முகப்பு
சிறுவர்மணி

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்!- 17

இசையாசிரியர் ராமராஜு குடும்பத்துடன் பாபநாசம் அணைக்கட்டு, வானதீர்த்தம் அருவியில் குளித்து வர, வேன் அமர்த்தி செல்லத் திட்டமிட்டார்கள். உடனே அவர், 'கோதண்டம் மலையென்றால் ஆசைப்படுவாரே... அவரையும் அழைத்துச்

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:57 PM
பகிர்:

இசையாசிரியர் ராமராஜு குடும்பத்துடன் பாபநாசம் அணைக்கட்டு, வானதீர்த்தம் அருவியில் குளித்து வர, வேன் அமர்த்தி செல்லத் திட்டமிட்டார்கள்.

உடனே அவர், 'கோதண்டம் மலையென்றால் ஆசைப்படுவாரே... அவரையும் அழைத்துச் செல்வோம்' என்று கூறி, என்னை வந்து அழைத்தார். நானும் 'சரி' என்றேன்.

நான், துணைவியார், குறளமுதன், இளங்கோ என எல்லோரும் புறப்பட்டோம்.

முதலில் கீழ்ப்பகுதியிலுள்ள அகத்தியர் அருவிக்குச் சென்று குளித்தோம். அருகே கல்யாணதீர்த்தம். அங்கும் சென்றோம். குளித்து மகிழ்ந்தோம்.

'பாரதி, வ.உ.சி., சுப்பிரமணிய சுவா இவர்களின் நண்பரும், தேச விடுதலைப் போராட்டத் தியாகியும், கம்பனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, கம்பனை உலகின் மிகச்சிறந்த கவிஞர் என அடையாளம் காட்டியவரும், 'தமிழ்ச் சிறுகதை தந்தை' என புகழப்பட்டவருமான வ.வே.சு.ஐயர் இங்கே ஒருமுறை குளிக்க வந்தார். அவர் மகள் கால் இடறிக் கேணியில் விழுந்துவிட, காப்பாற்ற வ.வே.சு.ஐயரும் கேணியில் குதித்தார். இருவரும் இங்கேதான் காலமானார்கள்'' என்று நான் கூறினேன். அனைவரும் அஞ்சலி செலுத்தினோம். பின்னர் புறப்பட்டோம்.

மேலிருந்து பார்த்தால், அந்த இடத்தில் நிறைய அருவிகள். மேலே, பக்கவாட்டில் என்று பத்துக்கும் மேற்பட்ட அருவிகள் விழுந்துகொண்டேயிருந்தன. கண்கொள்ளாக் காட்சி! இப்படி ஓர் அழகான காட்சியை எங்கும் காண முடியாது; பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

வேன் டிரைவர் அவசரப்படுத்தினார். நான் புறப்படவில்லை, கால் மணி நேரம் அருவியை ரசித்துவிட்டுப் புறப்பட்டேன்.

வேன் கிளம்பியது. ஓர் இடத்தில் அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது - 'முண்டந்துறை புலிகள் சரணாலயம் - கவனமாகச் செல்லவும். ஹாரன் ஒலிக்க வேண்டாம். கேஸட் பாடல் போட வேண்டாம். அமைதியாகச் செல்லவும்' என்று அறிவித்தது.

நான் தூரத்து வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

'அப்பா ஒரு புலிகூட கண்ணுக்குத் தட்டுப்படவில்லையே''என்றான் குறளமுதன்.

'புலிகள் இரவில்தான் இரை தேட வரும், பகலில் குகைகளில் தூங்கிக் கொண்டிருக்கும்''என்றேன்.

குரங்குகள் மரங்களில் ஓடிக்கொண்டிருந்தன. அவை வித்தியாசமாக இருந்தன. கருப்பு நிறம், சின்ன உருவம்,சப்பை முகம் என பார்க்க அழகாகவே இருந்தன.

வேன் மலைப்பாதையில் வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது. ஓர் இடத்தில் 'சொரி முத்து அய்யனார் கோயில்' என எழுதியிருந்தது.

அனைவரும் இறங்கி, ஆற்றுக்குள்ளாக நடந்து, பாறைகளைச் தாண்டிச் சென்றோம். அகன்ற ஆறு தாமிரபரணியில் பாலாகப் பாய்ந்து கொண்டிருந்தது.

கோவில் அருகில் சென்றதும் எங்கு பார்த்தாலும் கோழித்தலைகள், கால்கள், ஆட்டுக்கால்கள் என ஒரே நாற்றம்... கோவில் ஒரு புனிதமான இடம். மனம் அமைதி பெறும். இது என்னெவென்றால்,ஏதோ சுடுகாட்டுக்கு வந்துவிட்ட உணர்வைத் தந்தது. நான் மட்டும் அப்படியே திரும்பிவிட்டேன்.

ஒரு பாறையில் அமர்ந்து கால்களைத் தண்ணீரில்விட்டு, மீன்களுக்கு கடலைப் பருப்புகளைப் போட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வனத்துக்குள் இருந்து மான்களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

அம்பாசமுத்திர அடிவாரக் கோவில் அருகில் சென்றால் பெரிய பெரிய மீன்கள் கூட்டம் கூட்டமாக வரும். நம் கால்களைக் கடிப்பது, கிச்சு கிச்சு மூட்டுவது போல இருக்கும். குரங்குகளும் அதிகமாக இருக்கும்.

இந்த மனிதர்கள் ஏன் வனங்களை அழித்து ஊராக்கினார்கள்? அதனால்தான் நோய்களால் துன்பப்படுகிறார்கள். மனதில் ஏதேதோ நினைவுகள்...

மற்றவர்களும் வந்துவிட, வேனில் புறப்பட்டோம். அணைக்கட்டிலிருந்து மின்சாரம் தயாரிக்க பெரிய குழாய்கள் மூலம் தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. தண்ணீர் திறந்துவிடும் இடத்தில் தண்ணீர் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.

வேனை நிறுத்திவிட்டு, அணைக்கட்டு நோக்கி நடந்து சென்றோம். மலை உச்சி! மிக அகன்ற இடத்தில் நீர்த்தேக்கம் கடல்போலக் காட்சியளித்தது.

சுற்றிலும் வனங்கள். தண்ணீருக்கு இடையே பட்டுப்போன மரங்கள் வெண்மையாகக் கிளைகளை நீட்டிக் கொண்டிருந்தன. அணைக்கட்டில் படகில் பயணித்தோம்.

படகில் கூட்டமாக இருந்தது. தூரத்து மலைப்பகுதி அருகில் படகு நிற்க அனைவரும் இறங்கினோம். நான் பின்பக்கமாக இறங்கிவிட்டேன்.

படகோட்டி,'ஐயோ! அங்கே இறங்க வேண்டாம்''எனக் கத்தினார்.

புதை சேற்றில் இடுப்பளவு புதைந்தேன்! பயந்துவிட்டேன்!

கையால் படகைப் பிடித்துக் கொண்டேன். படகோட்டிகள் வந்து என்னைத் தூக்கிவிட்டார்கள்.

உடலைக் கழுவிக்கொண்டு, வானதீர்த்த அருவிக்குப் போவதற்காக மலை ஏறினோம். மண்திட்டுப் பாதை சரியாக இல்லை. வனத்துறையும், சுற்றுலாத்துறையும் அதிலேயே படிகளாக வெட்டிவிடக்கூடாதா? என நினைத்துக் கொண்டேன்.

மலை உச்சி, அதிலே அருவி! அழகோ அழகு, வான தீர்த்தம்! ஆசைதீரக் குளித்தோம். என் துணைவியார் பாறை வழுக்கியதால், படீரென பின் பக்கமாக விழுந்தார்! நல்ல வேளை ரத்தக்காயம் ஏதும் ஏற்படவில்லை. உட்கார வைத்தோம். சிற்றுண்டி முடித்துவிட்டுப் புறப்பட்டோம்.

படகில், படகோட்டி அருகில் அமர்ந்து கொண்டேன். பேசிக்கொண்டு வரலாமே என்று! படகு புறப்பட்டது. அவர் ஓர் இடத்தைக் காட்டினார். கரை ஓரம் மரக்கிளையில் ஒரு முதலை படுத்திருந்தது.

கையால் தண்ணீரைத் தொட்டு இரைத்தேன். 'கையைத் தண்ணீரில் வைக்க வேண்டாம்'என்றவர், முன்பு நடந்த சம்பவம் ஒன்றைக் கூறினார்.

'படகு மெல்ல வந்துகொண்டிருந்தது. ஒரு பெண் தண்ணீரில் கை விட்டவாறே வந்தாராம். படக்கென்று ஒரு முதலை அவள் கையைப் பற்றிக்கொண்டதாம். அவள் 'ஐயோ' என்று அலறவே, படகை நிறுத்தினார்களாம். முதலை அவளை உள்ளே இழுத்ததாம்.

அப்போது படகோட்டி,'இவளைத் தண்ணீரில் தள்ளிவிட்டுடனும்... இல்லையென்றால், முதலை இழுத்துப் படகு கவிழ்ந்திடும். எல்லோருக்கும் ஆபத்து! என்ன செய்யலாம் சொல்லுங்க!'என்றாராம்.

உடனே ஒரு கிராமத்துக்காரர் படகில் இருந்த பெரிய கத்தியை எடுத்து, அந்தப் பெண்ணின் முழங்கையை வெட்டிவிட்டாராம். கிடைத்த கையோடு முதலை போய்விட்டதாம்! துணியை நனைத்து அவளின் கையில் கட்டுப் போட்டபிறகு படகு

புறப்பட்டதாம். கேட்டதும் மனது கனத்துச் சிரமப்பட்டது.

எங்கள் படகு கரையைத் தொட்டது... இறங்கி வேனில் புறப்பட்டோம்.              

-தொடரும்

முழு கட்டுரையைப் படிக்க →