தப்பா வீட்டுக்குப் பகல் சாப்பாட்டுக்கு முன்னே போகமுடியும்'' என்று தன் ஒரே மகளைக் கொஞ்சி எழுப்பிக் கொண்டு

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
பகிர்:

""கண்மணி, ராசாத்தி சீக்கிரம் எழுந்திரு, நேரத்தோட குளிச்சிட்டுப் புறப்பட்டாத்தான் சித்தப்பா வீட்டுக்குப் பகல் சாப்பாட்டுக்கு முன்னே போகமுடியும்'' என்று தன் ஒரே மகளைக் கொஞ்சி எழுப்பிக் கொண்டு இருந்தார் செல்வகணபதி.

அப்பாவின் கையைத் தள்ளிவிட்டு, திரும்பிப் படுத்து மீண்டும் தூங்கத் தொடங்கினாள் ஜோதி.

""இந்த மாசி வந்தால் பத்து வயசு முடியப்போகுது. இவ வயசை ஒத்தப் பல பெண்பிள்ளைகள் வயசுக்கு வந்துட்டாங்க. இவ என்னடான்னா இன்னும் செல்லம் கொஞ்சிக்கிட்டுத் திரியறா. எல்லாம் நீங்கக் கொடுக்குறச் செல்லம். மணி பதினொன்னாகுது, எப்ப எழுந்து டிபன் சாப்பிட்டு, உங்க தம்பி வீட்டுக்குக் கிளம்பறது''.

""சரி சரி, புலம்ப ஆரம்பிச்சிடாதே. இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே, பள்ளிக்கூட நாட்களிலே காலை ஆறு மணிக்கே எழுந்துடறாதானே. இன்னும் பத்து நிமிஷத்திலே எழுந்து கிளம்பிடுவா. நீ என் தம்பிக்குப் புடிச்ச சாப்பாட்டைச் செஞ்சுட்டியா'' என்று தன் மனைவி சோலையை அதட்டினார் செல்வகணபதி. 

""புளியோதரையும், என் கையாலேயே செஞ்ச ஜவ்வரிசி வடகத்தையும் பொரிச்சி, டப்பாவிலே தனித்தனியாப் போட்டு எடுத்துக்கிட்டேன்.  நேற்றே தயிர் வடையைப் பண்ணி பிரிட்ஜிலே வெச்சுட்டேன். கிளம்பும் சமயத்தில அதை எடுத்துக்கலாம். உங்க தம்பியையும், அவர் குடும்பத்தையும் இங்கேயே சாப்பிடக் கூப்பிட்டு இருக்கலாம்''.

""வழக்கமா ஞாயிற்றுக்கிழமைகளில் அவன் குடும்பத்தோடு இங்கு வந்து போவான்தானே, சில சமயங்களில் சாப்பிடுவான் அல்லது வேறு இடங்களுக்குப் போவதாக இருந்தால் ஒரு மணி நேரம் பேசிவிட்டுப் போய்விடுவான். மூன்று வாரங்கள் அமெரிக்காவுக்கு வேலை விஷயமாகப் போய்விட்டு நேற்றுதான் திரும்பி இருக்கிறான். இந்திய நேர வேறுபாட்டால் பயணக் களைப்பு ஜெட்லேக் இருக்கும், அதான் நாம போகலாம்'' என்றேன்.

""ஆமாம், உங்கத் தம்பி ஜெகதீசனுக்கும், நம்மப் பெண் ஜோதி என்றால் உயிர்தானே. அவருக்கு இரண்டும் ஆண் புள்ளைகளாகப் போய்விட்டது. உங்க அம்மாவுக்கும் நீங்க இரண்டு பேரும் ஆண்பிள்ளைகள்தான். நம் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு ஜோதி, அதனால் எல்லாருக்கும் செல்லம்''.

ஒரு வழியாக ஒரு மணிக்கு செல்வகணபதியின் குடும்பம் கிளம்பி அவன் தம்பியின் வீட்டை அடைந்தது.

""வாங்க அண்ணா, அண்ணி'' என்று ஜெகதீசன் அன்போடு வரவேற்றான். ஜோதி ஓடிச்சென்றுத் தன் சித்தப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

""என் செல்லக்குட்டி, உன்னை நான் மிகவும் மிஸ் பண்ணினேன் தெரியுமா?'' என்று ஜெகதீசன் ஜோதியைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டான்.

""மீனாட்சி'' என்று சோலையுடன் பேசிக்கொண்டிருந்த தன் மனைவியை அழைத்தார் ஜெகதீசன்.

""என்னங்க'',

""உள்ளே நம்ம அறையிலே, ஒரு சிகப்புக் கலர் பெட்டியிலே, அமெரிக்காவிலே இருந்து என் ஜோதிக் குட்டிக்கு  வாங்கி வந்த பரிசுப் பொருட்கள் எல்லாம் இருக்கு, கொண்டு வா'' என்றான்.

""சித்தப்பா, தாங்க்ஸ் தாங்க்ஸ்'' என்று பலமுறை சிலாகித்துச் சொன்னாள் ஜோதி. 

வெகு நேர்த்தியான ஃப்ராக் மூன்று, குழந்தைகள் உபயோகப்படுத்தும் கூலிங்கிளாஸ், வால் டிஸ்னி கேரக்டர்களில் ஒன்றான மினிமவுஸ் பொம்மை ஒன்று, உயர்தரச்  சாக்லேட்டுகள் என்று ஜோதியின் சித்தப்பா கொடுத்த பரிசுப் பொருட்கள் அவளை ஆனந்தத்தில் மூழ்கடித்தன.

""ஜெகதீசா, ஏண்டா இவ்வளவு வாங்கியாந்தே'' என்று செல்வகணபதி தன் தம்பியைச் செல்லமாகக் கடிந்து கொண்டார்.

மீனாட்சியும் தன் பங்குக்குப் பல சுவையான உணவுகளைத் தயாரித்து இருக்க அங்கே ஒரே கூச்சலும், கும்மாளமுமாகச் சாப்பாட்டு மேஜை கலகலத்தது.

பகல் சாப்பாட்டிற்குப் பிறகு பெரியவர்கள் உரையாடிக் கொண்டிருக்க, ஜெகதீசனின் பிள்ளைகள் இருவரும் ஜோதியைத் தங்கள் அறைக்குக் கூட்டிச் சென்று, அமெரிக்காவிலிருந்து தங்கள் தந்தை அவர்களுக்கு என்று வாங்கி வந்த பொருட்களைக் கடை விரித்துக் காட்டினர்.

முத்து ஜோதியை விட இரண்டு வயது மூத்தவன். குமார் அவளைவிட மூன்று வயது இளையவன். முத்துவுக்கு விளையாட்டுத் துப்பாக்கி, வாட்ச், கதைப்புத்தகங்கள் என்று இருக்க குமாருக்கு அதிகமாகக் குழந்தைகள் விளையாடும் பொருட்களும் உடைகளும் இருந்தன.

அதில் அட்டைப்பெட்டி முழுவதுமாக, பலப் பல வண்ணங்களில் கண்களைப் பறிக்கும் கிரிஸ்டல் கோலிக்குண்டுகள் இருந்தன. ஆவலோடு இரண்டு கோலி உருண்டைகளை எடுத்துத் தன் உள்ளங்கைகளில் வைத்து உருட்டிப் பார்த்தாள் ஜோதி. ஜன்னல் வழியாக வந்த சூரியக் கதிர்களின் ஒளி அந்தக் கற்களில் பட்டுப் பல வர்ண ஜாலங்களை அறையின் சுவர்கள் முழுவதிலும் வீசின.

""அம்மாடி, எவ்வளவு அழகு. ஜோதியின் மனதில் அந்தக் கோலிக்குண்டுகளில் சிலவற்றைத் தன் வசமாக்கிக் கொள்ள வேண்டும்'' என்ற ஆவல் எழுந்தது.

""டேய் தம்பி, இதிலே ஒரு நான்கை நான் எடுத்துக்கிடவா'' என்றாள் ஜோதி.

""போடி, நான் தரமாட்டேன். என் அப்பா எனக்குக் கொடுத்தது, உனக்குத்தான் பொம்மை எல்லாம் கொடுத்திருக்காரே'' என்றான்.

அந்தச் சமயத்தில் மீனாட்சி, குமாரை அழைக்க, தன் பரிசுப் பொருட்களைப் பத்திரமாகத் தன் பையில் வைத்து, ஜிப்பைப் போட்டு மூடிவிட்டுத் தன் தாய் அழைத்ததன் காரணத்தை அறிய குமார் ஓடிச் சென்று விட்டான்.

மாலை நான்கு மணிக்கு, காப்பியைக் குடித்துவிட்டுச் செல்வகணபதி தன் மனைவி, மகளோடு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

சித்திரை மாதம் என்பதால் கடுமையான வெப்பம் தகித்துக் கொண்டிருந்தது. தன் படுக்கை அறையில் ஏசியை ஆன் செய்துவிட்டு, அங்கேயே ஜோதியையும் படுக்கச் சொல்லலாம் என்று அவள் அறைக்குள் செல்வகணபதி நுழைந்தார்.

அங்கே தன் கைகளில் மிக அழகான நான்கு கோலிக்குண்டுகளை வைத்துக் கொண்டு, சூரிய வெளிச்சத்தில் அவைகளின் அழகை ஜோதி ரசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். 

""ஜோதி, ஏது இந்தக் கோலிக்குண்டுகள்?'' என்றார்.

அப்பாவின் வரவைச் சிறிதும் எதிர்பாராத ஜோதி திரு திருவென்று முழித்தாள்.
""ஏதுன்னு கேட்கிறேன் இல்லை?'' செல்வகணபதியின் குரல் இடியென முழங்கியது.

""வந்துப்பா'',

""என்ன வந்து போயி, உண்மையைச் சொல்லு. சித்தப்பா உனக்குக் கொடுத்த பரிசுப் பொருட்களில் இவை இல்லையே''.

தன்னுடையத் தவறை அப்பா கண்டுபிடித்து விட்டார் என்றதும் ஜோதியின் கைகள் நடுங்க ஆரம்பித்து விட்டன.

""அப்பா, இது குமார் தம்பியினுடையது. அவனுக்கு ஒரு பெட்டி நிறையக் கோலிக்குண்டுகளைச் சித்தப்பா அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்திருக்கிறார்கள்''.

""அதுசரி, அது எப்படி உன்னிடம் வந்தது?''

""இல்லப்பா, குமாரிடம் நாலு கேட்டேன் தரமாட்டேன்னு சொல்லிட்டு, பிறகு கொடுத்தான்''.

""தரமாட்டேன்னு சொல்லிட்டு எப்படித் தருவான்? நீ முதலில் ஏன் அவனிடம் கேட்டே? உண்மையைச் சொல்லு இல்லை'' என்று ஜோதி, கணக்குப் பாடத்திற்காக உபயோகப்படுத்தும் ஸ்கேலைக் கையில் எடுத்தார்.

அவ்வளவுதான், பெருங்குரல் எடுத்து, ஜோதி கதற ஆரம்பித்தாள், எப்பொழுதும் அன்பே உருவான, தன்னைத் தலையில் வைத்துக் கூத்தாடும் தன் தந்தையின் உருவமா இது? கண்கள் சிவக்க, ருத்திர மூர்த்தியாகச் செல்வகணபதி நின்றிருந்தார்.

""அப்பா என்று ஜோதி திக்கித் திணறினாள். பிறகு மெதுவாகச் சொன்னாள், குமார் தம்பிக்குத் தெரியாமல் எடுத்து வந்தேன்''. உயர்ந்த செல்வகணபதியின் கை தாழ்ந்தது. சத்தத்தைக் கேட்டுச் சிறிது நேரத்திற்கு முன் அங்கே வந்த சோலையும் விஷயம் அறிந்து ஸ்தம்பித்து நின்றாள்.

""இந்தக் கோலிக்குண்டுகளைத் திருடிட்டு வந்திருக்க. அதுக்குமேலே பொய் சொல்லக்கூடத் துணிஞ்சுட்டே.  திருட்டு, பொய்க்கு வழிவகுத்துடுச்சு''

"போ, இந்தக் கோலிக்குண்டுகளை எடுத்துக்கிட்டுப்போய், சித்தப்பாக்கிட்ட கொடுத்துட்டு அவர்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு வா. குமார்கிட்டேயும் நீ செய்த செயலுக்கு மன்னிப்பு கேள்''.

""சரிப்பா என்று வாயிற்படி நோக்கி அழுதுக் கொண்டே ஜோதி செல்ல, நில் காலுக்குச் செருப்பு வேண்டாம் அப்படியே போ'' என்று நான்கு தெருக்கள் தள்ளி இருக்கும் தன் தம்பியின் வீட்டுக்குத் தன் செல்ல மகளை அனுப்பினார் செல்வகணபதி.

அந்த உன்னதமான தந்தைக்குத் தெரியும், அடிப்பதை விட இப்பொழுது ஜோதியின் காலில் ஏறும் சூடு, அவள் மனதில் போட்ட சூடாக, காலங்களை வென்று நின்று இனி இத்தகைய ஈனச்செயல்களைச் செய்ய விடாது.

ஜோதி, நல்லொழுக்கத்தில் இனி ஜோதியாக மிளிர்வாள். ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது.

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
.

(குறள் எண் : 281)

பொருள் :

எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ்வான்.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.