மகளிர்மணி

அனுபவம் : அறிவு!

தமிழ்நாட்டில் இருந்த போது வணிகம்... வர்த்தகம் குறித்து சிந்தனை எதுவும் இல்லை. வீட்டில் அம்மாவுக்கு உதவினோம்... படித்தோம்... டிவி பார்த்தோம்...'

பிஸ்மி பரிணாமன்

தமிழ்நாட்டில் இருந்த போது வணிகம்... வர்த்தகம் குறித்து சிந்தனை எதுவும் இல்லை. வீட்டில் அம்மாவுக்கு உதவினோம்... படித்தோம்... டிவி பார்த்தோம்...'

என்றிருந்த தேனம்மை, துபாய் சென்ற பிறகு தனது வாழ்க்கையைத் தானே திசை திருப்பினார். தனது வெற்றிக் கதையை தேனம்மை பகிர்ந்து கொள்கிறார்:

""மதுரையில் படிச்சிட்டிருந்த போது, வெளியே எங்காவது போகணும்னா, எங்கப்பச்சி தான் அழைத்து போவாங்க... எனக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் அந்த அளவுக்குப் பயம். தனியா ஓர் இடத்துக்குப் போகணும்னா ஆயிரம் முறை யோசிப்பேன். முடிந்தமட்டும் தவிர்க்கப் பார்ப்பேன். எங்க சமூக வழக்கப்படி சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுடணும்னு நான் பட்டப்படிப்பு முதல் ஆண்டு படிக்கிறபோதே திருமணம் செஞ்சு வச்சாங்க. மாப்பிள்ளை என் அத்தை மகன்தான். படிப்பு முடியறவரைக்கும் நான் மதுரையில் பெற்றோருடன் வசித்தேன். அவர் கேரளாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

கணவருக்கு விமான சேவைத் துறையில் மேலாளராக மஸ்கட்டில் வேலை கிடைத்தது. அவர் தனியா கிளம்ப தயார் ஆனதும், என்னால தாங்க முடியலை. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினேன். என் பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்ட கணவர், "நீ தனியா இருந்தாதானே போரடிக்கும். ஜாவா, கம்ப்யூட்டர் கோர்ஸ், கணினி டைப்பிங் இதெல்லாம் கத்துக்கோ! உனக் கேற்ற வேலையைத் தேடி, உன்னை அழைச்சுக்கிறேன்' என்று சமாதானப்படுத்தினார்.

நான் வேலைக்குப் போறதா... நடக்கிற காரியமா.. இங்கே கடை கண்ணிக்குப் போய்ட்டு வர்றதுக்கே என்னால முடியல... நீங்க சொல்றதுக்காக படிச்சு வெச்சுக்கறேன்னு சொன்னேன். கோர்ஸ் சேர்ந்தாச்சு. அதை முடிக்க எனக்கு ஒன்றரை வருஷம் ஆனது. நானும் மஸ்கட் பயணமானேன்.

என்னோட பயத்தைப் போக்க, காலையிலே தனியா போய் பால் வாங்கணும். காய்கறி வாங்கணும் முதல் நாள் நான் கூட வர்றேன்.. அப்புறம் நீதான் போய் வாங்கி வரணும் என்றார்.

மஸ்கட் அழகான அதிக ஆள் நடமாட்டமில்லாத ஓர் ஊர். வீட்டு சாமான்களைத் தனியாகச் சென்று வாங்க பழகிக்கிட்டேன். 2001- இல் மகள் பிறந்தாள். 2002-இல் மகன் பிறந்தான். அப்போது கணவர் துபாய்க்கு அருகே அஜ்மானில் இதே துறையில் வேலை தேடிக் கொண்டார். அஜ்மானுக்கு குடி பெயர்ந்தோம். குழந்தைகளை பார்த்துக் கொள்ள என் அம்மாவும், மாமியாரும் வந்து உதவினார்கள்.

2003-இல் என் கணவரோட க்ளையண்ட் ஒருத்தருக்கு "ரிஷப்ஷனிஸ்ட்' தேவை இருந்தது. இரண்டே நாளில் சேர வேண்டும் என்றார்கள். கணவர் என்னை சேர்த்துவிட்டார். ஒரு நாள் பயிற்சியும் தந்தார். "போனை எடு... ஸ்டைலா பேசு! ஆனா, வார்த்தையிலே ஒரு பவ்யம் இருக்கணும். ஒவ்வொரு வார்த்தையையும் வேண்டா வெறுப்பா பேசக் கூடாது என்று சொல்லி .. அடுத்த அறையிலிருந்து அவர் இன்டர்காம் மூலம் பேச நான் பதில் சொல்ல.. இப்படி பயிற்சி நடந்தது. ரெண்டு மூணு மணி நேர பயிற்சிக்குப் பிறகு மனதில் தைரியம் பிறக்க வேலையில் சேர்ந்தேன்.

அந்த வேலை, எனக்கு வெளி உலக அனுபவத்தைத் தந்தது. வேலைக்குச் சேர்ந்த மூன்று மாதத்திற்குள் முன்பின் தெரியாதவர்களிடமும் தைரியமாக அணுகவும், தயக்கம் இல்லாம பேசவும் கற்றுக் கொண்டேன். ஒரு அலுவலக நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.

அந்த சமயத்தில்தான், எனக்கு அறிமுகமான நண்பர், பக்கத்து நாடான சார்ஜாவிலே, "அபாகஸ்' வகுப்பெடுக்க டீச்சர் வேணும்ன்னு சொன்னார். பயிற்சி கொடுப்பதோட, அட்மின் வேலையும் பார்க்கிற வாய்ப்பு. என்னோட அம்மா பிள்ளைகளைப் பார்த்துக்கிட்டதால, என்னால அந்த வேலையை ஏற்றுக் கொள்ள முடிந்தது.

புதிய வேலையில் வாரத்திலே மூன்று நாள்தான் வேலை. அது எனக்குப் பிடிச்சிருந்தது. பள்ளியின் நிர்வாகி வகுப்பெடுப்பாங்க. நானும் சில வகுப்புகள் எடுப்பேன். மாணவர்கள் எண்ணிக்கை கிடுகிடுன்னு அதிகமானது. ஒரு கட்டத்தில், நிர்வாகி சரிவர சென்டருக்கு வராத நிலை ஏற்பட்டது. மாணவர்கள் மொத்தப் பேரையும் நான் கவனிச்சுக்கிட்டேன். ஹெட் ஆபீஸ்க்கு ரிப்போர்ட் அனுப்பற வரை எல்லா வேலையும் என்கிட்டேயே வந்தது. எனது வேலைத் திறமையைக் கண்ட நிர்வாகம், அபாகஸ் பள்ளியின் தலைமைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தது.

எனக்கு பெருமையா இருந்தாலும், இன்னொருவர் ஸ்தானத்தில் வேலை செய்ய விருப்பம் இல்லை. ஏனென்றால் முன்னர் வேலை செய்பவர் வேலை இழக்க நேரிடும். அதனால் நான் வசிக்கும் அஜ்மான் பக்கம் ஒரு பள்ளி துவங்க அனுமதி கேட்டேன். நிர்வாகம் ஒத்துக் கொண்டது.

அதுக்கான ப்ரான்ச்சைஸ் கட்டணம் தரக்கூட முதலீடு இல்லை. அப்பவே ரூ.15 லட்சம் தேவைப்பட்டது. கைத்தொகை கொஞ்சம்தான் இருந்தது. என் கணவர் லோன் போட்டு பணம் ரெடி பண்ணினார். இப்படித் தயார் ஆனது முதல் தொழில் முயற்சி.

"புதிய பள்ளிக்கு மாணவர்களைத் சேர்க்க, வீடுகளில் எல்லோரும் தூங்கற நேரத்திலே நோட்டீஸ் போட்டுவிட்டு வருவோம். தேவையான மாணவர்கள் சேர்ந்தனர். எனது பள்ளியும் வளர்ந்தது. நானே ஆறு பேர்களை பள்ளி வேலைகளில் அமர்த்தினேன். இந்த சமயத்திலே திடீர் சிக்கல்.

எனக்கு மூணாவது குழந்தை உருவாகி இருந்தது. இதை நான் கண்டுபிடிக்கும்போது, அஞ்சு மாசம் ஆகி இருந்தது. "எல்லாருக்கும் கேட்டப்ப கிடைக்காத ஒரே வரம் பிள்ளை வரம். கிடைச்சதை மறுக்காதீங்க!'ன்னு என் அம்மா ஆறுதல் சொன்னாங்க. மூன்று குழந்தைகளைக் கவனிக்கணும். பள்ளியை சரிவர பார்க்க முடியாத நிலைமை ஏற்படும். அதனால் பள்ளியை விருப்பம் உள்ளவர்களுக்கு கொடுத்திடலாம் என்று முடிவு செய்தோம். நல்ல தொகைக்கு பள்ளியின் நிர்வாகத்தை மாற்றிக் கொடுத்தோம்.

"சில ஆண்டுகள் ஆனதும் மீண்டும் அபாகஸ் பள்ளி தொடங்கலாம் என்று துபாயில் இடம் பார்த்தோம். வெறும் பயிற்சிப் பள்ளியாக மட்டுமில்லாமல், பகல் நேரத்தில் சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும், சிறார்களுக்கு விளையாட, படம் வரைய, எழுத்துப் பயிற்சி கொடுக்க என்று கொஞ்சம் பெரிய அளவில் ஆரம்பித்தோம். நாங்கள் அஜ்மானிலிருந்து துபாய்க்கு குடி ஏறினோம்.

துபாயில் புது பள்ளிக்கு செலவு அதிகமானது. இடத்துக்கான வாடகை, முன்பணம், பல்வேறு பயிற்சிக்கான பணியாளர் செலவு, அரசு அனுமதி பெற என்று பெரும் தொகை தேவைப்பட்டது. பார்ட்னர்ஷிப் என்பதால, முதல் பள்ளியை கொடுத்ததில் கிடைத்த பணத்தை அப்படியே துபாய் பள்ளிக்கு முதலீடாகப் போட்டேன்.

புது பள்ளியிலும், நூறு மாணவர்கள் வரை சேர்ந்தார்கள். சென்டரில் இடம் போதவில்லை. பெரிய இடம் பார்த்து மாறினபோது மேலும் அதிகமாக மாணவர்கள் சேர்ந்தார்கள். அடுத்த கட்ட வளர்ச்சி பத்தி யோசிக்க ஆரம்பிச்சோம்.

டே கேர் சென்டரில் நிறைய குழந்தைகள் சேர்ந்தாங்க. பிரச்னைகளும் அதிகரிச்சது. காரணம், துபாயிலே குழந்தைகள் பராமரிப்புக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது. சேட்டை பண்ற குழந்தைகளை டீச்சர்கள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா பிடிச்சு, நகக் காயம் பட்டுட்டா, உடனே கோர்ட் கேஸ்ன்னு ஆயிடும். ரொம்ப ரிஸ்க். சுகாதாரம், காற்றோட்ட வசதி, விளையாட்டுப் பொருள்கள் தரக்கட்டுப்பாடுன்னு அதிகாரிகள் அடிக்கடி சோதனைக்கு வருவாங்க. அவங்க சொல்றபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தது. அதோட நகராட்சி சோதனைப்படி, ஸ்கூலுக்கு உள்ளேயே ஒரு கிளினிக்கும் நிரந்தர நர்ஸþம் எப்போதுமே இருக்கணும். அவங்களுக்கு வேலை இருக்கோ, இல்லையோ சம்பளம் கொடுத்தாகணும். இப்படி பிரச்னை மேல பிரச்னை.

துபாயில் உள்ள அழகு நிலையத்தில் எந்நேரமும் கூட்டம் அலைமோதும். அதனால் நாமும் இப்படி ஒரு அழகு மையம் ஆரம்பிக்கலாம்னு முடிவெடுத்தோம்.

அடிக்கடி சுகாதாரத் துறை ரெய்டு வருவாங்க. சீப்பிலே முடி இருந்தா ஃபைன். பிளாக் ரிமூவர்ஸ் பயன்படுத்தினா அபராதம்னு ஏகக் கட்டுப்பாடுகள். அஞ்சு தடவைக்கு மேல அபராத நோட்டீஸ் வந்தா பார்லரை மூடிட வேண்டியதுதான்.

முதல் முறை ஃபைன் கட்டினவுடனே, ஸ்டாஃப்ஸ்கிட்டே தெளிவா சொல்லிட்டோம். இனிமே ஃபைன் வந்தா நீங்கதான் பொறுப்புன்னு அவங்ககிட்டே விட்டுட்டோம். பார்லர் ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்கு அப்புறம்தான் அதில் உள்ள நல்லது கெட்டதே புரிஞ்சது. நேபாளி, ஸ்ரீலங்கா, மலையாளி, பிலிப்பைன்ஸ்ன்னு நாலு வகை ஆட்களை நியமிச்சோம். நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆள் ஒருத்தரை கையிலே வெச்சுக்கிட்டதால, எங்க கண்காணிப்பு அதிகம் தேவைப்படலை.

மாடர்ன் டெயிலர் ஷாப்புக்கு கிறாக்கி இருக்குன்னு ஆரம்பித்தோம், பழமுதிர்ச் சோலையின் பழச்சாறு நிலையம் ஆரம்பித்தோம். வெளியே போகவே பயந்த நான் தற்போது, பல நிறுவனங்களை தொடங்கி பல வகையான அனுபவங்கள் தொடர்கின்றன' என்கிறார் துபாயில் தொழில் முனைவராக இருக்கும் தேனம்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT