முகப்பு
சிறுவர்மணி

பறவையைத் தொடர்வோம்...

ஊசிவால் வாத்து அளவில் பெரியது. வால் நீண்டு ஊசி போல இருப்பதால்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

ஊசிவால் வாத்து
ஊசிவால் வாத்து அளவில் பெரியது. வால் நீண்டு ஊசி போல இருப்பதால் இந்தப் பெயர். அலகு நீலச் சாம்பல் நிறத்தில் இருக்கும். கால்களும் சாம்பல் நிறம்தான். சாக்லேட் நிறத்தில் இதன் தலை இருக்கும். சாக்லேட் நிறம் உடலின் பெரும்பகுதியிலும் இருக்கும். சிறகை விரித்தால் 95 செ.மீ. வரை இருக்கும். எடை 1135 கிராம்.

நீர் நிலைகளில் இந்தப் பறவையைப் பார்க்கலாம். நன்றாக நீச்சல் அடிக்கும். வானிலும் அழகாகப் பறக்கும். நீர் நிலைகளிலுள்ள செடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கும். சமயம் பார்த்து மீன்களைப் பிடித்து உண்ணும்.

ஏழு முதல் 9 முட்டைகள் வரை ஒரே சமயத்தில் இடும். முட்டைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். 24 நாட்களுக்குள் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவரும்.

ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் இதைப் பார்க்கலாம்.

கரண்டிவாயன்
கரண்டிவாயன் கொக்கு இனத்தைச் சேர்ந்தது. படத்தைப் பார்த்தவுடன் புரிந்திருக்கும் எதற்காக இந்தப் பெயர் என்று!

முழுவதும் வெள்ளை நிறத்தில் இருக்கும். கால்கள் மற்றும் அலகு மட்டும் கருப்பாக இருக்கும். அலகின் முனை மட்டும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நீண்ட கழுத்தைக் கொண்டிருக்கும். பறக்கும் போது கழுத்தை நீட்டிக் கொண்டு பறக்கும்.

சகதி நிறைந்த நீர் நிலைகளில் வசிக்கும். புழுக்கள், தவளைக் குஞ்சுகள், சிறிய மீன்கள் ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடும்.

இங்கிலாந்து, ஸ்பெயின், ஜப்பான், நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் காணப்படும் பறவை.

சீழ்க்கை சிறகி
சீழ்க்கை சிறகியின் குரல் சீட்டியடிப்பது போல இருப்பதால் இந்தப் பெயர்.

முழுவதும் பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் பறவை. உடலின் வயிற்றுப் பகுதி மட்டும் வெண்ணிறத்தில் இருக்கும்.

ஒரு சமயத்தில்  ஏழு முதல் 12 வெண்ணிற முட்டைகளை இடும். குஞ்சுகள் பொறிப்பதற்கு 24 நாட்கள் ஆகும்.

வீடுகளில் எளிதாக இதை வளர்க்கலாம். நீங்கள் விசில் அடித்தால் பதிலுக்கு விசில் அடிக்கும்.

இந்தியாவின் பல பகுதிகளில் இந்தப் பறவையைப் பார்க்கலாம். நேபாளம், ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா,மியான்மர், தாய்லாந்து மற்றும் வியத்நாம் நாடுகளிலும் இவை அதிகமாகக் காணப்படும். அந்தமான், நிகோபார் மற்றும் மாலத்தீவுகளிலும் இந்தப் பறவையைப் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.