குழந்தைப் பாடல்: வாழை
தண்டும் காயும் இலையும் பூவும் தந்து நம்மைக் காக்குமே உண்டு மகிழ இனிக்கும் கனியை உவகை யோடு வழங்குமே வெட்டி வெட்டிச் சாய்த்த போதும் வேரில் கன்றை ஈனுமே நட்டு வளர்த்த மனிதர் தமக்கு நன்றி யினைச்
தண்டும் காயும் இலையும் பூவும்
தந்து நம்மைக் காக்குமே
உண்டு மகிழ இனிக்கும் கனியை
உவகை யோடு வழங்குமே
வெட்டி வெட்டிச் சாய்த்த போதும்
வேரில் கன்றை ஈனுமே
நட்டு வளர்த்த மனிதர் தமக்கு
நன்றி யினைச் சொல்லுமே
உறுப்பு தானம் வழங்கும் முறையை
உலகில் முதலில் சொன்னது
பொறுப்பாய் இதனை மனிதர் தாமும்
புரிந்து கொண்டால் நல்லது
ஏழை எளியோர் மேலோர் கீழோர்
வாழை பார்ப்ப தில்லையே
தாழ்வு உயர்வு பார்ப்போர் வாழ்வில்
தீரா தென்றும் தொல்லையே
வாழ்வில் வேண்டும் எளிமை என்று
வாழை நமக்குக் காட்டுமே
வாழை போல நீயும் வாழ்ந்தால்
வாழ்த்தும் உன்னை உலகமே!