காட்டுக்குள்ளே கொண்டாட்டம்-19
நானும் ஜகன், கோபி என்ற இரண்டு மாணவர்களும் ஓர் ஆதிவாசியின் துணையுடன் சிவகிரி மேற்கு மலையிலுள்ள உள் வனத்திற்குச் சென்றிருந்தோம். வனத்திற்குள் விலங்குகள் நடமாட்டம் மற்றும் திருடர்கள் நடமாட்டம் ஆகியவற்றை
நானும் ஜகன், கோபி என்ற இரண்டு மாணவர்களும் ஓர் ஆதிவாசியின் துணையுடன் சிவகிரி மேற்கு மலையிலுள்ள உள் வனத்திற்குச் சென்றிருந்தோம்.
வனத்திற்குள் விலங்குகள் நடமாட்டம் மற்றும் திருடர்கள் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக முற்றிலும் மரத்தால் அமைக்கப்பட்ட ஒரு பரண் அமைக்கப்பட்டிருந்தது. மேலே செல்வதற்கு தொங்கு ஏணி ஒன்றும் அமைக்கப்பட்டிந்தது.
மேலே இருந்து நீண்ட தூரத்துக்கு வனத்தைப் பார்த்து ரசிக்கலாம். இது முற்றிலும் வனத்துறையினருக்கு உதவுவதற்காக அவர்களால் கட்டப்பட்டது. அந்த மாடத்தில் தங்குவதற்கு எங்களுக்கு ஆசை ஏற்பட்டது.
கீழே சுற்றிலும் ஒரு கஜ அகலத்தில் அகழி தோண்டப்பட்டு இருந்தது. அகழியைக் கடக்க பாலம் போல பலகை போட்டு இருந்தது. பலகை மீது கவனமாக நடந்து சென்று தொங்கு ஏணியில் ஏறி மேலே சென்றோம். மேலிருந்து பார்த்தால் வனம் அழகாக விரிந்து பரவியிருந்தது தெரிந்தது. மரங்கள் அடர்ந்த பகுதிகளும் அழகிய செடி, கொடிகளும் புதர்களும் ஆங்காங்கு பாறைகளுமாக இருந்தன.
மரங்களின் மேல் கூச்சலிட்டபடி மந்திகள் தாவித்தாவி ஓடிக் கொண்டிருந்தன. தூரத்தில் விலங்குகள் சத்தம். சுற்றிலும் சில் வண்டுகளின் ரீங்கார ஓசை... ஒன்றுபோல தாளம் தவறாத இசை போல கேட்டுக் கொண்டிருந்தது.
காட்டு மலர்களின் மணம் வீசிக் கொண்டிருந்தது.
நாங்கள் மேலிருந்து ஆர்வத்துடன் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தோம்.
எங்களுடன் வந்திருந்த ஆதிவாசி காடன் தூரத்துப் பாறைக் குகையைக் காட்டினான்.
பாறைக்குகையிலிருந்து புலி ஒன்று, இரண்டு குட்டிகளுடன் வெளியே வந்தது. குட்டிகள் இரண்டும் குகை வாயிலில் நின்றன. தாய்ப்புலி, சிறிது தூரம் சென்று, பாய்வதற்குத் தயாராக நின்றது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தோம்.
தாய்ப்புலி படீரெனப் பாய்ந்து, ஒரு குட்டியின் கழுத்தைக் கவ்வியது. குட்டி ஓலமிட்டது. தாய்ப்புலி அதை அப்படியே விட்டுவிட்டு மறுபடியும் தூரமாக விலகிச் சென்றது. சிறிது நேரம் கழித்து அடுத்த குட்டி மேல் பாய்ந்து, கழுத்தைக் கவ்வியது. குட்டி அலறவே அதையும் விட்டுவிட்டது.
இப்படிப் பல முறை நடந்தது. ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை.
காடன் விளக்கினான்.
""சாமி, எதிரிகளை எப்படிப் பதுங்கிப் பாய்ந்து, கழுத்தைப் பிடித்துக் கொல்ல வேண்டும் என்று தனது குட்டிகளுக்குத் தாய்ப்புலி பயிற்சி அளிக்கிறது. எப்படி எதிரிக்குத் தெரியாமல் செல்ல வேண்டும், எப்படிப் பதுங்க வேண்டும், பாய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது. இப்படி சில நாட்கள் நடக்கும். இதைக் காட்டத்தான் உங்களை அழைத்து வந்தேன்'' என்று கூறினான்.
மாணவர்கள் அதிசயித்துப் போனார்கள்...""டிஸ்கவரி சேனலைப் பார்ப்பதுபோல இருக்கிறது; இதெல்லாம் நேரில் பார்க்க முடியுமா? சார் புண்ணியத்துல, புலிக் குகைக்கு வந்து பார்க்கும் வாய்ப்பல்லவா கிடைத்தது''என்றார்கள்.
""பொறுங்கள்... காடன் இன்னும் பலவற்றைக் காட்டுவான்'' என்றேன்.
புலியும் குட்டிகளும் சென்றுவிட்டன.
சிறிது நேரம் கழித்து ஒரு ஆண் யானையும் பெண் யானையும் மேய்ந்தவாறே வந்து கொண்டிருந்தன.
""நான் சத்தம் போடுவேன்.. நீங்கள் பயப்படக்கூடாது!'' என்ற காடன், பெரிய புலி உறுமுவது போல சத்தமிட்டான்.
சத்தத்தைக் கேட்ட பெண் யானை பயந்து ஓடிவிட்டது. ஆண் யானை காதுகளை வளைத்து சத்தம் எங்கிருந்து வருகிறது என உன்னிப்பாகப் பார்த்தது. காடன் மறுபடியும் சத்தமிட்டான். இப்போது ஆண் யானையும் அந்த இடத்தைவிட்டு வேகமாக அகன்று போனது..
""என்ன இது? புலிக்கு யானை பயப்படுமா?'' ஒரு மாணவன் கேட்டான்.
""ஆமாம் சாமி... எதுக்கு வம்புல நாம அகப்படணும் என்று யானை விலகிப்போய்விடும்'' என்றான்.
""இவ்வளவு பெரிய யானை புலிக்கு பயப்படுவது அதிசயமே!'' என்று இன்னொரு மாணவன் ஆச்சரியப்பட்டான்.
மேகத்திரள்கள் வந்து சிறிது நேரம் எல்லாவற்றையும் மறைத்து, பின் அப்படியே போய்விட்டது. சிலு சிலுவென்று தூரல் விழுந்தது.
காற்றும் மெல்ல வீசியது.
""இருங்க சாமி, பெண் புலிபோல சத்தம் போடுகிறேன்'' என்ற காடன், உறுமலை மெல்ல நீட்டி ஒலித்தான். சிறிது நேரத்தில் ஒரு பெரிய புலி சுற்றும் முற்றும் பார்த்தவாறே நாங்கள் இருந்த மாடத்துக்குக் கீழே வந்து நின்று, நாலா பக்கமும் திரும்பிப் பார்த்தது.
காடன் யானை போலப் பெரிதாகப் பிளிறினான். சத்தம் கேட்ட புலி வேகமாக அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டது.
""என்னது இது! அப்போது புலிக்கு யானை பயப்பட்டது. இப்போது புலி யானைக்கு பயப்பட்டு ஓடிப் போச்சே!''
""காட்டுல ஒண்ணுக்கு ஒண்ணு பயந்து விலகிப்போறதாலதான் அவைகள் எல்லாம் நிம்மதியாக வாழுது'' என்றான் காடன்.
ஒரே சமயத்தில் மூன்று விதமான நிகழ்வுக் காட்சிகள், எனக்கே அதிசயமாக இருந்தது. மாணவர்களுக்கோ பயம் கலந்த ஆச்சரியம். கொண்டு வந்த சிற்றுண்டிகளைச் சாப்பிட்டோம்.
பேசிக் கொண்டிருந்தோம், கீழே மான்கள் கூட்டம் நடந்து போய்க்கொண்டிருந்தது.
""இப்ப புலிபோல சத்தம் போடுங்களேன்''என்றனர்.
""பாவம் சாமி மான்கள் நாலாபுறமும் பயந்து ஓடும்... வேண்டாம்.''
தண்ணீர் குடித்த பாட்டிலை வாங்கிச் சென்ற காடன், இறங்கி ஒரு மரத்தின் மீது ஏறி, தேன் கூட்டைக் கலைத்து, தேன் கொண்டு வந்து இலைகளில் ஊற்றித் தந்தான். ஆசை தீர நக்கித் தின்றோம்.
""இந்த மரங்கள் எல்லாம் எவ்வளவு அழகாயிருக்கு சார்!''
""மரங்கள் அழகு மட்டுமல்ல, மனித வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படை வசதிகள், எல்லாமே மரங்கள்தான் செய்யுது. தொட்டில் முதல் பாடை வரை மரங்களே தருகின்றன. வீடு கட்ட, உட்கார, படுக்க, உதவுவதும் மரங்களே... இலை, காய், கனி, கிழங்குகளால் உணவும், மருந்துமாகத் தருவதும் மரங்களே. இன்றைய உலகில் நாடுகளுக்குள் போட்டிகள், சண்டைகள். இதனால் அணு ஆயுதங்களை எல்லா நாடுகளும் தயாரிக்கின்றன. நாளை உலகப் பேர் வருமானால் உயிரினமே அழிந்துபோகும். அப்போதும் மரங்கள் அமைதியாக நம்மைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கும்'' என்றேன்.
""அருமையான விளக்கம் சார்'' என்றனர் மாணவர்கள்.
காடன் கொண்டு வந்திருந்த காட்டுப் பழங்களைத் தந்தான். தின்று கொண்டிருந்தோம்.
""சாமி... நான் இங்கே நடந்த ஒரு சம்பவத்தை விடுகதையாகச் சொல்கிறேன். நீங்க அதுக்கு பதில் சொல்லணும்.''
""சொன்னா என்ன தருவீங்க.''
""நயம் தேன் பாட்டில் வீட்டுக்குத் தருவேன்.''
""சரி சொல்லுங்க.''
நான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
""சாமி, இதே வனத்துல முன்னால் நடந்தது இது. முதல் நாள் ஒரு புலி செத்துப் போச்சு.. அது மறுநாள் ஒரு மான்குட்டியைக் கொன்னுட்டது, எப்படி?''
""சார் என்ன இது. நடக்காத புதிராகப் போடுறாரு இந்தாளு! செத்த புலி எப்படி மானைக் கொல்லும்?''
""யோசிச்சி சொல்லுங்க... உங்க மூணு பேருக்கும் தேன் பாட்டில் கிடைக்கும். சொல்லாட்டா காடனுக்கு, நீங்க தேன் பாட்டிலுக்கு பணம் தரணும்.''
மூன்று பேரும் என்ன யோசித்தும் பதில் தரமுடியவில்லை.
""சரி நீயே சொல்லிடு காடா...'' என்றேன் நான்.
""சாமி முதல் நாள் மழை பெஞ்சிருக்கு... புலி அடர்ந்த கிளையாகப் பாத்து மரத்துல ஏறி ரெட்டைக் கவட்டைக் கிளையில் படுத்துக்கிச்சி. இடியும் மின்னலும் பலமாக இருந்திருக்கு... மின்னல் தாக்கியதில் புலி அப்படியே கிளையிலேயே செத்துப் போச்சு! மறுநாள் பலமான காத்தடிச்சிருக்கு... காத்துக்கு மேலிருந்து கீழே விழுந்த புலியின் உடல், மேஞ்சிகிட்டிருந்த மான் குட்டி மேல சொத்தென்று விழுந்தது... அதன் பளு தாங்காமல் மான் குட்டி இறந்து போச்சி சரிதானா?''
""அட... அருமையான கதையில்லே'' மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
நான் நூறு ரூபாய் காடனுக்குத் தந்தேன். இறங்கி ஊருக்கு வந்தோம்.
-தொடரும்