ஏழு நண்பர்கள்
முன்னொரு காலத்தில் யுசிக்கி எனும் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் வாரத்தின் ஏழு நாட்களில், ஞாயிற்றுக் கிழமையை மட்டும் மிகவும் நேசித்தான். அந்த நாளில்தான் ஆசை ஆசையாக, நேரம்போவதைப் பற்றிக் கவலைப்படாமல் ந
முன்னொரு காலத்தில் யுசிக்கி எனும் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் வாரத்தின் ஏழு நாட்களில், ஞாயிற்றுக் கிழமையை மட்டும் மிகவும் நேசித்தான். அந்த நாளில்தான் ஆசை ஆசையாக, நேரம்போவதைப் பற்றிக் கவலைப்படாமல் நாள் முழுதும் விளையாடிக்கொண்டே இருக்கலாம். அற்புதமான நாள் அது. எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அதனால் அவன் ஞாயிறு நாட்டிற்குப் போய்விட வேண்டும் என்று தீர்மானித்து பயணத்தைத் தொடங்கினான்.
பயணத்திடையில் யுசிக்கி ஒரு பெரிய எறும்புப் புற்றைப் பார்த்தான்.
""எறும்புகளே, உங்களில் யாருக்காவது ஞாயிறு நாடு எங்கே இருக்கிறது என்று தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்'' என்று யுசிக்கி, எறும்புகளிடம் கேட்டான்.
""ஞாயிறு நாட்டிற்குச் செல்லும் பாதையை நாங்கள் யாரும் பார்த்ததில்லையே! நீ மைனாக் குருவியிடம் வேண்டுமானால் கேட்டுப்பாரேன். ஒருக்கால் அதற்குத் தெரிந்திருக்கலாம்'' என்றன எறும்புகள்.
ஒரு மரத்தில் மைனாக் குருவி கூடு கட்டியிருப்பதை யுசிக்கி பார்த்தான். அந்தக் குருவி, தன் குஞ்சுகளைத் தூங்க வைப்பதற்காகப் பாட்டுப்பாடிக் கொண்டிருந்தது. யுசிக்கி மைனாவிடம் கேட்டான்:
""அருமையான மைனாவே, ஞாயிறு நாடு எங்கேயிருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? தெரிந்தால் எனக்குச் சொல்லேன்!''
""எனக்குத் தெரியாதே தம்பி!'' மைனா பதில் சொன்னது. ""நான் ஒரு முறைகூட ஞாயிறு நாட்டைப் பார்த்ததில்லையே! ஒருக்கால், ஆந்தைக்குத் தெரிந்திருக்கலாம். அது ஒரு பெரிய ஆலமரத்தில் குடியிருக்கிறது. அது மிகவும் அறிவாளி. இரவில்கூட அதற்குக் கண்கள் தெரியும். எனவே, அதற்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீ ஆந்தையிடம் சென்று கேட்டுப் பார்.''
யுசிக்கி ஆலமரத்திற்குச் சென்று, ""அறிவாளி ஆந்தையே, ஞாயிறு நாடு எங்கே இருக்கிறது என்று எனக்குச் சொல்வாயா?'' என்று கேட்டான்.
ஆந்தை நாள் முழுதும் தூங்கிக்கொண்டிருந்துவிட்டு சற்று முன்புதான் கண் விழித்திருந்தது. ஆந்தை சொன்னது,""ஞாயிறு நாடு இங்கிருந்து மிகவும் தொலைவில் உள்ளது. ஆனால், நீ அஞ்சாமல் சென்றுகொண்டே இருக்கவேண்டும். அப்போது உன் எதிரே "திங்கள் நாடு' வரும். திங்கள் மிகவும் கடினமான உழைப்பாளி. ஆனாலும், அது இனிமையாகப் பழகக்கூடியதுதான். அடுத்தபடியாக அது உனக்கு வழிகாட்டும்.''
யுசிக்கி, திங்கள் நாடு வரும் வரையில் நடந்துகொண்டே இருந்தான். அந்த நாட்டைச் சென்றடைந்த பிறகு அவன் திங்களிடம் சொன்னான்: ""வணக்கம் திங்களே! ஞாயிறு நாட்டிற்குச் செல்வதற்கு எனக்கு நீ வழி காட்ட முடியுமா? நான் எந்த வழியாகச் செல்ல வேண்டும்!''
திங்கள் சொன்னது: ""வணக்கம் யுசிக்கி! இங்கிருந்து ஆறு நாட்கள் பயணம் செய்தால் ஞாயிறு நாடு வந்துவிடும். இந்த வைக்கோல் கூளங்களை வாரியள்ளி வந்து போராகக் குவிப்பதற்கு நீ எனக்கு உதவி செய். நீ உதவி செய்தால் ஞாயிறு நாடு செல்வதற்கு நான் வழி காட்டுகிறேன்.''
யுசிக்கி உதவுவதாக ஒத்துக்கொண்டான். அவர்கள் இருவரும் நாள் முழுதும் கடினமாக வேலை செய்தார்கள். மாலைப் பொழுது வந்தது. அவர்கள் வைக்கோல்களை அள்ளித் திரட்டிக் குவித்த கைக்கோல் போர்கள் அங்கே நிறைய இருந்தன. திங்கள், யுசிக்கி தனக்கு உதவி செய்ததற்காக மகிழ்ந்து அவனைப் பாராட்டியது. அது, செவ்வாய் நாட்டை அடையும் வழியை அவனுக்குச் சொன்னது.
அவன் நடந்து சென்று செவ்வாய் நாடு இருக்கும் இடத்தை அடைந்தான். அவன் செவ்வாயிடம் கேட்டான்: ""வணக்கம் செவ்வாய்! ஞாயிறு நாட்டிற்கு எப்படிச் செல்வதென்று நீ எனக்குக் கொஞ்சம் சொல்கிறாயா?''
செவ்வாய் சொன்னது: ""வணக்கம் யுசிக்கி! இங்கிருந்து ஐந்து நாள் பயணம் செய்தால் அந்த நாட்டிற்குச் சென்றுவிடலாம். நான் உனக்கு அந்த வழியைச் சொல்கிறேன். ஆனால், நீ எனக்கு முதலில் ஒரு உதவி செய்ய வேண்டும். நாங்கள் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் கட்டுகிறோம். நீயும் வந்து உதவி செய்ய வேண்டும்.''
யுசிக்கி அதை ஏற்றுக்கொண்டான். அவர்கள் நாள் முழுதும் கடுமையாக வேலை செய்தார்கள். இறுதியாக அங்கே ஒரு கட்டடம் கட்டப்பட்டுவிட்டது. பிறகு செவ்வாய், யுசிக்கியிடம் புதன் நாட்டிற்குப் போகும் வழியைச் சொன்னது.
யுசிக்கி, புதன் நாட்டை அடைந்து புதனிடம் சொன்னான்: ""வணக்கம் புதனே! நான் ஞாயிறு நாட்டிற்குச் செல்ல வேண்டும். அதற்கு நீ எனக்கு உதவி செய்வாயா?''
புதன் அவனுக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஏனென்றால், அது ஒரு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. ஒரு கன்றுக்குட்டி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பிடிப்பதற்காக புதனும் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு புதன் சொன்னது: ""இந்தக் கன்றுக் குட்டியைப் பிடிப்பதற்கு எனக்குக் கொஞ்சம் உதவிசெய்! பிறகு நாம் பேசலாம்.''
அங்குமிங்கும் துள்ளித் துள்ளி ஓடிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை அவர்கள் இருவரும் சேர்ந்து துரத்திப் பிடித்தார்கள். பிறகு புதன், யுசிக்கியின் சுறுசுறுப்பை வியந்து பாராட்டிவிட்டுச் சொன்னது: ""இங்கிருந்து பயணம் செய்தால் நான்கு நாட்களில் ஞாயிறு நாட்டை அடைந்து விடலாம். வியாழனிடம் போய்க் கேள். என்னைவிட அது உனக்கு நல்ல முறையில் வழி சொல்லும்.''
வியாழன் நாடு மிகவும் பக்கத்தில்தான் இருந்தது. அங்கே வியாழன், யுசிக்கியை வரவேற்கக் காத்திருந்ததுபோல தன் வீட்டு வாயிற்படியிலேயே நின்றிருந்தது. அது, யுசிக்கியைக் கண்டதும் கூறியது: ""வணக்கம் யுசிக்கி! நீ மிகவும் நல்ல பையன் என்றும், எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவன் என்றும் கேள்விப்பட்டேன். நீ எனக்கும் உதவி செய்வாயா? எனது தோட்டத்தில் களை பிடுங்க வேண்டிய வேலை இருக்கிறது.பிறகு, பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டிய வேலையும் இருக்கிறது.''
அந்த வேலையைச் செய்ய முதலில் யுசிக்கி விரும்பவில்லை. ஆனால், பூக்களெல்லாம் தலையசைத்து அவனுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவித்துவிட்டதால், அந்த வேலையைச் செய்து முடித்துவிடத் தீர்மானித்தான். அவன் மிகத் திறமையாக வேலை செய்ததைப் பார்த்துவிட்டு வியாழன் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அது யுசிக்கியிடம், ஞாயிறு நாடு இங்கிருந்து மூன்று நாள் பயணத் தொலைவில் இருப்பதாகச் சொல்லி, அங்கு செல்லும் வழியையும் காட்டியது.
உடனடியாக யுசிக்கி வெள்ளி நாட்டை அடைந்தான். அந்த நாளில் வெள்ளி, வீட்டிலிருந்த துணியையெல்லாம் அள்ளி வந்து சலவை எந்திரத்தில் போட்டு துவைத்துக்கொண்டிருந்தது. அன்று சலவை செய்யும் நாள். யுசிக்குக்கு சலவை எந்திரத்தில் வேலை செய்வது என்றால் மிகவும் ஆசை. வெள்ளி உதவி கேட்பதற்கு முன்பே அவன் தானாகவே வேலையில் இறங்கிவிட்டான். அவன் செய்த உதவியால் மகிழ்ச்சியடைந்த வெள்ளி அவனிடம் சொன்னது,""இங்கிருந்து நீ ஞாயிறு நாட்டை அடைவதற்கு இரண்டு நாட்களாகும். முதலில் சனி நாட்டிற்குப் போ. பிறகு, அங்கிருந்து ஞாயிறு நாட்டிற்குச் சென்றுவிடலாம்.''
யுசிக்கி, சனி நாட்டை அடைந்தபோது அங்கும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருப்பதைத் தெரிந்துகொண்டான். அவன் சனியிடம் கேட்டான்: ""வணக்கம் சனியே! ஞாயிறு நாட்டிற்குப் போகும் பாதை எதுவென்று சொல்வாயா?''
சனி சொன்னது: ""இங்கிருந்து ஒரு நாள் பயணம்தான். நீ முதலில் என் வீட்டைக் கழுவி சுத்தம் செய். பிறகு, சமையலறையில் கொஞ்சம் விறகுகளைக் கொண்டுபோய் வை. இந்த உதவிகளைச் செய்தால், நானும் உன்னுடன் வருகிறேன். நாம் இருவருமாகச் சேர்ந்தே ஞாயிறு நாட்டிற்குச் செல்லலாம்.''
யுசிக்கி, அப்படியும் இப்படியும் சுறுசுறுப்பாக ஓடி வேலை செய்தான். அவன் கடுமையாக உழைத்து, ஒரு வழியாக வேலைகளை முடித்தான். பிறகு, அலுப்புத்தீர ஒரு குளியல் போட்டான். ஞாயிறு நாட்டுக்குப் போகும்போது சுத்தமாக இருந்தால்தானே நல்லது.
ஞாயிறு நாட்டில் எல்லாமே அழகாக இருந்தன. எல்லோரையும்விட ஞாயிறு மிக அழகாக இருந்தது. உடனே, அங்கு ஞாயிறின் விருந்தாளிகள் வரத் தொடங்கினார்கள். வாரத்தின் மற்ற நாட்கள்தான் அவர்கள். யுசிக்குக்கு அவர்களை முன்பே தெரியும். ஞாயிறு அவனிடம் சொன்னது: ""வாரத்தின் மற்ற நாட்களில் யாரெல்லாம் கடுமையாக வேலை செய்கிறார்களோ, அவர்கள் மட்டும்தான் ஞாயிறு நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீ மட்டும் உதவி செய்யாமல் இருந்திருந்தால் வாரத்தின் மற்ற நாட்கள் அவரவர் வேலையை நல்ல விதமாக செய்து முடித்திருக்க மாட்டார்கள். அதற்காக நான் உன்னைப் பாராட்டுகிறேன்.''
அது சொன்னதைக் கேட்டு யுசிக்கி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பிறகு, அவர்கள் அனைவரும் சேர்ந்து நடனமாடத் தொடங்கினார்கள். அவன், தான் ஞாயிறு நாட்டிலேயே எப்போதும் தங்கியிருக்க வேண்டும் என்று கேட்கக்கூட மறந்துவிட்டான். இப்போதுதான் அவனுக்கு எல்லா நாட்களும் நண்பர்களாகிவிட்டார்களே!