பறவையைத் தொடர்வோம்...
பழுப்புத்தலை கடல் காக்கை மத்திய ஆசியாவில் (துர்க்மேனிஸ்தானிலிருந்து மங்கோலியா வரை) அதிகம் காணப்படும் பறவை பழுப்புத்தலை கடல் காக்கை. சதுப்பு நிலங்களிலும், நீர்நிலைகளிலும் தீவுகளிலும் வாழும் பறவை. வாத்த
பழுப்புத்தலை கடல் காக்கை
மத்திய ஆசியாவில் (துர்க்மேனிஸ்தானிலிருந்து மங்கோலியா வரை) அதிகம் காணப்படும் பறவை பழுப்புத்தலை கடல் காக்கை. சதுப்பு நிலங்களிலும், நீர்நிலைகளிலும் தீவுகளிலும் வாழும் பறவை.
வாத்தைப் போன்ற தோற்றத்திலிருக்கும் இதன் தலை மட்டும் பழுப்பு நிறத்திலிருக்கும். உடல் வெண்சாம்பல் நிறத்திலும் அலகு மற்றும் கால்கள் சிவப்பு நிறத்திலுமிருக்கும்.
அதிக சத்தமிடும் இந்தப் பறவை, சிறிய மீன்கள் மற்றும் புழு, பூச்சிகளைச் சாப்பிடும்.
குழுக்களாக வாழும் பறவை.
விசிறிவால் உள்ளான்
ஐரோப்பா, ஆப்ரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் விசிறிவால் உள்ளானைக் காணலாம்.
25 முதல் 27 செ.மீ. நீளம் இருக்கும்! சிறகை விரித்தால் 44 முதல் 47 செ.மீ. வரை இருக்கும்.
சிறிய குட்டையான கால்களைக் கொண்டிருக்கும். ஆனால் இதன் அலகு மட்டும் மகா நீளம்! 5.5 முதல் 7 செ.மீ. வரை நீண்டிருக்கும். இந்தப் பறவையின் வால் பகுதி விசிறி மடிப்பைப் போல இருப்பதால் இந்தப் பெயர்.
உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் வைக்கோல் நிறத்தில் வரி வரியாக இருக்கும்.
சேறும் சகதியுமாக இருக்குமிடத்தில் வசிக்கும். சேற்றைக் கிளறி அதிலுள்ள பூச்சிகளை உணவாகக் கொள்ளும்.
இப் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் அரிய இனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குட்டைக் கிளி அல்லது தொங்கும் கிளி
இந்தியா, நேபாளம், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஸ்ரீலங்காவில் இந்தக் குட்டைக்கிளியைப் பார்க்கலாம்.
எல்லாவகையிலும் கிளி போலவே இருக்கும். ஆனால் மிகவும் குள்ளமான, சிறிய பறவை. வாழைப் பூவிலுள்ள தேனைச் சுவைப்பதற்காகப் பெரும்பாலும் தொங்கிக் கொண்டே முயற்சிப்பதால் இதற்கு தொங்கும் கிளி என்ற பெயரும் உண்டு. 14 செ.மீ. நீளமே இருக்கும்.
மரப் பொந்துகளில் வசிக்கும். ஒரு சமயத்தில் 3 முட்டைகள் வரை இடும். 20 நாட்களில் குஞ்சு பொறிக்கும். தாயின் கூட்டில் இருக்கும் குஞ்சுகள் 33 நாட்களுக்குள் கூட்டைவிட்டு வெளியேறிவிடும்.