முகப்பு
மகளிர்மணி

வாழ்க்கை பொக்கிஷமானது!

""கும்பகோணம்தான் எனது பூர்வீகம். மூன்று வயதாக இருக்கும்போது  போலியோ பாதிப்பினால் இரண்டு கால்களும் செயலிழந்து போய்விட்டது.

Updated On : 17 செப்டம்பர் 2021, 12:40 pm IST
பகிர்:

""கும்பகோணம்தான் எனது பூர்வீகம். மூன்று வயதாக இருக்கும்போது போலியோ பாதிப்பினால் இரண்டு கால்களும் செயலிழந்து போய்விட்டது. இருந்தாலும்,ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை என்ற குறளுக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறேன். அதில் வரும் ஊக்கம் உடைமை என்ற வரிகள்தான் என்னை இதுவரை ஊக்கப்படுத்தி வருகிறது.

பொதுவாக மாற்றுத்திறனாளியாக இருப்பவர்களிடம் ஒரு அவநம்பிக்கை இருந்துக் கொண்டே இருக்கும். அதிலும் பெண்களாக இருந்தால், கேட்கவே வேண்டாம். ஏதாவது ஒரு கைத்தொழில் கற்றுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார்கள். ஆனால், நாம் அப்படியில்லை, எனக்கு எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும். சோர்ந்து இருப்பது துளியும்பிடிக்காது.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் ஓர் அடி முன்னால் எடுத்து வையுங்கள் என்பார்கள். ஆனால், நான் தினம் தினம் 100 அடிகள் முன்னெடுத்து வைக்கும் முயற்சியை செய்கிறேன். என்னைப் பொருத்தவரை பிறந்துவிட்டோம் ஏதோ வாழ்கிறோம் என்று இருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும் இதுதான் எனது இலக்கு.

Advertisement

Advertisement

கல்லூரி முடித்ததும். அனிமேஷன் துறையில் கொஞ்ச நாள்கள் வேலைப் பார்த்தேன். அதன்பிறகு, திருமணம், குழந்தை என்றானதும் வீட்டிலிருந்தே ஏதாவது செய்து கொள்ளலாம் என்று தோன்ற சுமார் 15 ஆண்டுகளாக ஓவியப் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறேன். தற்போது என்னிடம் 200 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். நான் ஓவியத்தை கற்றப் பொழுதுகளைவிட , தற்போது கற்றதை மற்றவர்க்கு பயிற்றுவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

எனது இந்தக் கலைப்பயணம் கல்லூரியில் இருந்து தொடங்குவதற்கு முக்கியக்காரணம், எனது குருவானவர்கள், மனோகர், மற்றும் ரங்கராஜன் மாஸ்டர் இருவரும்தான் மேம்போக்கான ஓவியங்களை வரையாமல், இயற்கை சார்ந்த ஓவியங்களை வரைந்து எப்படி ஒரு சாதனையாளராக மாற வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக இருந்தார்கள்.

தொடக்கத்தில் உள்ளது உள்ளபடியே, புகைப்படங்கள், கோயில் சித்திரங்கள் போன்றவற்றைதான் அதிகம் வரைந்து வந்தேன். பின்னர், மெல்ல மெல்ல ஆடல் கலை மீது ஆர்வம் அதிகமானது. என்னால் நடக்க முடியாததுக் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். நடனம் மீதும் ஆர்வம் ஏற்பட்டு "ஆடல் கலையில் ஓவியப்பதிவுகள்' என்று ஒரு புராஜக்ட் செய்தேன். அதில் பத்மா சுப்பிரமணியம் தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள பிரபல நடனக்கலைஞர்களின் அறிய அசைவுகள், முத்திரைகள் போன்றவற்றை ஓவியங்களாக வரைந்து கண்காட்சி நடத்தினேன்.

பின்னர், எனக்கு திருக்குறள் ரொம்பப் பிடிக்கும். இதனால் 2002-இல் கலைஞரின் குறள் ஓவியத்தை அடிப்படையாக வைத்து 32 கோட்டோவியங்கள் வரைந்து குடந்தையில் ஓவிய கண்காட்சி நடத்தினேன்.

இப்போது யானை என்னை ஈர்த்து வருகிறது. அதனால், யானையின் பல அசைவுகளை பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறேன். உதாரணமாக, யானை விளையாடுவது, குளிப்பது, கோயிலில் இருந்து நடந்து வெளியே வருவது, பூஜை செய்வது போன்றவற்றை வரைந்து வருகிறேன்.

மேலும், தற்போது கரோனாவினால் ஏற்பட்டிருக்கும் சவாலான வாழ்க்கைச் சூழலை பதிவு செய்யும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். விரைவில் முடித்துவிட நினைத்திருக்கிறேன்.

இதுதவிர, தற்போது மால்கள், ஐ.டி நிறுவனங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேச அழைக்கிறார்கள்.

இதன்மூலம், எந்தவொரு சிக்கலும் இல்லாமல் கிடைத்திருக்கும் நார்மலான வாழ்க்கையை அழகாக ஆக்கிக் கொள்ள தெரியாவிட்டாலும் பரவாயில்லை, அதைப் பாதுகாத்துக் கொள்ள தெரியாமல் தற்கொலை போன்ற முட்டாள் தனமான முடிவுகளை எடுக்கும் பலருக்கும் தன்னம்பிக்கை அளித்து வருகிறேன். ஏனென்றால் நார்மலான வாழ்க்கை கிடைக்காத எனக்குதான் வாழ்க்கைப் எவ்வளவு பொக்கிஷமானது என்பது தெரியும்"" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments