கதை சொல்லும் குறள் - 70: நெருங்கியும்.. நெருங்காமலும்...
""மாமன்னர் சுந்தர பாண்டியன் வாழ்க! வாழ்க! மாதரசி அங்கையற்கண்ணி வாழ்க! வாழ்க!'' என்று சுற்றியிருந்த மக்கள் கோஷமிட, வேத விற்பன்னர் பூரண கும்பத்துடன்
""மாமன்னர் சுந்தர பாண்டியன் வாழ்க! வாழ்க! மாதரசி அங்கையற்கண்ணி வாழ்க! வாழ்க!'' என்று சுற்றியிருந்த மக்கள் கோஷமிட, வேத விற்பன்னர் பூரண கும்பத்துடன் மந்திரங்களை ஓதி வரவேற்க மன்னர் தன் மனைவியுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார்.
அன்று ஆடி வெள்ளிக்கிழமையின் முதலாம் தினமாக இருந்தது. அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. மீனாட்சி தாயே நல்வாழ்வு அருள்வாயே என்று அனைவர் மனமும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தது.
தீபாராதனை முடிந்ததும், சுந்தர பாண்டியன் புறப்பட்டு நேராகத் தன் கொலு மண்டபத்தை அடைந்தார். அங்கே புலவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் அமைச்சர்கள், நாட்டின் தளபதி மற்றும் மேற்குடி மக்களும் காணப்பட்டனர்.
""அரசே கவியரங்கைத் தொடங்கலாமா?'' என்று அரசவைக் கவிஞர் கடாரன் விநயத்துடன் கேட்க, ""தொடங்கலாம்'' என்று தன் சிம்மக் குரலில் கம்பீரமாகச் சொன்னார் சுந்தர பாண்டியர்.
தன் குரலைச் செருமிக் கொண்டு கடாரன் பேசத் தொடங்கினார்.
""பல தேசங்களில் இருந்து வந்திருக்கும் இளம் கவிஞர்களே உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். சங்கம் வைத்துத் தமிழை வளர்க்கும் பாண்டிய நாட்டில், தமிழ் கவிஞர்களுக்கு இதுபோலப் பல போட்டிகளை வைத்து, சிறந்த கவிஞனைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் கொடுத்துக் கெளரவப்படுத்துவது பாண்டிய மன்னர்களின் பாரம்பரியமாக உள்ளது. அத்தகைய உயர்ந்த குலத்தில் தோன்றிய நம் மன்னர் சுந்தர பாண்டியர் இன்று இந்தக் கவி அரங்குக்குத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வது நம் பாக்கியம். இன்று மன்னர் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதையின் தலைப்பு "வானமும் வசப்படுமே' என்பதாக இருக்கிறது. இங்கே கவிதைகளை இயற்றி, அதை அர்த்தத்தோடு விளக்க வேண்டும். சிறந்த கவிதைக்கும் அதை இயற்றிய கவிஞருக்கும் ஆயிரம் பொற்காசுகளும் இருபத்து ஐந்து காணி நிலமும் பரிசாக வழங்கப்படும்'' என்று கூறி அமர்ந்தார்.
பல கவிஞர்கள் வானமும் வசப்படுமே என்ற தலைப்பில் கவிதைகளை இயற்றிப் பாட ஆரம்பித்தனர். எல்லாக் கவிதைகளையும் சுந்தர பாண்டியன் கேட்டான்; ஏனோ அவன் மனதிற்கு நிறைவு வரவில்லை. யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பினான். மன்னன் சுந்தர பாண்டியனே ஒரு சிறந்த கவிஞன். தமிழில் புலமை மிக்கவன். அவனுடைய பொழுதுபோக்கே கவிதைகளை இயற்றுவதாக இருந்தது.
""மாமன்னருக்கு வணக்கம். என் பெயர் ஆலவாயன். என் பூர்வீகம் அத்தியம்பட்டி கிராமம். மதுரை மாவட்டத்தில்தான் உள்ளது. எனவே நான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன். இதோ என் கவிதையைக் கூறுகிறேன்'' என்று ஆலவாயன் சொல்ல ஆரம்பித்தான்.
தங்கு தடையில்லாத தூய தமிழில் இலக்கணப் பிழை இல்லாமல், சொற்களை அழகுற, பொருள்பட அடுக்கி, கேட்பவர் சிந்தை மகிழக் கூறினான்.
இதைக் கேட்ட சுந்தர பாண்டியன் ""பேஷ், பேஷ்'' என்று தலையசைத்துப் பாராட்டினார். முடிவைச் சொல்லவும் வேண்டுமோ, ஆலவாயனே முதல் பரிசைத் தட்டிச் சென்றான்.
ஆலவாயரை, சுந்தர பாண்டியர் வெகுவாகப் பாராட்டி அவனை அரசவைக் கவிஞர்களில் ஒருவனாக அமர்த்திக் கொண்டார்.
ஆலவாயனுக்கும், சுந்தர பாண்டியருக்கும் ஏறக்குறைய ஒத்த வயதாகத்தான் இருந்தது. கவிதைகளை பரிமாறிக் கொள்வதில் தொடங்கிய நட்பு, பிறகு வலுவடைந்தது. இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, உலாவச் செல்லும் பொழுது சேர்ந்து செல்வது, ஏன் வேட்டைக்குக் கூட ஆலவாயன் இல்லாமல் சுந்தர பாண்டியன் செல்வதில்லை என்ற நிலை ஆகிப்போனது.
ஆலவாயன், மாமன்னர் சுந்தர பாண்டியனுடன் தனக்கு ஏற்பட்டிருக்கும் நட்பைப் பற்றிச் சிலாகித்து தன் தந்தையுடன்பேசிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான்.
""ஆலவாயா''
""என்ன தந்தையே?''
""மாமன்னருடன் உனக்கு ஏற்பட்டிருக்கும் நெருங்கிய நட்பை எண்ணிப் பெருமைப்படாதே. நீ வெகு ஜாக்கிரதையாக மன்னருடன் பழக வேண்டும்''.
""ஏன் இப்படிக் சொல்கிறீர்கள் தந்தையே?''
""முடி மன்னருடன் பழகுவது நெருப்பில் குளிர் காய்வதைப் போல; அதிகமாக நெருங்கினால் தீக்காயம் நிச்சயம்''.
""தந்தையே, வீண் கற்பனையில் ஈடுபட்டு உங்கள் மனதைப் புண்படுத்திக் கொள்ளாதீர்கள். என்னை தன் உடன்பிறந்தவனாக மன்னர் சுந்தர பாண்டியன் நடத்துகிறார்''.
""நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன் பிறகு உன் இஷ்டம். கவனமாக நடந்துக் கொள்''.
அன்று முழு பவுர்ணமி. நடு வானில் சந்திரன் தன் வெள்ளிக் கதிர்களை வீசி வைகை நதியை வெள்ளி நதியாக ஆக்கி இருந்தாள்.
""ஆலவாயா இதோ இந்த நிலவு பற்றியும், உருக்கிய வெள்ளியாக ஓடும் வைகையை இணைத்து நீயும் நானும் கவிதைகளை இயற்றுவோம், சரிதானே''.
""சரி மன்னவா''.
இப்படி இருவரும் கவிதைகளை இயற்றி ஒருவருக்கு ஒருவர் பரிமாறி மகிழ்ந்தனர்.
இரவு நடு ஜாமத்தைத் தாண்டிவிட்டது ""ஆலவாயா, இன்று நீ ஏன் அரண்மனையிலேயே தங்கக் கூடாது''.
""உங்கள்
இஷ்டம் என் பாக்கியம்'' என்று ஆலவாயன் மகிழ்ச்சியுடன் கூறினான்.
மறுநாள் பொழுது விடிந்தது. மன்னர் சுந்தர பாண்டியன் முடி திருத்தம் செய்து கொள்ள அமர்ந்திருந்தான்.
நாவிதன் தங்கக் கிண்ணத்தில் நீரை ஏந்தி, தங்கக் கத்தியைக் கொண்டு படு ஜாக்கிரதையாக அதே சமயம் லாகவமாக சுந்தர பாண்டியனுக்கு முடி திருத்திக் கொண்டிருந்தான்.
அருகில் ஒரு மேடையில் அமர்ந்து ஆலவாயன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
""ஆலவாயா நேற்று இரவு நீ கூறிய ஒரு கவிதையில் பொருள் குற்றம் ஒன்று இருந்தது'' என்றார் சுந்தரர்.
""மன்னா, என் கவிதையில் என்றுமே பொருள் குற்றம் இருக்காது. நீங்கள் தவறுதலாகக் கணித்திருக்கிறீர்கள்'' என்றான் ஆலவாயன்.
சடக் என்று சுந்தர பாண்டியன் உள்ளத்தில் சினம் மூண்டது.
அதே சமயத்தில் அவர் உடம்பில் ஏற்பட்ட சிறு அசைவினால், நாவிதன் கையில் இருந்த கத்தி பட்டு அவர் கன்னத்தில் சிறிது ரத்தம் கசிந்தது.
""டேய் உனக்கு என்ன தைரியம்? அரசன் என்ற பயம் போய்விட்டதா? யார் அங்கே? இவனை இழுத்துச் சென்று ஐந்து சவுக்கடிகள் கொடுங்கள்'' என்று கர்ஜித்தார் சுந்தரர்.
""ஐயோ பாவம், இதற்குப் போய் சவுக்கடியா, உங்களுக்கு எத்தனையோ வருடங்களாகப் பணிவிடை செய்கிறான்'' என்று ஆலவாயன் கூற,
சுந்தர பாண்டியன் கோபம் ஆலவாயன் மீதும் பாய்ந்தது. எவ்வளவு திமிர்? என்னை மீறி பேசுகிறானா? மறுகணம்
""யார் அங்கே? நாவிதனை விடுவித்து விடு. ஆலவாயனை அதற்குப் பதிலாக இழுத்துச் சென்று, இருபது சவுக்கடிகளை அவனுக்கு வழங்குங்கள். இது மன்னனின் ஆணை'' என்றார்.
ஆலவாயனின் முதுகு பழுத்துப் போனது, இப்பொழுதுதான் தந்தை சொன்ன அறிவுரை உரைத்தது.
அகலா(து) அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
(குறள் எண்: 691)
பொருள் :
முடி மன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வது போல அதிகமாக நெருங்கிவிடாமலும் அதிகமாக நீங்கி விடாமலும் இருப்பார்கள்.
(தொடரும்)