முகப்பு
சிறுவர்மணி

சிறுகதை: நன்றி யாருக்கு?

கண்ணன் தனது பத்து நாள் விடுமுறையைக் கழிக்க கிராமத்திலிருக்கும் தாத்தா, பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தான். இன்னும் இரு தினங்களில் பள்ளிக்கூடம் திறந்து விடும் என்பதால் கண்ணனை ஊருக்கு அழைத்துச் செல்ல அவ

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:28 PM
பகிர்:

கண்ணன் தனது பத்து நாள் விடுமுறையைக் கழிக்க கிராமத்திலிருக்கும் தாத்தா, பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தான். இன்னும் இரு தினங்களில் பள்ளிக்கூடம் திறந்து விடும் என்பதால் கண்ணனை ஊருக்கு அழைத்துச் செல்ல அவனது அப்பா சிவராமன் வந்தார்.

ஒருவார காலமும் தாத்தா சொன்ன கதைகளும், அழகழகான பூந்தோட்டங்களோடு கூடிய கிராமத்துச் சூழலும் இனி எப்போது கிடைக்கும் என்று கண்ணனுக்குத் தோன்றியது. ஆனால், இரு தினங்களில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டுமே என்ற எண்ணத்துடன் அப்பாவுடன் நகரத்திற்குப் புறப்பட்டான். இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.



பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் கண்ணனின் அப்பா கண்ணயர்ந்து விட்டார். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த கண்ணன் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தான். அவன் மனம் முழுவதும் தாத்தா பாட்டியைப் பற்றியும், கிராமத்தைப் பற்றியுமே இருந்தது.



பேருந்துக்குள் நடத்துனர் ஒவ்வொருவராக பயணச்சீட்டு கொடுத்துவிட்டு வந்தார். கண்ணனின் அருகில் வந்த நடத்துனர் அவனிடம், ""தம்பி... உனக்கு என்ன வயசாச்சுது?'' என்று கேட்டார். வெளியில் வேடிக்கைப் பார்த்தபடி இருந்த கண்ணன் திடீரென்று நினைவு வந்தவனாய், ""எனக்கு பன்னிரெண்டு வயசாச்சு!'' என்று சொன்னான். கண்ணனும், நடத்துனரும் பேசிக் கொண்ட சத்தத்தில் கண்ணனின் தந்தையும் விழித்துக் கொண்டார்.



""சரி, அப்படியென்றால் இரண்டு டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்று சொன்னபடியே இரண்டு பயணச் சீட்டுக்களைக் கிழித்த நடத்துனர் அவற்றை சிவராமனிடம் கொடுத்தார். சிவராமனும் அவற்றை வாங்கிக் கொண்டு பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

 நடத்துனர் அவ்விடத்திலிருந்து நகர்ந்தபின் தன் அப்பா தன்னிடம் சொன்னது கண்ணனுக்கு நினைவுக்கு வந்தது. அப்பா சொல்லித் தந்தபடியே தானும் நடத்துனரிடம் சொல்வதாகக் கண்ணனும் சொல்லியிருந்தான். ஆனால், ஏதோ ஞாபகத்தில் அப்பா சொல்லித் தந்ததை மறந்து விட்டான்.



"ஐயோ..! அப்பா சொல்லித் தந்ததை நடத்துனரிடம் சொல்ல மறந்துவிட்டோமே!' என்று கண்ணனின் மனம் உறுத்திக் கொண்டே இருந்தது. இப்போது அப்பாவிடம் எதுவும் பேச வேண்டாம். வீட்டிற்குச் சென்ற பின் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்று கண்ணன் நினைத்துக் கொண்டான்.



ஆறு மணி நேர பயணம் முடிந்து ஒரு வழியாக பேருந்து நகரத்திற்கு வந்து சேர்ந்தது. வீட்டிற்குச் செல்லும் வழியில் கூட கண்ணனின் தந்தை அவனிடம் எதுவும் பேசவில்லை. "அப்பாவுக்கு தன் மீதான கோபம் இன்னும் தீரவில்லையோ?' என்று நினைத்தபடியே வந்தான் அவன்.



இருவரும் வீட்டை அடைந்து குளித்துவிட்டு வந்தனர். கண்ணனின் அம்மா கோமதி சாப்பாடு எடுத்து வைக்க, மூவருமாக சாப்பிட அமர்ந்தனர். இதுதான் சரியான நேரம் என்று நினைத்த கண்ணன் தன் தந்தையிடம், ""அப்பா! நீங்க எத்தனையோ முறை சொல்லித் தந்தும் நான் பஸ் கண்டக்டரிடம் அதைச் சொல்ல மறந்து விட்டேன். என்னை மன்னிச்சுடுங்கப்பா!'' என்று தாழ்ந்த குரலில் சொன்னான்.



கண்ணனின் தந்தையோ கோபப்படுவதற்குப் பதிலாக அவனைப் பார்த்து புன்னகைத்தார். ""கண்ணா! நீ என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான்தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்'' என்றார்.



அப்பாவும், பிள்ளையும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கண்ணனின் அம்மாவுக்குப் புரியவேயில்லை.



""கண்ணா! என்ன நடந்தது? எதற்காக உன் அப்பாகிட்டே மன்னிப்பு கேட்கிறாய்? அப்பா எதற்காக உன்னிடம் நன்றி சொல்கிறார்?'' என்று ஒன்றும் அறியாதவளாய் கேட்டாள் கோமதி.



அம்மாவின் கேள்விக்கு கண்ணன் பதில் சொல்லும் முன்பே சிவராமன், ""நானே சொல்கிறேன் கோமதி. பஸ்ஸில் கண்டக்டர் கேட்டால் பதினொன்று வயசுதான் ஆகிறது என்று கண்ணனிடம் சொல்லச் சொன்னேன். ஆனால், கண்ணன் அதை மறந்துவிட்டு தனக்குப் பன்னிரெண்டு வயது என்று உண்மையைச் சொல்லி விட்டான். பன்னிரெண்டு வயது ஆனால் முழு டிக்கெட் வாங்க வேண்டும். அரை டிக்கெட் வாங்கி சிறிது பணத்தை மிச்சப்படுத்தலாமே என்று நானே கண்ணனிடம் பொய் சொல்லச் சொன்னேன். ஆனால், அவன் உண்மையாக நடந்து கொண்டு என்னைத் திருத்தி விட்டான். அதற்காகத்தான் அவனுக்கு நான் நன்றி சொன்னேன்!'' என்று சொன்னார்.



உடனே கண்ணன், ""அப்பா! நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது எனக்கு அல்ல, தாத்தாவுக்குதான்! நான் கிராமத்தில் இருந்த போது தினமும் வாய்மையின் பெருமையைக் கூறும் குறட்பாக்களையும், அரிச்சந்திரன் கதையையும் சொல்லித் தந்தார். அந்த ஞாபகத்தில்தான் நான் என் வயதை மறைக்காமல் உண்மையைச் சொல்லி விட்டேன்'' என்று சொல்ல,



""எப்படியோ கண்ணன் ஊருக்குச் சென்று வந்ததில் எல்லோருக்குமே நன்மை விளைந்தது'' என்று சிரித்தபடி சொன்னார் சிவராமன். அவரோடு கண்ணனும், அவனது அம்மா கோமதியும் சேர்ந்து சிரித்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.