முகப்பு
சிறுவர்மணி

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்!

சேத்தூரைச் சேர்ந்த மேற்கு மலையின் உச்சியில் ஏலத்தோட்ட அலுவலகத்தில் ஒரு வாரம் தங்கினேன். உலகிலேயே தென்னக மேற்கு மலைகளில் விளையும் ஏலக்காய்தான் அதிக மணமுள்ளவை. விலையும் அதிகம்! ஏலச்செடிகள் மஞ்சள் செடி க

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:40 PM
பகிர்:

சேத்தூரைச் சேர்ந்த மேற்கு மலையின் உச்சியில் ஏலத்தோட்ட அலுவலகத்தில் ஒரு வாரம் தங்கினேன். உலகிலேயே தென்னக மேற்கு மலைகளில் விளையும் ஏலக்காய்தான் அதிக மணமுள்ளவை. விலையும் அதிகம்!

ஏலச்செடிகள் மஞ்சள் செடி குடும்பத்தைச் சேர்ந்தவை. தென்னங்கீற்று நீளத்தில் அகலமாக ஆள் உயரத்துக்கு வளரும். அடிப்பகுதியிலிருந்து நீண்டு வரும் மெல்லிய வில்லில் இருபக்கமும் காய்கள் அழகுடன் விளைந்திருக்கும். முற்றிய காய்களைப் பறித்து அறையின் மேல் கம்பி வலை அமைத்து, அதில் பரப்பி காயப்போடுவார்கள். கீழே அடுப்பு வைத்திருப்பார்கள். அதன் வெக்கையில் ஏலக்காய் காயும். நிறம் மாறாமல் இருக்க இப்படிச் செய்கிறார்கள்.

இதில் காய்களுக்கும் இலைகளுக்கும் சம்பந்தமே இல்லை.

தமிழில் ஒரு பிரபல நாவலாசிரியர் ""மலையில் ஏலக்காய் மரங்கள் இலைக்கு ஒரு காயாக தன் மேனி முழுவதும் கோர்த்து வைத்திருந்தன'' என்று எழுதியிருக்கிறார். ஏலம் செடியே தவிர மரமல்ல!

ஒரு நாள் தோட்ட வேலை பார்க்கும் கணவன், மனைவி இருவரும் விடுமுறையில் ஊருக்குப் போய்விட்டு வந்து கொண்டிருந்தனர். சேத்தூரிலிருந்து மலையடிவாரத்தில் 6 மைல் நடந்து வந்து, அதன் பிறகும் 6 மைல் ஒற்றையடிப் பாதையில் மலை ஏறி வர வேண்டும்.

ஒரு திருப்பத்தில், எதிரே யானை வந்துவிட்டது!

யானைக் கூட்டம் என்றால் ஒதுங்கி ஒளிந்திருந்து, தப்பிக்கலாம். ஒற்றை யானை அதுவும் கொம்பன் யானை, கோபமுடனேதான் இருக்கும்! தரையிலுள்ள சருகுகளை சேர்த்து தீ வைத்துவிட்டால், அது திரும்பிப் போய்விடும்.

திருப்பத்தில் திடீரென்று வந்ததனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. யானையைப் பார்த்ததும் ஓடத் தொடங்கினார்கள். அதுவும் பயங்கரமாகப் பிளிறியது.

இருவரும் சேர்ந்தே ஓடுவதாக எண்ணிக் கொண்டு, யானை பின்னால் துரத்தி வருவதாக நினைத்துக் கொண்டு, தனித்தனிப் பாதைகளில் தலை தெறிக்க ஓடினார்கள்.

நீண்ட தூரம் ஓடி நின்ற பின்தான் தெரிந்தது, கூட ஆளில்லை என்று.

கணவன் நேரே இறங்கி அருகே உள்ள கிராமம் சென்று, ""யானை விரட்டி வந்ததால் என் மனைவியைக் காணவில்லை. யானை என்ன செய்துவிட்டதோ? நீங்கள் கூட வந்து தேடிக் கொடுங்கள்'' என்று ஐந்தாறு நபர்களை அழைத்துக் கொண்டு வந்தார். 

அவர்கள் மலைப் பாதைகளில் தேடத் துவங்கினார்கள்.

அதே போல மனைவியும்  தான் இறங்கிய பக்கம் உள்ள கிராமத்தில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு தேடத்துவங்கினாள். இப்படித் தனித்தனியே தேடிக் கொண்டிருந்த  இரண்டு குழுக்களும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டது. ""நல்ல புருஷன் பொஞ்சாதிப்பா, இப்படி எங்களை அலைய வச்சிட்டீங்களே'' என்று கூறி, கூடவந்தவர்கள் இறங்கிவிட்டார்களாம்.

ஊர்காரர்கள் இருவர் வந்து சொன்ன கதை இது!

ஒரு மாணவன் தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதால் அப்பா அடித்துவிட்டாராம். அவன் கோபித்துக் கொண்டு வனத்திற்குள் வந்து அலைந்து கொண்டிருந்தான்.

எதையோ விழுங்கிவிட்டு மயக்கத்தில் சுருண்டு படுத்திருந்த மலைப்பாம்பின் மீது ஏறிவிட்டான். "மிதுக்'கென்றிருக்கவே, என்னவென்று பார்த்திருக்கிறான். மலைப்பாம்பு என்று தெரிந்தவுடன், பயந்து "ஐயோ' என்று அலறிக் கீழே விழுந்து, எழுந்து ஓடினானாம். ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து கொண்டான்.

குரங்குக்கூட்டம் மரக்கிளையில் அமர்ந்து விளையாட, கிளைகளிலிருந்து பழங்கள் கீழே விழ, அவற்றை எடுத்துத் தின்றான். நேரமாகிவிட்டது, பசி வேறு, மேலே ஏறிப்போக பயம்! ஊருக்குப் போகவோ மனதில்லை. "அம்மா அழுவாங்களே' என்ற நினைப்பு வர, இறங்கிவிடலாம் என்று நினைத்து ஒரு பாதையில் வந்து கொண்டிருந்தான்.

பையன் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும், அப்பா ஒரு கிராமத்துக்கு வந்து, சிலருக்கு பணம் தந்து, சில ஆள்களை அனுப்பி அடிவாரத்தில் தேடி வர அனுப்பிவிட்டார். "பையன் மேற்கே போவதைப் பார்த்தேன்' என்று யாரோ கூறினார்களாம். அவர்கள் சுற்றிச் சுற்றி அடிவாரப் பாதைகளில் தேடிக் கொண்டிருக்க, ஓர் இடத்தில் எதிரே பையன் வர, ""வாப்பா நீயும் தேடத்தான் வந்தியா? வா, வா... சேர்ந்து தேடுவோம்'' என்று அவனையும் அழைத்துக் கொண்டு மலைப்பாதைகளில் சுற்றி வந்திருக்கின்றனர்.

அந்த மாணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. "யாரைத்தான் தேடுகிறார்கள். நம்மையும் எதுக்கு அழைத்து வந்தார்கள்' என்ற குழப்பத்தில், "ஏதோ ஆள்கள் வந்ததால் பயமாவது நீங்கியதே' என்று அவன் அவர்கள் கூடவே சென்று கொண்டிருந்தான்.

இப்படிச் சென்று கொண்டிருந்த போது, இரண்டு காட்டு எருமை மாடுகள் எதிரே வந்ததால் பாறை மறைவில் ஒளிந்திருந்து, அது போனதும் மறுபடியும் நடந்தனர்.

அப்போது தோட்டத்திலிருந்து ஒரு ஆள் துணையுடன் நான் இறங்கி வந்து கொண்டிருந்தேன்.

அவர்களைப் பார்த்ததும்,""என்ன விஷயம் வனத்திற்குள்?'' என்று கேட்டேன்.""சேத்தூரு குருசாமி ஐயா பையன் கோபிச்சிட்டு வந்துட்டானாம். அவனைத்தான்

தேடுறோம்'' என்று கூற, அப்போது அந்தப் பையன் ""நான்தான் அவர் மகன்'' என்று கூறினான்.

""அடப்பாவிப்புள்ளே! அங்கனயே சொன்னா என்ன?''என்று கேட்க, ""நீங்க கேட்கல, நான் சொல்லல''என்று கூற எல்லோரும் சிரித்துவிட்டோம்.

ஒரு சமயம் ஒரு ஊர்க்காரர் ஏதோ மூலிகைச்செடி பறிக்க, ஒரு காட்டுவாசியை அழைத்துக் கொண்டு அடர்வனத்திற்குள் சென்று தேட ஆரம்பித்தனர்.

ஓர் இடத்தில் செந்நாய்கள் எதிரே வர பயந்து ஓடியதில், அவர்கள் பிரிந்துவிட்டனர்.

செந்நாய்கள் மூர்க்கத்தனம் கொண்டவை. அதோடு அறிவுமிக்கவை. ஒரு தலைவனின் கீழ் ஒன்றுபோல செயல்படுபவை. எதிரியை விரட்ட ஆங்காங்கே காத்திருந்து, எதிரி பயந்து ஓட ஆரம்பிக்கும்போது, அதைப் பிடிக்க ஓடும். அலுத்துவிட்டால் அடுத்துள்ள செந்நாய் ஓடும். ஆக எதிரி அலுத்துப்போய் ஓட முடியாத அளவுக்கு செய்துவிட்டு இவைகள் பிடித்துவிடும்! தந்திரமிக்கவை!

காட்டுவாசியும், அவரும் வேறுவேறு பாதைகளில் சென்று தேடினர். அவரைத் தேட

முடியாமல் காட்டுவாசி ஊர் திரும்பி வந்துவிட்டான்.

ஊர்க்காரர் சுற்றிச் சுற்றிவர, பாதை தெரியவில்லை. இறங்கினால் வேறு இடத்துக்குப்

போய்விட நேரிடுகிறது.

உணவுக்கு எந்த இடத்தில் பழ மரம் இருக்கும் என்பதும் தெரியாது. பட்டினி, அலைச்சல்!தண்ணீர் மட்டும் ஓடைகளில் குடித்துவிட்டு, இரவில் மரத்தடியில் படுத்துக் கொண்டு சுற்றிச்சுற்றி அலைந்து, பாதையே தெரியாமல் அழுது, ஏதும் செய்ய முடியாமல் தவித்திருக்கிறார்!

ஆதிவாசிகளே சில அடர்வனங்களில் பாதை தெரியாமல் மாதக் கணக்கில் துன்பப்படுவார்

களாம். இலை, காய், பழங்களைச் சாப்பிட்டு அலைவார்கள். ஊர்க்காரருக்கு அதுவும் தெரியாதே, சில காய்கள் விஷமுள்ளவைகளாக இருக்குமே!

இந்தக் காட்டுவாசி ஒரு வாரத்துக்குப் பிறகு, அவரைத் தேடி அதே வனத்துக்குள் சென்றிருக்கிறான். சுற்றி சுற்றித் தேடியபோது, ஒரு மரத்தில் தூக்குப்போட்டு இறந்த நிலையில்தான் அவரைப் பார்க்க முடிந்ததாம்.

வனங்களில் அதிசயம், ஆனந்தம் எல்லாம் இருந்தாலும் தனி ஆளாகச் செல்வதில் ஆபத்தும் உண்டு!

-தொடரும்

முழு கட்டுரையைப் படிக்க →