உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 9: பலம் பெறுவோம் வாருங்கள்!
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு எதிலும் நாட்டம் இல்லை.
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு எதிலும் நாட்டம் இல்லை. அவனுடைய தந்தை அவனை பக்கத்துத் தீவில் இருக்கும் சிற்பக்கூடத்தில் சேர்ந்து சிற்பியாகப் பயிற்சி பெற்று வா என்று அனுப்பி வைத்தார். இளைஞனும் வேண்டா வெறுப்போடு சென்றான். அந்தத் தீவுக்குப் பெயரே சிற்பத் தீவு. அங்கே ஓயாமல் சிற்பம் செதுக்கும் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும். அதிலெல்லாம் இவனுக்கு ஒன்றும் விருப்பம் இல்லை. என்றாலும் அன்றாடம் ஆசிரியர் சொல்லித்தருவதைக் கேட்டாக வேண்டும் சொன்னதைச் செய்தாக வேண்டும். வேறு வழியின்றி சிற்பக்கலையைப் படித்துக் கொண்டு வந்தான்.
எல்லா மாணவர்களும் சிற்பக்கூடத்தில் புதிது புதிதாக மற்ற மாணவர்களின் கற்பனையில் தோன்றும் வடிவங்களை சிற்பமாக வடித்து வைத்திருப்பதைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இவனுக்கோ சிற்பக்கூடத்துக்குள் அடைந்து கிடைப்பதிலும் விருப்பம் இருப்பதில்லை. கடற்கரையில் உலவப் போய்விடுவான். கடற்கரையில் அமர்ந்துகொண்டு மணல்வீடு கட்டி ரசிப்பான். சில நேரங்களில் காற்றுவாங்கிக் கொண்டு நேரம் போவதே தெரியாமல் காலாற நடந்து கொண்டிருப்பான்.
அப்படி ஒரு நாள் கடற்கரைக்கு அவன் வந்த பொழுது புதிதாக ஒரு கப்பல் அங்கே நின்று கொண்டிருந்தது. வித்தியாசமான வடிவத்தில் கப்பல் இருந்தது. அந்தக் கப்பலை சுற்றிப்பார்க்க வேண்டுமென இவனுக்கு ஆசை. கப்பலில் ஏறிவிட்டான். உள்ளே சுற்றிப்பார்த்தான். அற்புதமான பொருள்கள் குவிந்து கிடந்தன. இதுவரை அவன் கண்டிராத மணிகளும் பொன்னும் ஓர் அறையில் இருந்தன. கப்பல் பல தளங்கள் கொண்டதாக இருந்தது. பார்க்கப் பார்க்க ஆவல் மிகுந்தது. திடீரென அவனுக்கு ஓர் உணர்வு. கப்பல் நகர்கிறதோ என்று தோன்றியது.
ஆம். உண்மை தான். கப்பல் கரை தெரியாத தூரத்திற்கு நகர்ந்திருந்தது. பயத்தில்," ஐயோ என்னைக் காப்பாற்றுங்கள். நான் தீவைச் சேர்ந்தவன்.
கப்பலில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். என்னைக் கரையில் விட்டுவிடுங்கள்" என்று பலம் கொண்டமட்டும் கத்தினான். அவனது கூக்குரலைக் கேட்டு அங்கே எமகிங்கரனைப் போல ஒருவன் வந்தான். ஐயா, என்னை கரையில் விடுங்கள் என்று மன்றாடினான். கப்பலில் இருந்த மற்றவர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் பேச்சிலிருந்த்து அவர்கள் கடல் கொள்ளைக்காரர்கள் என்ற உண்மை இவனுக்குப் புரிந்துவிட்டது. தங்களை யார் என அடையாளம் தெரிந்து கொண்டவனை அவர்கள் விட்டுவிடுவார்களா? ஓர் அறையில் அடைத்து வைத்தார்கள்.
கப்பல் ஒரு நாள் கரை ஒதுங்கியது. அங்கே திரளான வீரர்கள் புகுந்து இந்தக்கப்பலில் இருப்பவர்கள் அனைவரையும் வாள் முனையில் சிறைப்படுத்தினார்கள். அந்த நாட்டின் அரசன் முன் கொண்டு நிறுத்தினார்கள். அரசன் கடற்கொள்ளையர்களால் தன்நாட்டு வியாபாரிகளுக்கும் தங்கள் நாட்டிற்கும் நேர்ந்த இழப்புகளையும் கஷ்டங்களையும் மனதில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதித்தான். அப்போது இளைஞன்," அரசே நான் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன் இல்லை. நான் ஒரு சிற்பி. இவர்களிடம் சிக்கிச் சிறைப்பட்டிருந்தேன். என்னை விட்டுவிடுங்கள்" என்று மன்றாடினான். இதில் அரசருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
அரசரின் அன்னை அந்த நேரத்தில் அரசவைக்கு வந்தார். கடற்கொள்ளையர்களுக்கு மரணதண்டனை வழங்கப் பட்டிருப்பதைக் கேட்டு, "நம் குலதெய்வத்திற்கான திருவிழா நடப்பதால் இன்றைக்கு வேண்டாம், திருவிழா முடிந்த பின் மரண தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று சொல்லிவிட்டார். கடற்கொள்ளையர்களோடு இளைஞனும் சிறையில் அடைக்கப்பட்டான். சிறை அதிகாரியிடம் புலம்பி அழுதான். சிறை அதிகாரி, " உன்னை நிரூபித்துக் கொள்வதற்கு ஏதும் சான்றுகள் இருந்தால் அரசரிடம் காட்டு" என்றான்.
நிராதரவாக வெறும் கையோடு நிற்கும் நான் எதைக் காட்டி அரசரிடம் நான் கொள்ளையன் இல்லை என்று நிரூபிப்பது என்ற சிந்தனையில் அன்றெல்லாம் கழிந்தது. மறுநாள் காலை சிறை அதிகாரியிடம், "ஐயா எனக்கு சிற்பம் செதுக்குவதற்கான உளி முதலிய உபகரணங்களைத் தந்து உதவுங்கள்" என்று கேட்டான். அவரும் தந்தார். அங்கே இருந்த கல்லில் சிலை ஒன்றை செதுக்கத் தொடங்கினான். இரவு பகல் தூக்கம் இல்லாமல் உழைத்தான்.
தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தது. இளைஞனை கொலைக்களத்துக்கு அழைத்துப் போகுமுன், "உன் கடைசி ஆசை எதுவும் இருந்தால் சொல்" என்று கேட்டார்கள். இளைஞன் சொன்னான். "அரசருக்கு நான் ஒரு பரிசு தர விரும்புகிறேன். சிறையில் இருக்கும் அந்தப் பரிசை அரசர் பார்த்து ஏற்றுக் கொண்டபின் என்னைக் கொல்லுங்கள்" என்றான். அரசரிடம் இளைஞனின் விருப்பதைத் தெரியப்படுத்தினர். அரசர் சிறைக்கு வந்தார். இளைஞனிடம்," எனக்குத் தர இந்த சிறைக்கூடத்தில் உன்னிடம் என்ன பரிசு இருக்கிறது?" கேட்டார். இளைஞன் சற்று நகர்ந்து தனக்குப் பின்னால் இருந்த தான் செதுக்கிய சிற்பத்தைக் காட்டி, "அரசே, இந்த சிலை தான் நான் தங்களுக்குத் தர விரும்பும் பரிசு" சிற்பத்தைக் காட்டினார்.
அரசரின் அன்னை வடிவம் அழகான சிலையாக வடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அரசர் கண்ணில் நீர் மல்கியது. உண்மையில் நீ கொள்ளைக்காரன் இல்லையா? சிற்பி தானா? என்று கேட்ட அரசர் அவன் தண்டனையை ரத்து செய்ததோடு அவனுக்கு விலைமதிப்பற்ற பரிசுகளும் ஏராளமாகத் தந்து அவனுடைய சொந்த ஊருக்குப் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார். இளைஞன் தான் கற்ற வித்தை தன்னைக் காப்பாற்றியதை உணர்ந்து இன்னும் நுட்பமாக சிற்பக்கலையைக் கற்க வேண்டுமென்ற ஆர்வத்துடன் நாடு திரும்பினான்.
இந்தக் கதையை தையல் வகுப்பில் கமலா டீச்சர் சொல்லி பலமுறை கேட்டிருக்கிறேன். தையல் பயிற்சிக்கு வரும் பெண்களில் கவனக் குறைவாக இருப்பவர்களிடம் இது போல கதை சொல்லி நட்போடு அரவணைத்து தையல் கலையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுவார். படிக்க வரும் பெண்களுக்கு தையல் மட்டுமல்ல அதோடு வாழ்க்கைப் பாடமும் சொல்லிக்கொடுப்பார் கமலா டீச்சர். இந்தக் கதைக்கும் கமலா டீச்சருக்கும் சம்பந்தம் உண்டு என்று சொல்லலாம்.
கமலா நான்கு தங்கைகளோடு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள். அப்பா வீட்டு வாசலில் ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தார். பள்ளிக்கூடம் போகும் வழியில் கொய்யா மரத்தில் ஏறி கொய்யா பறிப்பது, வீட்டு வாசலில் வந்து கீரை விற்பவர் தொடங்கி வளையல் விற்பவர் வரை அனைவரிடமும் வாயாடுவதும் வம்பு செய்வதுமாக வளர்ந்தவள். படிப்பில் ரொம்ப சுமார் ரகம். வசதி இல்லை என்பதைத் தவிர பிரச்னைகள் ஒன்றையும் அறியாதவள்.
படிப்பு வரவில்லை. பத்தாம் வகுப்பில் கணக்குப் பரிட்சையில் தவறிவிட்டாள். படிப்பு அதோடு நின்று போனது. வீட்டு வேலையோடு தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டாள் கமலா. ஒருநாள் அவள் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் கமலாவின் அம்மாவிடம், பெண் பிள்ளை ஏதாவது கைத்தொழில் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்றைய உலகத்தில் படிப்பு இல்லாமல் என்ன செய்ய முடியும்? என்றெல்லாம் சொல்லி அரசு நடத்தும் பெண்களுக்கான இலவச தொழில் பயிற்சி வகுப்பில் சேர்த்துவிட்டார்.
கமலாவுக்குக் கோபம். பள்ளிக்கூடத்தில் தான் "படி படி' என்று தொல்லை கொடுத்தார்கள் என்றால் வீடு தேடி வந்து அதைப் படி இதைப்படி என்று இம்சிக்கிறார்களே என்று புலம்பிக் கொண்டே தையல் வகுப்புக்குச் சென்று வந்தாள். பயிற்சி இலவசம் என்றாலும் தையல் கற்றுக் கொள்வதற்கு துணி வேண்டுமே? அன்றாடம் தைப்பதற்கு அக்கம் பக்கத்தில் யாரிடமாவது "நீ துணி வாங்கித் தா தைத்த உடையை உனக்கே தந்து விடுகிறேன்" என்று சொல்லி துணி வாங்கித் தைப்பார்.
இப்படி தையல் கற்றுக் கொண்டாலும் சொந்தமாகத் தையல் இயந்திரம் வாங்க வசதி இல்லாமல் இருந்தாள். அதே நேரத்தில் கமலாவின் அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்க வேண்டிய நிலை. கடையில் இருந்த பொருள்களை மொத்தமாக விற்றுவிட்டு அந்தப் பணத்தில் இரண்டு தையல் இயந்திரங்களை வாங்கினாள். அப்பா நடத்தி வந்த பெட்டிக்கடையை தையல் பள்ளியாக மாற்றினாள் கமலா.
இரண்டு இயந்திரங்களோடும் இரண்டு மாணவர்களோடும் தொடங்கிய "கமலா தையல் பள்ளி' குடும்பத்தின் ஏழு பேரையும் காப்பாற்றும் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. விருப்பம் இல்லாமல் தையல் வகுப்புக்குப் போன கமலா இப்பொழுது இன்னும் அதிகமாக தையல் கலையின் நுட்பங்களை சொந்த ஆராய்ச்சியில் கற்றுக் கொண்டு ஊரிலேயே பெரும் தையல் நிபுணராக வளர்ந்து வந்தாள்.
கமலா பொறுப்பில் நான்கு தங்கைகளும் நன்கு படித்தார்கள். திருமணம் செய்து கொண்டு அவரவர் குடும்பத்தில் சிறப்பாக வாழ்கிறார்கள். கமலா தான் அப்பா அம்மா இருவரையும் கடைசி வரை பார்த்துக் கொண்டாள்.
அப்பா மறைவுக்குப் பிறகு திருமணமும் செய்து கொண்டாள். இன்றைக்கு அவருடைய தையல் பள்ளி ஐம்பது இயந்திரங்களோடு தினம் இருநூறு பெண்கள் தையல் பயிலும் பள்ளியாக வளர்ந்திருக்கிறது. கமலா டீச்சரை ஊரில் அறியாதவர்களே இல்லை. படிப்பு வராமல் பாதியில் படிப்பை நிறுத்திய கமலா டீச்சர் அதே பள்ளிக்கூடத்தில் அடிக்கடி மாணவர்களை ஊக்கப்படுத்த உரைகள் தருகிறார். எங்கள் பள்ளி மாணவி என்று அந்தப் பள்ளிக்கூடம் பெருமையாகச் சொல்கிறது.
கமலா டீச்சரின் கதை, எங்கள் ஊர் பெண்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லாருக்குமே உத்வேகத்தைக் கொடுக்கும் கதை. "ஏதோ ஒரு நுண்கலை அல்லது கைத்தொழில் நமக்குத் தெரிந்திருந்தால் நம்முடைய பலமாக எந்த நிலையிலும் அது நமக்குக் கைகொடுக்கும். நம் முன்னேற்றத்திற்கு நாம் பற்றிக்கொள்ளக் கூடிய பிடிமானமாக நாம் கற்றுக் கொள்ளும் கலை இருக்கும். பத்தாம் வகுப்பைக் கூடத் தாண்டாத எனக்கு இப்படியொரு மரியாதையான வாழ்க்கையை தையல் கலை தந்திருக்கிறதென்றால் உங்களுக்கு இன்னும் வளமான வாழ்க்கை சாத்தியமாகும்" கமலா டீச்சரின் இந்த வார்த்தைகள் அவரின் மாணவிகளுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட வழி காட்டக் கூடிய வெளிச்சமே. தொடர்ந்து வெளிச்சத்தில் பயணிப்போம்.
தொடரும்...