இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி முதன் முதலாக உலகக் கோப்பையை வென்றதும், அவர்களை தங்கள் நிறுவன விளம்பரங்களில் தோன்றச் செய்ய பல வணிக நிறுவனங்களிடையே போட்டா போட்டி நடக்கிறது. அதன் காரணமாக அவர்கள் விளம்பரங்களில் தோன்ற வாங்கும் ஊதியம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
ஸ்மிருதி மந்தனா ஏற்கெனவே சுமார் 12 தயாரிப்புகளுக்கு விளம்பர மாடலாக இருப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இனி மேலும் பல விளம்பரங்களில் தோன்றுவார். பொதுவாக ஓர் ஓப்பந்தத்துக்கு சுமார் 1.5 2 கோடி ரூபாய் வரை மந்தனா வாங்குகிறார். இப்போது 25 முதல் 50 சதவீதம் அதிகமாகுமாம்.
இளையவரான ரிச்சா கோஷின் கட்டணம் ஓர் ஒப்பந்தத்துக்கு 30 முதல் 40 லட்சம் ரூபாய் இருந்தது. இனி இது 70 முதல் 80 லட்சம் ரூபாய் ஆகும் என்று சொல்லப்படுகிறது. ராவலின் கட்டணம் இப்போது 1520 லட்சத்தில் இருந்து 4050 லட்சமாக உயரக்கூடும். ஷிஃபாலி வர்மாவின் பிராண்ட் மதிப்பு 40 லட்சத்தில் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உயர்ந்துள்ளதாக விளம்பர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெமிமா ஆஸ்திரேலிய அணியை கலங்கடித்த அன்றே அவருடைய பிராண்ட் மதிப்பு இரண்டு மடங்காகிவிட்டதாம்.
மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனைகளுக்குக் குறைந்த பட்சம் ரூ. ஒரு கோடி பரிசு அறிவித்துள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பங்காக புதிய 'சியாரா' காரை ஒவ்வொரு வீராங்கனைக்கும் பரிசாக வழங்குகிறது. இன்னும் பரிசுகள் வரும். உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 51 கோடியும், சர்வதேச கிரிக்கெட் வாரியம் சுமார் ரூ. 40 கோடியும் பரிசாக வழங்கியுள்ளன.
கிரிக்கெட் அணி இந்தியாவில் தொடங்கப்பட்ட போது வீரர்கள் ரயிலில் பொதுப் பெட்டியில் பயணம், பள்ளி வகுப்புகளில் தங்குதல் அல்லது பலர் தங்கும் டார்மிட்டரி, போட்டிகளில் கலந்து கொள்ள வெளிநாடு செல்ல பணம் இல்லாத நிலை நிலவியது.
ஒரு பேட்டை மாற்றி மாற்றி விளையாடியது போல, கால்கள் பாதுகாப்புக்காகக் கட்டிக்கொள்ளும் 'பேட்' ஐயும் மாற்றி மாற்றிக் கட்டி விளையாடியுள்ளனர். இந்நிலை, மித்தாலி ராஜ் கேப்டனாகியும் தொடர்ந்தது.
2005 இல் உலகக்கோப்பைப் போட்டியில் இரண்டாவது இடத்தில் இந்திய மகளிர் அணி வந்தாலும், ஊக்கத் தொகையாக ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. ஏனைய போட்டிகளில் அந்த ஆயிரம் கூட வழங்கப்படவில்லை.
2006இல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றதும் நிலைமை முன்னேறியது. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் ஆண் கிரிக்கெட் வீரர்களுக்குச் சமமான ஊதியம் அவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், ஆண்களின் கிரிக்கெட்டுடன் ஒப்பிடும்போது பெண்கள் கிரிக்கெட்டின் செல்வாக்குக் குறைவுதான்.
ஆனால், சமீபத்தில் நடந்த 2025 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு ஸ்டேடியத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேசமயம், மகளிர் அணி இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பது கசப்பான உண்மை. இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு கிரிக்கெட் வீராங்கனைகூட இல்லை என்பது தமிழகத்துக்கு சோகமான விஷயம்.
இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்கு ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் நஹர்கர் கோட்டையில் உள்ள 'ஷீஸ் மஹாலில்' மெழுகு சிலை செய்து வைக்கப்படும் என்று கோட்டை நிர்வாகம் அறிவித்துள்ளது. 2026, மார்ச் 8, சர்வதேச மகளிர் தினத்தன்று அந்த மெழுகு சிலை திறந்து வைக்கப்படும். ஏற்கெனவே, ஆடவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு இந்தக் கோட்டையில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.