முகப்பு
சிறுவர்மணி

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்!: 12

தென்காசி நகருக்குக் கிழக்கே சின்ன கிராமம் அகரக்குடி. அங்கே திருவள்ளுவர் மன்ற விழா நடைபெற இருந்தது. பேச அழைத்திருந்தார்கள். குறளின் முதல் சொல்லில் ஓர் ஊர். அதனாலேயே அந்த ஊர் பிடித்திருந்தது. ஒரு பள்ளிய

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:35 PM
பகிர்:

தென்காசி நகருக்குக் கிழக்கே சின்ன கிராமம் அகரக்குடி. அங்கே திருவள்ளுவர் மன்ற விழா நடைபெற இருந்தது. பேச அழைத்திருந்தார்கள். குறளின் முதல் சொல்லில் ஓர் ஊர். அதனாலேயே அந்த ஊர் பிடித்திருந்தது.

ஒரு பள்ளியில் விழா, கூட்டமும் பரவாயில்லை. பேசினேன்... விழா முடிந்து, பள்ளியிலேயே தங்கிவிட்டேன்.

காலையில் எழுந்து உணவு முடிந்ததும்,""அருகே தொல்பொருள் சம்பந்தமாக ஏதேனும் இடம் இருக்கிறதா?'' எனக் கேட்டேன்.

""சிறிது தூரத்தில் ஒரு சிறிய குன்று உள்ளது. அதில் ஒரு குகை. பஞ்சபாண்டவர்கள் குகை என்று சொல்வோம்'' என்றனர்.

அழைத்துச் செல்லுமாறு கேட்டேன். சைக்கிளின் பின்னால் அமரவைத்து அழைத்துச் சென்றனர்.

அந்தக் குன்றில் ஒரு குகை, உள்ளே ஐந்து படுக்கைகள்... எல்லாம் பாறையிலேயே செதுக்கப்பட்டு இருந்தன. அருகே கேணி. சமண முனிவர்கள் தங்கிய குகை என்று தெரிந்தது. குன்றில், வீடு கட்டக் கல் உடைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில காலத்தில் இந்தக் குகையையும் உடைத்துவிடுவார்கள் எனத் தெரிந்தது.

உடனே தமிழறிஞர் சமண மதத்தலைவர் ஸ்ரீபால் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். "இது சமண முனிவர்கள் தங்கிய குகை, இதை உடைத்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்' என்று. அவரும் உடனே பதில் எழுதினார். "தொல்பொருள் பாதுகாப்புத் துறைக்கு கடிதம் எழுதிவிட்டேன். அவர்கள் இனி பார்த்துக் கொள்வார்கள்' என்று.

சமணர்கள், தமிழ் இலக்கியத்துக்கு செய்த சேவையை மறக்க முடியுமா என்ன?

ஒரு தடவை நானும் ஆசான் பன்மொழிப் புலவர் ஜகந்நாதராஜா அவர்களும், கழுகுமலை சமண சிற்பங்களைக் காணச் சென்றிருந்தோம்.

அங்கே வடநாட்டிலிருந்து சமண முனிவர்கள் நான்கு பேர் (திகம்பரர்கள்) வந்து தங்கியிருந்தனர்.

சாதுர்மாத விரதம் இருந்தனர். அவர்களோடு சமணர்களின் இலக்கியம் குறித்துப் பேசினோம். விரதம் முடிந்து வரும்போது, ராஜபாளையம் வருமாறு அழைத்திருந்தோம். "சரி' என்றனர்.

அவர்கள் உடை அணியாத துறவிகள்.

எங்கள் ஊரில் தங்க, கூட்டம் நடத்த ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து அழைப்பிதழ் எல்லாம் விநியோகித்து விட்டோம்.

அதற்குள் ஊரில், ஆடையில்லாத சாமியார்களுக்கு இடம் தரக்கூடாது என்ற பிரச்னை எழுந்தது. இடம் மறுக்கப்பட்டது.

ஊர் கடைசியில் சின்ன மடத்தில் தங்க வைத்தோம். அவர்கள் செல்கையில் சில ஊர்களில் கல்லெறிகள்கூட நடந்துவிட்டது.

அகரக்குடியிலிருந்து குற்றாலம் செல்ல, காட்டு வழியாக நடந்து சென்றேன்.

இமயமலை, ரிஷிகேசம் சென்ற நினைவு வந்தது. ஆதர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா மாநாட்டுக்குத் தில்லி சென்றபோது, ரிசிகேசம் செல்ல ஏற்பாடு. பஸ்ஸில் ரிசிகேசம் சென்று கங்கைக் கரையில், அக்கரை செல்ல லக்ஷ்மண் ஜுவாலா என்ற தொங்கு பாலத்தைக் கடந்து சென்றோம்.

நதியின் இரண்டு பக்கங்களிலும் பெரிய பெரிய கட்டிடங்கள், எல்லாமே மடங்கள்.

சிவன், சக்தி, முருகன், விநாயகர், ஆஞ்சநேயர், ராமன், கண்ணன், விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி என்று தனித்தனியாக வழிபாடு செய்யும் மதப்பிரிவுகள். யோகா, தியானம், விரதம் இவைகளுக்குப் பயிற்சி தரும் மடங்கள். இலவசமாக உணவு கிடைக்கும். அங்கேயே தங்கியும் விடலாம்.

நாங்கள் சென்றது அதிகாலை நேரம்... குளிர் அதிகம்! நதியில் தண்ணீர் ஐஸôக ஓடிக் கொண்டிருந்தது. குளிக்க பயந்து, திரும்பிவிட்டோம்.

ஹரித்துவாரில் கங்கையில் தண்ணீர் வெகு வேகமாகப் பாய்கிறது. கம்பிகளைப் பிடித்துக் கொண்டுதான் குளிக்க வேண்டும். ஐஸ் நீரில் குளித்தோம்.

அந்தக் குளிர் நீரிலும், சிலர் நின்று பக்தர்கள் நதியில் வீசும் காசுகளை மண்ணோடு அள்ளி சேகரிக்கிறார்கள். எதிர்க்கடையில் 50 காசுக்கு எண்ணெய் வாங்கித் தலையில் தேய்த்துக் கொண்டேன். எண்ணெய் நாற்றம் தாளவில்லை... தலை சுற்றல், வயிறு குமட்டலாக இருந்தது. கடுகு எண்ணெய்யாம்! கடையில் பேப்பர் வாங்கித் தலை எண்ணெய்யைத் தேய்த்து எடுத்தேன்.

குற்றாலம் நடந்து செல்கையில் அந்த நினைவு வந்து போனது.

ஓர் இடத்தில் ஒருவர் பனைமரத்திலிருந்து பதநீர் இறக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இரண்டு ரூபாய் கொடுத்து, தண்ணீர் கலக்காத பதநீர் வாங்கிப் பருகினேன்.

அவரது பையனுக்கு சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு இருந்தது. ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

அவர் ""எந்த டாக்டரிடம் இப்போ கூட்டிப்போக'' என்று முனகிக் கொண்டிருந்தார்.

நான் என் கைக்குட்டையை நனைத்து பையன் மேல் படிந்திருந்த ரத்தத்தைத் துடைத்து எடுத்தேன்.

அவரிடம் ""மரம் ஏறி, இளம் குருத்து ஓரத்தில் பனம்பஞ்சு இருக்கும் அதை எடுத்து வாரும்'' என்றேன்.

பனம்பஞ்சை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டிவிட்டேன்.

""டாக்டரிடம் போக வேண்டாம். இரண்டு நாளில் ஆறிப்போகும்'' என்றேன்.

""பரம்பரை பரம்பரையாய் மரம் ஏறிக்கிட்டிருக்கேன். எனக்கு இந்த மருந்து தெரியாமல் போச்சே'' என்றவர், நன்றி கூறினார்.

நான் தென்காசி வந்து, டவுன் பஸ்ஸில் ஏறினேன். ஐந்தருவி சென்று இறங்கினேன். வயல் பக்கமாக நடந்து போனேன். வல்லாறை இலை பறித்து வர எண்ணம்!

தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டேன்,-

""ஐயா, வல்லாறை எங்கே பறிக்கலாம்?''

""சீசன் சமயம், அருவிப்பக்கம் பாக்கெட் போட்டு அஞ்சு ரூபாய்ன்னு விக்கிறதுக்காக எல்லாத்தையும் பறிச்சிட்டுப் போயிட்டாங்களே! மேற்கே போங்க... தோப்புக்குள்ள அல்லது அடிவாரத்துல கிடைக்கும்'' என்றார்.

வல்லாரை ஒரு அற்புதை மூலிகை! உடல் குளிர்ச்சியாகும். நினைவாற்றல் பெருகும். குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் நல்லது!

தோப்புகளையும் தாண்டி மலையடிவாரம் வந்துவிட்டேன். படர்ந்திருந்த வல்லாரையைப் பறித்துப் பையை நிரப்பினேன். ஐந்தருவி விழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. குறுக்கே நடந்து போனால் ஐந்தருவியை அடைந்துவிடலாம்.

ஓர் இடத்தில் காட்டுக் கோழி ஒன்று "கெக் கெக்' என்று மேய்ந்து கொண்டே வந்தது. அதைக் கண்டு கொண்டதால் அதன் பின்னை ஒரு மலைப்பாம்பு வந்தது.

""ச்சூ''என கத்தினேன். கோழி பறந்துவிட்டது! பாம்பு ஏமாந்து திரும்பியது!

நான் கோழியைக் காப்பாற்றினேனா? பாம்பின் இரையைத் தடுத்தேனா? குழப்பமாக இருந்தது!

நடந்தேன்....

-தொடரும்

முழு கட்டுரையைப் படிக்க →