முகப்பு
மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 67: எண்ணப்படியே வாழ்வு!

""ஐயோ, என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே'' என்று கணவனின் உடல் மீது விழுந்து அழுது புரண்டுக் கொண்டிருந்தாள் பாக்கியவதி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
பகிர்:

""ஐயோ, என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே'' என்று கணவனின் உடல் மீது விழுந்து அழுது புரண்டுக் கொண்டிருந்தாள் பாக்கியவதி.
""படுபாவி, வசதியான வீட்டுப் புள்ளைன்னு மயக்கி இழுத்துக்கிட்டு ஓடினியே, இப்ப என்ன ஆச்சி பாத்தியா. பெத்தவங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டா இப்படித்தான்''.
""மனசு கேட்காமக் கடைசியா இவன் முகத்தைப் பார்க்க வந்தேன். இதச் சாக்கா வெச்சி வீட்டுப் பக்கம் வந்துடாதே'' அக்கினியா வார்த்தைகளைக் கொட்டிட்டுப் பாக்கியவதியின் மாமியார் கமலம் சென்று விட்டாள்.
நண்டும் சிண்டுமாய் நான்கு புள்ளைங்க. கடைசியாப் பொறந்த பொட்டைப் புள்ளைக்குப் பத்து மாசம்தான் ஆகுது. மூன்று ஆம்பிளப் பசங்க; இரண்டு வருச இடைவெளியிலே, ஒண்ணும் புரியாம, அம்மா அழறதைப் பார்த்துக் கூடவே அழுதுங்க.
அதில் மூத்த பிள்ளைக்கு வயசு எட்டு; கொஞ்சம் விவரம் புரிஞ்ச வயசு, ""ஏம்மா அப்பா செத்துட்டாரு''ன்னு கேட்குது? என்ன பதில் சொல்வாள் பாக்கியவதி?
ஏழையாகப் பிறந்தது பாக்கியவதியின் துரதிர்ஷ்டமா? கார் ஓட்டுநரின் மகளாகப் பிறந்தாள். தன் ஒரே மகளை அதுவும் தாயை இழந்தவளைப் பாக்கியவதியின் அப்பா சுந்தரம் கஷ்டப்படாமல்தான் வளர்த்தார்.
ஒண்டுக்குடித்தன வீட்டிலும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்தார்கள். சிதம்பரத்தில் மிகப்பெரிய துணிக்கடை கமலத்திற்குச் சொந்தமாக இருந்தது. அவளுடைய இரண்டு பிள்ளைகளில் ஒருவன் டாக்டருக்குப் படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான். இரண்டாவது மகன்தான் முரளி. தன் தந்தையுடன் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டான்.
முரளி பி.ஏ., எம்.பி.ஏ., படித்திருந்தான். ஆண் அழகன், நல்ல அறிவாளி, வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டே போனான். இவர்களுக்கு கார் டிரைவராக சுந்தரம் வேலை பார்த்தார். தன்னுடைய பெண் "பிளஸ் டூ' முடித்ததுமே கமலத்தின் துணிக்கடையில் அவளை விற்பனைப் பெண்ணாக சுந்தரம் அமர்த்தி விட்டார்.
முதலாளி அம்மா கமலத்தின் சிபாரிசின் பேரிலேதான் பாக்கியவதிக்கு அந்த வேலை கிடைத்தது. விதி போட்ட முடிச்சை யாரால் அவிழ்க்க முடியும். முரளிக்குப் பாக்கியவதியின் மீது முதலில் ஈர்ப்பு ஏற்பட்டுப் பிறகு அதுவே ஆழமான காதலாக மலர்ந்தது.
""வேண்டாங்க சார், நான் சொல்வதைத் தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்க, உங்களுக்கும் எனக்கும் ஏணி வெச்சாக்கூட எட்டாது. உங்களுக்கு நான் எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை, தயவு செய்து என்னை மறந்து விடுங்கள்'' என்று பாக்கியவதி, தன் காதலை வெளிப்படுத்திய முரளியிடம் கெஞ்சினாள்.
ஆனால் எதையும் முரளி காதில் வாங்கவில்லை, பெற்றவர்களை எதிர்த்துப் பாக்கியவதியைக் கைப்பிடித்தான்.
ஊரே, ""புடிச்சாலும் புளியங் கொம்பா புடிச்சிட்டா, அவள் அப்பன் சரியாகத்தான் பாக்கியவதின்னு பேரை வெச்சிருக்கான்'' என்று வயிறு எரிந்தது.
முரளி வீட்டை விட்டுத் துரத்தப்பட்டான். குலத்தைக் கெடுக்க வந்த பாதகன் என்று முத்திரை குத்தப்பட்டான்.
குடிசையில் வாழ்ந்தார்கள், ஒரு கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலை பார்த்தான். கை நிறையச் சம்பளம். ஆனால் ஆறு ஜீவன்கள் வாழவேண்டுமே, வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது.
நேற்று வரை, மனநிறைவோடுதான் வாழ்ந்தார்கள். இன்று காலை வேலைக்குக் கிளம்பிப் போனவனை, சாலை விபத்து பலி கொள்ளும் வரை.
இனி அழ பாக்கியத்திற்கு உடம்பில் தெம்பும் இல்லை. கண்களில் கண்ணீரும் இல்லை. அவளின் அப்பா சுந்தரத்திற்கு வயசு அறுபத்து ஐந்து ஆகிவிட்டது. தள்ளாமை, மாப்பிள்ளை போன துக்கம், பெண்ணுக்குத் துணையாக இருந்தாலும் அவளுக்குப் பாரமாக இருக்கக்கூடாது என்று எண்ணினார். ஓட்டுநர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தவர் மீண்டும் வேலையில் சேர்ந்தார். அவர் கொண்டு வந்த வருமானம் ஆறு ஜீவன்களுக்குப் போதுமானதாக இல்லை.
சோர்ந்து கிடந்த பாக்கியவதியின் உள் மனம் ஒருநாள் விழித்துக் கொண்டது. இந்த உலகத்தில் பேரும் புகழோடும் வாழ்வேன், சாதிப்பேன், என் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து உயர்த்துவேன் என்று உறுதி பூண்டது.
பிளஸ் டூ படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்? பாக்கியவதிக்கு நன்றாக சமைக்க வரும். முன்பு அவள் அப்பாவோடு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்தபொழுது, அங்கே பக்கத்துப் போர்ஷனில் குடியிருந்த செட்டிநாட்டுப் பெண்ணிடம் இருந்து பலவிதமான  உணவுகளை சுவையாக சமைக்கக் கற்றிருந்தாள். முரளி கூட அடிக்கடி அவளுடைய சமையலைப் பாராட்டுவான்.
""பாக்கியவதி, இப்படி நாக்குக்கு ருசியான சமையலைச் செய்து நீ பரிமாற, அதை நான் உண்ண, போன ஜென்மத்தில் பெரும் புண்ணியம் செய்திருக்கிறேன்''.
""ஆமாம் நல்ல புண்ணியம் செஞ்சீங்க, பங்களாவில் வாழவேண்டியவங்க, என்னக் கட்டிக்கிட்டு இப்படிக் குடிசையிலே கஷ்டப்படறீங்க'' என்பாள்.
""உன் அன்புக்கும், கை மணத்திற்கும் ஈடு இந்த உலகத்தில் கிடையாது'' என்று கூறி முரளி அவளை அணைத்துக் கொள்வான்.
சிதம்பரம் பஸ்டாண்ட் அருகிலே ஒரு தள்ளு வண்டி, "முரளி டிபன் சென்டர்' என்ற பெயர்ப் பலகையைத் தாங்கி நின்றது.
அம்மாடி, அதைச் சுற்றி அப்படி ஒரு கூட்டம்.
""ஐயா, வரிசையில் ஒழுங்கா நில்லுங்கையா, அப்பத்தானே கேக்கறதை ஒழுங்கா சப்ளை பண்ண முடியும்'' என்று சுந்தரம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இரவு நேரம், சுடச்சுட இட்டிலி, கல்தோசை, செட்டிநாட்டுக் கோழிக் குழம்பு, கறி வறுவல், முட்டை தோசை, சாம்பார், சட்டினி, பொடி தோசை என்று பாக்கியவதி பம்பரமாகச் சுற்றி, வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தாள்.
நேரத்திற்குத் தகுந்தாற்போல அயிட்டங்கள் விற்கப்பட்டன. காலையில் இட்டிலி, பொங்கல், வடை, பகல் நேரத்தில் சாம்பார் சாதம், தயிர் சாதம், பிரியாணி, பச்சடி, கத்திரிக்காய் தொக்கு, மாலை நேரத்தில் பஜ்ஜி, போண்டா, மசால்வடை என்று அந்தச் சின்னத் தள்ளுவண்டிக்குள் அத்தனை வகைகள்.
வீட்டில் சிலவற்றை சமைத்து எடுத்துக் கொண்டு வந்துவிடுவாள். வடை, பஜ்ஜி போன்றவற்றை வண்டியிலேயே தயாரிப்பாள்.
""அந்தச் சிறுக்கி நம்பள அவமானப் படுத்தனும்னே கங்கணம் கட்டிக்கிட்டு அலையறா'' என்றாள் கமலம் கோபமாக.
""யாரைச் சொல்லறே..''
""வேறு யாரைச் சொல்லறேன், பாக்கியவதியைத்தான் சொல்லறேன். ஒரு தள்ளு வண்டியிலே முரளி டிபன் சென்டர்ன்னு போட்டு ஒரு ஹோட்டல் அளவுக்கு நடத்தறாளாம்''.
""அதனால் நமக்கு என்ன கமலம்?'' என்றான் அவள் கணவன் மணிசேகரன்.
""உங்களுக்கு ஒரு கேவலமும் இல்லை. எனக்குத்தான் மானம் போகுது, நம்ம குலப்பெருமை என்ன? இவ இப்படி ரோட்டிலே கடை வெச்சு அசிங்கப் படுத்தறா''.
""பாவம், நாலு புள்ளைங்கள வெச்சிக்கிட்டு அவ என்ன செய்வா? நம்ப பேரப் பசங்களுக்கு உதவலாம்னா கூடாது என்கிறே'' என்று மணிசேகரன் வருத்தப்பட்டார்.
""போய், ரோட்டிலே அவளோடு சேர்ந்து வியாபாரம் செய்யுங்க. இதற்கு ஒரு வழி செய்துட்டேன்''. 
""என்னடி செய்தே?''
""இன்னைக்கு ராத்திரி அந்தத் தள்ளுவண்டியைக் கொளுத்திட  ஆளுங்களைத் தயார் பண்ணி  அனுப்பிட்டேன்''.
""அடிப்பாவி, ஏண்டி இப்படி ஆட்டம் போடறே? கடவுளுக்கே பொறுக்காதுடி''.
""நீங்க வாயை மூடிக்கிட்டு சும்மாக் கிடங்க'' என்று சீறினாள் கமலம்.
சிதம்பரம் சென்றாலே முரளி விலாஸில் சாப்பிடாமல் வரக்கூடாது என்ற நிலை ஏற்பட்டுப் போனது. முரளி விலாஸ் சைவச் சாப்பாடு, முரளி விலாஸ் அசைவச் சாப்பாடு, முரளி ஐஸ்கிரீம் சென்டர், முரளி ஃபாஸ்ட் ஃபுட், முரளி கேட்டர்ஸ் ஃபார் மேரேஜஸ் என்று எங்கும் முரளி எதிலும் முரளி என்றாகிப் போனது.
கடலூர், பாண்டிச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஏன் சென்னையிலும் முரளி விலாஸின் கிளைகள் தோன்றிச் சக்கைப் போடு போடுகிறது.
பாக்கியவதியின் மூன்று ஆண் பிள்ளைகளும், மூன்று வைடூரியங்கள் என்றால் பெண் கோமேதகம்; ஆமாம் வியாபாரத்தை அரும்பாடுபட்டுப் பெருக்கியிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் தன் உழைப்பால் எண்ணியதை முடிக்க வேண்டும் என்ற மன உறுதியால், வைராக்கியத்தால் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது பாக்கியவதி.
பாக்கியவதியின் மாமியார் கமலம், தள்ளுவண்டியை சாம்பலாக்கியதும் அதிலிருந்து பீனிக்ஸ் பறவையைப் போன்று மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்தாள் பாக்கியவதி.
ஒரு சிறு கடையைப் பஜார் அருகிலே திறந்தாள். மீண்டும் அவளுடைய கைப்பக்குவம் கைக்கொடுக்க, கூட்டம் அலைமோதியது. கார், சைக்கிள், ஸ்கூட்டர், பைக் என்று எல்லாவற்றிலும் மக்கள் பயணித்து அவளுடைய கடையை நோக்கிப் படையெடுத்தனர், ருசியாக சாப்பிடுவதற்காக.
இருபத்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த இமாலய வளர்ச்சி, படித்த மக்கள், மருமகள்கள், மருமகன், பேரன் பேத்திகள் என்று இன்று தன்னுடைய மாளிகையில் சிம்மாசனம் போன்ற இருக்கையில் பாக்கியவதி அமர்ந்திருக்கிறாள்.

இன்றும், எழுபது வயதிலும் வியாபாரத்தை மேற்பார்வை இடுகிறாள். பிள்ளைகள், கணக்கு வழக்குகளை அவளிடமே சமர்ப்பிக்கிறார்கள்.
இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா, பாக்கியவதியை, விஷம் போல வெறுத்த கமலம் தன் கடைசி காலத்தில் பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்டு, சீந்துவார் இல்லாமல் கிடந்தபொழுது, அவளைக் கொண்டு வந்து தன் இல்லத்தில் வைத்துக் கடைசிவரை பார்த்துக்கொண்டது, பாக்கியவதியாகத்தான் இருந்தாள்.

பாக்கியவதி மன உறுதிக்காரி மட்டும் அல்ல, நல்ல மனதுக்காரியாகவும் இருந்ததினால் எண்ணியதை எய்தினாள்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.

(குறள் எண்: 666)

பொருள் :

ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →