முகப்பு
சிறுவர்மணி

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்!

ஒரு நாள், பிரம்பு எடுத்து வரும் தொழிலாளர்களுடன் தேவதானம் மலையில் ஏறிக் கொண்டிருந்தேன். இரண்டு பக்கமும் பாறைகளால் சுவர் கட்டிய மாதிரி உயரமான கரைகளுடன் ஆழமான ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதன் ஓரமாகப் போய்க்

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:49 PM
பகிர்:

ஒரு நாள், பிரம்பு எடுத்து வரும் தொழிலாளர்களுடன் தேவதானம் மலையில் ஏறிக் கொண்டிருந்தேன். இரண்டு பக்கமும் பாறைகளால் சுவர் கட்டிய மாதிரி உயரமான கரைகளுடன் ஆழமான ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதன் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தோம். கரையின் மேலிருந்த பாறைகள் சாய்வாக அமைந்திருந்தன. நடந்து செல்வதற்கே பயமாக இருந்தது. எந்நேரமும் பாறைகள் தலையில் விழுந்துவிடுமோ என்ற அச்சம்!

முதல் நாள் இரவு, ஒரு நண்பரைப் பார்க்க பிரம்புக் கடைப் பக்கம் சென்றிருந்தேன். அங்கு பிரம்புகளால் நாற்காலி, தொட்டில், ஊஞ்சல், சோபா போன்ற பலவிதப் பொருள்கள் செய்கிறார்கள்.

தேவதானம் சேத்தூர் பகுதிகளில் மலைகளுக்குப் பிரம்பு எடுக்கச் செல்வார்கள். எடுத்து வந்த பிரம்புகளை ஊரிலுள்ள ஒரு குடோனில் போட்டுவிட்டு வந்து, இங்கே சம்பளம் வாங்கிச் செல்வார்கள்.

பேசிக் கொண்டிருந்த பிரம்புத் தொழிலாளிகளிடம், "நாளை நானும் உங்களுடன் வருகிறேன்' என்றேன்.

"நாங்கள ரொம்ப உள்காட்டுக்குப் போவோம். நீங்கள் எல்லாம் அங்க வர முடியாதுங்க' என்றனர்.

எப்படியோ பேசிச் சமாளித்து, அவர்களுடன் மறுநாள் புறப்பட்டுவிட்டேன். அப்படிப் போகும்போது இடையில் ஒரு ஆற்றங்கரையில் கஞ்சி குடிக்க அமர்ந்தனர். பாறைப் பள்ளத்தில் தண்ணீர் விட்டு, கம்மஞ்சோற்றை அதில் போட்டுக் கரைத்து, அள்ளி அள்ளிக் குடித்தனர்.

நான், ரொட்டி சாப்பிட்டுவிட்டு, அவர்களுக்குக் கொஞ்சம் நிலக்கடலைப் பருப்பு கொடுத்தேன். அவர்கள் ஆனந்தமாக வாங்கிச் சாப்பிட்டனர்.

தென்வடலில் நீண்டிருக்கும் மேற்கு மலைத்தொடரில் அணைப்புச் சுவர் போல கிழக்கே பல இடங்களில் நீண்டிருக்கும் மலைகள்; உச்சியில் இரண்டு மூன்று அடி அகலமே உள்ள பாதை; அது வழிதான் போய் பிரம்பு எடுத்து வரவேண்டும். மெல்ல வழுக்கினாலும் பெரும் பள்ளத்தில் விழ வேண்டியதுதான். உடலெல்லாம் கண்டெடுக்க முடியாது, அவ்வளவு அடர்த்தியான காடு!

எங்கும் பச்சை... எதிலும் பச்சை! பச்சைப் போர்வையால் போர்த்திக் கொண்டிருந்தான் மலையரசன். புடவை சரிகை போல ஆங்காங்கே வெள்ளைக் கோடுகளாய் அருவிகள்!

உச்சி வேளை. மலை உச்சிக்கு வந்துவிட்டோம். கூட்டங்கூட்டமாக வந்த மேகச் சிதறல்கள் என்னையும் சேர்த்து எல்லாவற்றையும் சற்று நேரம் மூடியது. பின்னர், காற்று வந்தவுடன் கலைந்து போனது!

ஒரு பாறையில் அமர்ந்த கடலை மிட்டாய், பிஸ்கட்டுகளை அவர்களுக்குத் தந்தேன். எல்லோரும் சாப்பிட்டோம்.

"சரி, நீங்க இந்தப் பாறையில் உட்கார்ந்து இருங்க... நாங்க எறங்கி உள்காட்டுல பிரம்பு வெட்டி எடுத்துக்கிட்டு வாறோம்...' என்றனர்.

"நானும் வர்றேனே...'

"சரிப்பா! ஐயாவும் வரட்டும்...'

முழங்கால் அளவுக்கு, சீயக்காய் தூள் கரைத்துப் பூசிக் கொண்டனர். நானும் பூசிக் கொண்டேன். அட்டைப் புழுக்கள் காலில் ஏறாமல் இருக்க இந்த முன்னேற்பாடு!

பள்ளத்தில் செடிகளுக்கிடையில், மெல்லப் பதனமாக கால் வைத்து இறங்கினோம்.

மேகங்களோடு விளையாடும் பெரிய மரங்கள், கீழே வகைவகையான செடிகள், பலப்பல வடிவங்களில் இலைகளின் அமைப்புகள்...

மரங்களில் குரங்குகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தூரத்தில் மான்கள் துள்ளிக் கொண்டிருந்தன.

புதர் போன்ற இடங்களிலிருந்து பிரம்புகள் நூறடி சுற்றளவுக்கும் மேலாகப் படர்ந்து இருந்தன. அவர்கள் அவற்றை ஒரே அளவாக, முப்பது நாற்பது அடி உயரத்துக்கு ஒன்று போல வெட்டி, மடக்கி, வளைந்த இடத்தில் இரண்டடி உயர முளைக் கம்பு சொருகிக் கட்டி அந்தப் பகுதியை மட்டும் தோளில் வைத்துக்கொண்டு முளைக் காம்பைப் பிடித்துக் கொண்டு நடக்க, மீதிப் பகுதி பிரம்புகள் தரையில் உரசியபடியே வந்தன. இவ்வளவு செய்தும் அதன் சுமை சாதாரணமாகத் தூக்க முடியாததாகவே இருந்தது.

"தினமும் இப்படிக் கஷ்டமான வேலைதான் பார்க்கணுமா?' என்று கேட்டேன்.

"ஆமாய்யா... வயிறு இருக்கே! குடும்பம், புள்ளகுட்டி இருக்கே... ஒரு இடத்திலிருந்து, வேலை வாங்குறவன் நொச்சு நொச்சுன்னு, பக்கத்துலேயே இருந்து தொந்தரவு தராம, சுதந்திரமா வனத்தாயி மடியில் வேல பார்க்குறது எங்களுக்குக் கஷ்டமா தெரியலீங்க! பெரியசாமி பிள்ளையாரேன்னு கூப்புட்டா யானை, புலி கூட விலகிப் போயிடுங்கய்யா... இந்த வேலைதான் எங்களுக்குப் புடிச்சிருக்கு!'

"ஆஹா!' என்றேன்.

"எங்க வேலை தவிர, அநாவசியமா ஒரு பிராணிக்கும், ஒரு செடி கொடிக்கும்கூடத் தொந்தரவு தரமாட்டோம். இங்க எல்லாமே உயர்தர மூலிகைச் செடிகள். அந்தக் காத்து பட்டாலே நோயெல்லாம் ஓடிப்போயிடும்!'

அவர்கள் பேசிக்கொண்டே நடந்தனர்.

சிறிது தூரம் சென்ற பிறகு, ஒரு பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தோம்.

"ஐயா... நீங்க கூடவே வந்து சும்மாப் போறீங்க... இந்த மலைப் பொருள் என்ன வேணுமோ கேளுங்க... எடுத்துத் தர்றோம்!'

"எனக்கு ஒண்ணும் வேண்டாம், நான் சும்மா பாக்கத்தானே வந்தேன். மலைவன அழகை ரசிக்கத்தான் வந்தேன்!'

என்றபடியே எழுந்து மீண்டும் நடக்க

ஆரம்பித்தோம்.

சமதளக் காட்டை அடைந்தோம்.

தூரத்தில் ஒரு பாறையில் சாய்ந்துகொண்டு ஒரு யானை இருப்பத தெரிந்தது. ஆர்வத்துடன் நான் மெல்ல அந்தப் பக்கமாகச் சென்றேன்.

"ஐயா, அங்க போகவேண்டாம். யானை விரட்டும்' என்றார்கள்.

"யானை முதுகில் புழுதிவாரிப் போடுவதால் மழைத்தூறல் விழுந்து அதில் புல் முளைக்கும்... பார்த்திருக்கிறேன். இந்த யானை முதுகில் ஒரு கொடியே படர்ந்திருக்கே! அது என்னங்க?' என்று ஆச்சரியப்பட்டேன்.

ஒரு பள்ளத்திலிருந்து ஏதோ சத்தம்! இன்னும் கொஞ்சம் அருகே சென்று மெல்ல எட்டிப் பார்த்தேன்.

ஆளுயரக் கிடங்கில், குட்டி யானை சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருந்தது.

அவர்களையும் அருகே அழைத்தேன். வந்து பார்த்தனர்.

"குட்டியைக் காப்பாத்த வழி தெரியாமதான், தாய் யானை வருத்தத்தோடு பாறையில் சாய்ந்து கிடக்குது... பாறையிலிருந்து கொடிகள்தான் காத்துல ஆடி, யானை முதுகுல விழுந்தருக்குது!' என்றனர்.

"சரிங்க... குட்டிய மேலே தூக்கிவிட்டுட்டுப் போகலாங்க!'

"ஐயா, இப்பவே நேரமாச்சி! குட்டியத் தூக்கணுமுன்னா மண்ணை வெட்டி, கெடங்குக்குள்ள போடனும். அதுக்கு மம்பட்டியெல்லாம் வேணும்... நாளைக்கு வந்து நாங்க தூக்கி வுட்டுடறோம்...'

"பார்த்துட்டு எப்படிங்க சும்மா போறது!' என்றதும்,

அவர்கள் பல இடங்களில் இருந்த கற்களைத் தூக்கி வந்து குட்டியின் மேல படாமல் கிடங்கினுள் போட்டனர். நானும், என்னால முடிஞ்ச அளவுக்குக் கற்களைத் தூக்கிப் போட்டேன். இதைப் பார்த்த தாய் யானை, பலமாகப் பிளிறியது.

கிடங்கு மேடானதும், அவர்கள் உள்ளே இறங்கி குட்டியைத் தூக்கிவிட்டனர். நானும் இன்னொரு ஆளும் சேர்ந்து குட்டியின் முன்கால்களைப் பிடித்துத் தூக்கினோம். மேலே வந்த குட்டி, தாயைப் பார்த்து ஓடியது.

-தொடரும்

முழு கட்டுரையைப் படிக்க →