மாலை நேரம் மனதில் மகிழ்ச்சி
மலர்ந்திட நாடுக ஆடு களத்தை
சோலை மலர்கள் தேடிடும் தேனீயாய்
சுறுசுறுப் பாக செயல்படு தம்பி!
உனக்குப் பிடித்த ஆட்டம் தேர்ந்திடு
ஒன்றி அதனைப் பயின்றிடு ஆடிடு
மனதும் உடலும் சுடரும் ஒளிரும்
வளரும் நலம்பல வாழ்வு சிறக்கும்!
ஆட்ட விதிகள் ஒழுங்கைத் தந்திடும்
அணியில் ஆடுதல் குடிமைப் பயிற்சி
ஆட்ட முடிவு வெற்றியோ தோல்வியோ
அனைத்தும் ஒன்றாம் மனத்திற்குப் பயிற்சி
ஆடலாம் பாடலாம் தாண்டலாம் குதிக்கலாம்
ஆற்றல் பெருக்கலாம் திறன்கள் வளர்க்கலாம்
ஓடலாம் உள்ள உறுதி பூணலாம்
உயர்வு தாழ்வு எண்ணா திருக்கலாம்
விழலாம் எழலாம் அடியும் படலாம்
வென்றிட வேட்கை புயலாய்த் தோன்றலாம்
பழகத் தோழமை பயத்தை வெல்லலாம்
பண்பு பலவும் வளர்த்துக் கொள்ளலாம்.
-பொன்மாரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.