பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், "டம்ளர் - டவரா செட்' ஆகியனதான் கும்பகோணம் டிகிரி காபிக்கான அக்மார்க் முத்திரை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல!
ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலின் மொட்டை கோபுர வாசலில் "லெட்சுமி விலாஸ் காபி கிளப்' இருந்தது. இங்கே ஃபில்டர் காபி குடிக்க எந்த நேரமும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். தனது கடையை நம்பி வந்தவர்களின் நாவுக்கு ருசியான காபியைத் தருவதில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்திருந்தவர் கடையின் உரிமையாளர் பஞ்சாமி ஐயர்.ஹ
இதனால் அக்கம்பக்கத்து மிராசுகள் எல்லாம் வண்டி கட்டி வந்து கிளப் டிகிரி காபிக்காகத் தவம் கிடந்தனர். பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் அப்போதே காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட காபி தூளில் நம்பர் ஒன் தரத்தை எடுத்து அதில் ஒரே ஒரு முறை மட்டுமே டிகாஷன் எடுத்து மணக்க மணக்க ஃபில்டர் காபி போட்டுக் கொடுத்தார் பஞ்சாமி ஐயர்.
இதற்காகத் தனது கிளப்பின் பின்புறம் பிரத்யேக மாட்டுப் பண்ணையே வைத்திருந்தார். அந்தக் காலத்திலேயே அதில் இருபதுக்கும் குறையாத பசுக்கள் அசை போட்டுக் கொண்டிருந்தன.
கும்பகோணம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மட்டுமே தெரிந்திருந்த பஞ்சாமி ஐயர் காபியை உலகறியச் செய்தது இசைவாணர்கள்தான். இசைக் கச்சேரிகளுக்கு வந்த அவர்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியை குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே மாறிப் போனார்கள். இதனால் போகுமிடமெல்லாம் "குடிச்சா கும்பகோணம் பஞ்சாமி ஐயர் கடை டிகிரி காபி மாதிரி குடிக்கணும்' என்று பேச ஆரம்பித்தனர்.
இதுவே பேச்சு வழக்கில் "கும்பகோணம் டிகிரி காபி' என பெயர் மாறியது.
'பித்தளையில் டம்ளர் - டவரா செட்டையும் ஃபில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்டுன்னு மூணு தரம் இருக்கு. இதுல "பி' தான் நம்பர் ஒன் தரம். பஞ்சாமி ஐயர் இந்தத் தூளில்தான் காபி போட்டார்.
மற்றவர்கள் ஒருமுறை காபித் தூள் போட்டால், அதிலிருந்து மூணு தடவை டிகாஷன் அடிப்பாங்க? ஆனா, பஞ்சாமி ஐயர் ஒரே ஒரு தடவைதான் டிகாஷன் எடுப்பாரு? இப்படியெல்லாம் செஞ்சுதான் தன்னோட காபிக்கு ரசிகர்களைச் சேர்த்து வைச்சிருந்தார். கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்குப் போட்டி போட்டுக் கொண்டு கும்பகோணம் டிகிரி காபியும் பிரபலமானது.
பஞ்சாமி ஐயரைத் தொடர்ந்து இன்னும் பலர் கும்பகோணம் பகுதியில் டிகிரி காபி கடைகளைத் திறந்தார்கள். என்றாலும் 1960-இல் தொடங்கி 1986 வரை கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர்தான் கொடிகட்டிப் பறந்தார்' என்கிறார்கள் காபி பிரியர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.