இரு சூரியன்களைச் சுற்றும் கிரகம்!
நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு சூரியன். ஆனால் இரு சூரியன்களைச் சுற்றிவரும் கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கார்ல் úஸக
நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு சூரியன். ஆனால் இரு சூரியன்களைச் சுற்றிவரும் கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கார்ல் úஸகன் வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா விண்ணில் செலுத்திய கெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்களிலிருந்து இரு சூரியன்கள் உள்ள கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இந்த கிரகம் பூமியிலிருந்து 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. ஒளி வருடம் என்பது ஒளியானது ஒரு வருடத்தில் கடக்கும் தூரமாகும். அதாவது ஏறத்தாழ ஒன்பதரை லட்சம் கோடி கிலோமீட்டர் என்பது ஒரு ஒளிவருடம். அதுபோல 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் இந்த விண்ணியல் விநோதம் இருக்கிறது.
நம் அறிவுக்கு எட்டிய புதிய வரவான இந்த கிரகத்தைக் குறிப்பதற்கு ஒரு பெயர் வேண்டுமல்லவா? அதனால் இதற்கு கெப்லர் 16பி என தற்சமயத்துக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்தக் கிரகத்தின் அளவை விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த சனிக்கிரகத்தின் அளவு இந்தக் கிரகத்துக்கு.
இரண்டு சூரியன்களைச் சுற்றி வர இந்த கிரகம் எடுத்துக் கொள்ளும் காலம் 229 நாள்களாகும். இரண்டு சூரியன்கள் இருந்தாலும் இவை ஒரே திசையில் இருப்பதால் பூமியைப் போலவே இங்கு பகல் இரவு இருந்து வருகிறது.
ஆனால் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இதற்கு 41 நாள்கள் எடுத்துக் கொள்கின்றன. இதனால் 20 நாள்களுக்கு ஒரு முறை கிரகணம் ஏற்படுகிறது. கிரகணம் என்றால் பேருக்குதான். இரண்டுமே சூரியன்தானே, அதனால் பூமியில் நிகழும் நம்முடைய கிரகணத்தைப் போல நிழல் விழுவதில்லை.
இந்த சூரியன்கள் இரண்டும் நம்முடைய சூரியனை விடச் சிறியவை. ஒன்று நம் சூரியனைவிட முக்கால் பங்குக்கும் குறைவான அளவுள்ளது. மற்றொன்று கால் பங்குக்கும் குறைவான அளவுள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தில் பல வகை சூரியன்களும், அதாவது நட்சத்திரங்களும், அதனைச் சார்ந்த கிரகங்களும் உள்ளன என்பதையே இது காட்டுகிறது என்று ஒரு விஞ்ஞானி குறிப்பிட்டார்.
இந்த கெப்லர் விண்கலம் 2009-ல் விண்ணில் செலுத்தப்பட்டது. பிரபஞ்சத்தில் வேறு எங்காவது நம் பூமியைப் போன்ற வேறு கிரகங்கள் இருக்கின்றனவா என்று கண்டுபிடிப்பதுதான் இதன் பணி. நம் சூரிய குடும்பத்தைவிட்டு வெளியேறிப் பறந்து கொண்டே இருக்கிறது. இன்னும் நமக்குத் தொடர்ந்து தகவல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. அது அனுப்பி வரும் தகவலை ஆராய்ந்து வருகின்றனர்.
இங்கே உள்ள படத்தைப் பார்த்துவிட்டு, இந்தக் கிரகமும், அதன் சூரியன்களுடைய அசல் போட்டோ என்று நினைத்துவிடாதீர்கள்! ஒரு ஓவியர் தனது கற்பனையை ஒரு விண்கலத்தில் பறக்கவிட்டு இதை வரைந்திருக்கிறார்!
கொஞ்சம் விஞ்ஞானத்தைப் பார்த்தோம். கொஞ்சம் வேடிக்கையையும் கேட்கலாமா? இரண்டு சூரியன் இருக்கும் கிரகத்தில் நாம் வசித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று யோசித்தால் என்ன?
இரவு உறக்கத்துக்குப் பின் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பவர்கள், "நான் முதல் சூரியோதயத்துக்கே எழுந்துவிட்டேன்' என்று சொல்லலாம். இரண்டாவது சூரியோதய சமயத்தில் எழுந்திருப்பவரைப் பார்த்து, "தூங்குமூஞ்சி' என்று கேலி பண்ணலாம்!
மாலையில் விளையாடியது போதும் என்று அம்மா வீட்டுக்கு அழைத்தால், இரண்டாம் சூரியனும் இறங்கட்டுமே அம்மா, ப்ளீஸ்! என்று கெஞ்சலாம்!
உங்களுக்கு வேடிக்கையாக வேறு ஏதாவது தோன்றுகிறதா? எழுதி அனுப்புங்களேன்!