"உலகிலேயே மிகப்பெரிய வெற்றி உன்னை நீயே வெற்றி கொள்வது தான்' என்றார் மாவீரன் நெப்போலியன். உண்மை. நம்முடைய மனதை வெற்றி கொள்வது சுலபமல்ல. செய்ய நினைக்கும் காரியங்களில் சிறு தடை ஏற்பட்டாலும் சுணங்கிப் போய் செயலைக் கைவிட நினைக்கும் மனதைப் பிடித்து நிறுத்தி தொடர்ந்து முயன்று கொண்டே இருப்பது எளிதானதல்ல.
எந்த ஒரு செயலிலும் இத்தனை நாட்களில்தான் வெற்றி என்ற காலவரையறை ஏதும் கிடையாது. ஆனால், வெற்றிக்கான அடிப்படை சூத்திரம் என்று சொல்வதானால் விடாமுயற்சி என்று சொல்லலாம். விடாமுயற்சியோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவருக்கு எந்த நேரத்திலும் வெற்றி சாத்தியப்படலாம். முடியாது என்று உலகம் கருதும் காரியங்களைக் கூட மீண்டும் மீண்டும் விடாமல் முயற்சி செய்தால் அதனை அடைய முடியும்.
ஓர் இளைஞன், தன் நாட்டில் புகழ்பெற்ற மாபெரும் வீரரிடம் சீடனாக இருந்து போர்க்கலையைக் கற்க வேண்டும் என்று விரும்பினான். கற்றுக் கொள்ளும் ஆர்வம், துடிப்பு எல்லாமும் அவனிடம் அபரிமிதமாக இருந்தன. புறப்பட்டுப் பலநாள் பயணத்துக்குப் பின் மாவீரரை அடைந்து, "ஐயா, என்னை தங்கள் சீடனாக ஏற்க வேண்டும்' என்று வேண்டினான்.
இளைஞனை ஏற இறங்கப் பார்த்தவர், "வெயில் காலம் முடிந்த பிறகு வா' என்று சொல்லிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.
வெயில் காலம் முடிந்த பின் இளைஞன் மீண்டும் பயணம் செய்து வந்து சேர்ந்தான். வீரரோ, "மழைக் காலம் முடியட்டும்' என்று சொல்லிவிட்டார்.
இளைஞன் திரும்பி விட்டான். மழைக்காலமும் முடிந்தது. மீண்டும் குருவின் எதிரில் போய் நின்றான். அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர், "வெயில் காலத்தில் வா' என்றார்.
இளைஞன் வெயில் காலத்திற்காகக் காத்திருந்தான். மீண்டும் வந்து குருவிடம் வணக்கத்துடன் நின்றான்.
"உனக்கு போர்கலையைக் கற்பதற்கான பக்குவம் வந்துவிட்டது. என் மாணவர்களோடு சேர்ந்து கொள்' என்று சீடனாக ஏற்றுக்கொண்டார்.
நம் முன்னோர் தம் அனுபவத்தில், "முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' என்று இதனால் தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். எந்த ஒரு வேலையோ முயற்சியோ தொடங்கும் பொழுது மலைப்பாகத் தெரியலாம். நம் கவனம் மலைக்கும் கலக்கத்தில் நில்லாமல் நம்முடைய முயற்சியில் இருக்குமேயானால் கடினமான வேலைகள் கூட எளிதாகி விடும். தொடர்ந்து நம்முடைய முயற்சியில் மட்டும் மனம் நிற்குமானால் இலக்கு நோக்கிய பயணம் இலகுவாகும். "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்" என்று தெய்வப்புலவர் சொல்லியிருக்கிறார் அல்லவா? தெய்வமே வந்தாலும் ஆகவே ஆகாது, உலகில் இப்படியான செயல் சாத்தியமில்லை என்று சொல்லப்படும் செயல்கள் கூட விடாமுயற்சியின் அளவுக்கு பயன் கிடைத்தே ஆகும் என்றால், பெண்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்களில், துறைகளில் தொடர்ந்து முயன்றால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதில் ஐயமில்லை.
கலை, அறிவியல், அரசியல், இலக்கியம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதிலே வெற்றியாளர்களாக இருப்பவர்கள் எடுத்த எடுப்பில் வெற்றியை சுவைத்தவர்கள் இல்லை. பலமுறை சறுக்கல்களை தோல்விகளை சந்தித்தவர்கள். தோல்வி கண்டு மனம் மயங்காமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தவர்கள் தடங்கல்களைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் நாம் அனைவரும் கேட்ட கதைதான் இது: "பகை அரசனிடம் தோற்று வனத்தில் குகையில் பதுங்கியிருந்த மன்னன் அங்கே, ஒரு சிலந்தி வலைகட்ட முயன்று பலமுறை தவறிய பின்னும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து வலை கட்டும் முயற்சியில் ஈடுபடும்.
இறுதியில் தனக்கான வலையைப் பின்னி முடித்து வலை நடுவில் ஆசுவாசமாக தங்கும். அதைப் பார்த்த மன்னன் தானும் அதே போல முயன்றால் தன் நிலையும் மாறும், வெற்றி சாத்தியமாகுமென முயன்று தன் தேசத்தை மீட்டு மீண்டும் அரசனாவான். இந்தக் கதை விடாமுயற்சியின் சிறப்பை விளக்க சிறு வயதில் சொல்லப்பட்டிருக்கிறது.
"நன்றாக உழைத்துக் கொண்டிரு. உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய் வெற்றி பெறுவதற்கு அவசியம் விடாமுயற்சியும் அதீதமான நம்பிக்கையும் மட்டுமே" என்கிறார் சுவாமி விவேகானந்தர். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. அது ஒரு படிநிலை மட்டுமே. அதைக் கடந்து விட்டால் போதும். இலக்கு புலப்பட்டுவிடும்.
சாதனையாளர்கள் அனைவருமே குறிப்பிடும் விடாமுயற்சி என்ற சூத்திரத்திற்கு நம்மால் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.
பெர்னாட்ஷாவின் வாழ்க்கை துன்பமும் வறுமையும் நிறைந்தது. இருந்தாலும் அவர் ஓர் உறுதியைக் கைக்கொண்டிருந்தார். பசியால் துவண்டாலும் ஒவ்வொரு நாளும் அறிவார்த்தமாக சில பக்கங்கள் எழுதியே தீருவேன்.
என்பதுதான் அது. அந்த எழுத்துகள் அவரை எங்கே சென்று நிறுத்தும் என்ற கற்பனை ஒன்றும் அவருக்கு இல்லை. இது என் முயற்சி தொடர்ந்து நான் அதைச் செய்து கொண்டிருப்பேன் எந்த நிலையிலும் தளர மாட்டேன் என்ற நிலைப்பாடே அவரை உலக அறிஞர்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியது. திறமை, வலிமை, கல்வி, சிந்தனை என ஆற்றல் மிக்க மனிதர்களும் விடாமுயற்சியுடன் இருந்தால் மட்டுமே சிறக்க முடியும்.
முயற்சியைத் தொடங்கும் நேரத்தில் விமர்சனங்கள் எழக்கூடும். பெண்ணால் ஆகக் கூடிய செயலா? வீண் முயற்சி என்றெல்லாம் குரல்கள் எழும். இதெல்லாம் நமக்கு எதற்கு ஒதுங்கிக் கொள்வோமே என்ற சிந்தனைக்கு மட்டும் இடம் கொடுத்துவிடக் கூடாது. தொடர்ந்து முயன்று இலக்கை எட்டிவிட்டால் விமர்சனங்கள் காணாமல் போய்விடுவதோடு விமர்சித்தவர்களே பாராட்டுகளை வழங்கி வெற்றியைக் கொண்டாடவும் வருவார்கள்.
ஆரம்பத்தில் ஆபிரகாம் லிங்கன் "நான் தோல்விகளைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை" என்று பதிவு செய்திருக்கிறார். அதற்காக முடங்கிப் போகாமல் தொடர் தோல்விகளுக்குப் பின்னும் முயன்று வெற்றியை அடைந்திருக்கிறார். ஒரு செயலில் தொடர்ந்து நம் முயற்சியை செலுத்தினால் நம்மையும் அறியாமல் அந்த செயலில் நமக்கு ஆர்வம் ஏற்பட்டுவிடுகிறது. புதிய கோணங்களில் அது பற்றிய சிந்தனை, செயல்படுத்துவதற்கான முறைகள் நமக்கு புலப்படத் தொடங்கிவிடுகிறது. புதிய பாதைகள் தென்படுவதும் புதிய வெளிச்சமும் வெற்றிக்கான சாத்தியங்களை அதிகரிக்கின்றன.
உலக உதாரணங்கள் பல இருந்தாலும் நம் கண்முன் இருக்கும் உதாரணங்கள் இன்னும் நம்பிக்கைக்குரியனவாக இருக்கின்றன.
அருனிமா சின்ஹா உத்தரப்பிரதேசத்தில் பிறந்த பெண். சட்டக்கல்வி பயின்றவர் கைப்பந்து மற்றும் மலையேற்ற வீராங்கனை. தேசிய அளவில் கைப்பந்து வீராங்கனையாக இருந்த அருனிமா ரயில் விபத்தில் தன் இடது காலை இழந்தார். செய்வதறியாது பெற்றோர் தவித்தனர். அருனிமா தளர்ந்து விடவில்லை.
"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்" என்ற வள்ளுவப் பேராசானின் குறளுக்கு உதாரணமாக நிற்கும் பெண்மணி நிற்க இயலவில்லை என்று சோர்ந்து விடுவாளா? மலையேற்றப் பயிற்சிக்குத் தயாரானாள்.
இரண்டு ஆண்டுகள் விடாமுயற்சி தொடர் போராட்டம் அருனிமாவைக் கொண்டு நிறுத்தியது எவரெஸ்ட் மலைச் சிகரத்தில். ஆம், எவரெஸ்ட் மலை உச்சியைத் தொட்ட முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். மாற்றுத் திறனாளி என்றாலும் முயற்சியில் ஜெயித்தார். 2015-ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு விளையாட்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
எவரெஸ்ட்டில் ஏறியதோடும் நிற்கவில்லை. உலகின் உயர்ந்த மலைஉச்சிகளைத் தொட வேண்டும் என்ற அவரது முயற்சி ஆப்ரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பாவின் எல்பராஸ், ஆஸ்திரேலியாவின் கோஸ்கியஸ்க்கோ மலை என்று சாதனைப் பட்டியல் நீள்கிறது.
தன்னைப் போலவே சாதனை படைக்க விரும்பும் சிறுவர் சிறுமியருக்கு வழிகாட்ட விரும்பிய அருனிமா அதற்கென அமைப்பை ஏற்படுத்தித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
தன் முப்பத்தியொரு வயதுக்குள் இத்தனை பெரிய சாதனைகளை அருனிமா நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இந்தியாவின் பெருமையாகவும் அடையாளமாகவும் இன்றைக்கு அறியப்படுகிறார். இந்த வெற்றிகள் அருனிமாவுக்கு சாத்தியமெனில் நமக்கும் சாத்தியமாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.