முகப்பு
சிறுவர்மணி

ஆசியப் போட்டியில் ஆறு பதக்கங்கள்

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுகளில் சிலம்பமும் ஒன்று. சிலம்பம் தற்காப்புக் கலையும் கூட. மற்ற விளையாட்டுக்களைப்போல இதனை விரைவில் கற்பது என்பது கஷ்டமான விஷயம்தான்.

Updated On : 5 ஜூலை, 2013 at 8:24 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:09 PM

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுகளில் சிலம்பமும் ஒன்று. சிலம்பம் தற்காப்புக் கலையும் கூட. மற்ற விளையாட்டுக்களைப்போல இதனை விரைவில் கற்பது என்பது கஷ்டமான விஷயம்தான். முதலில் கம்பு சுற்றுவதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும். எதிராளியின் நடவடிக்கையை கவனித்து செயல்பட வேண்டும்.
 இந்த சிலம்ப விளையாட்டில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச்சேர்ந்த பள்ளி மாணவர் ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் ஆறு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். விஜயமுனுசாமி-சாந்தலட்சுமி தம்பதியின் மகன் வி.கற்குவேல்ராஜா(12) ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புக்குச் செல்கிறார். இச் சிறுவனே சிலம்பத்தில் சாதனை புரிந்துள்ளார்.
 இதுகுறித்து ராஜாவுக்குப் பயிற்சி அளித்துவரும் டி.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது: கற்குவேல்ராஜா கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னிடம் பயிற்சி பெற்று வருகிறான். சென்னதும் உடனே புரிந்து கொண்டு விளையாடுவான். முதன்முதலில் 2012-ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 8-வது தேசிய சிலம்ப சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியில் 11-12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கம்புச் சண்டையில் தங்கப்பதக்கமும், இரட்டை கம்புச் சண்டையில் வெள்ளிப்பதக்கமும், வாள்வீச்சில் வெண்கலப் பதக்கமும் பெற்றான்.
 பின்னர், 2013-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற 9-ஆவது தேசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றை கம்புவீச்சில் தங்கப்பதக்கமும், சுருள்வாள் வீச்சில் வெள்ளிப்பதக்கமும், வாள்வீச்சில் வெண்கலப் பதக்கமும் பெற்றான். பின்னர் இந்த ஆண்டு மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து 7பேர் கலந்து கொண்டு மொத்தம் 18 பதக்கங்களைப் பெற்றனர். இதில் கற்குவேல்ராஜா ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு வீச்சில் வெள்ளியும், வாள்வீச்ச்சு, சுருள்வாள் வீச்சு, வேல்கம்புச் சண்டை, கம்புச் சண்டை ஆகியவற்றில் வெண்கலப் பதக்கமும் பெற்றான். சொல்லிக் கொடுப்பதை விரைவில் புரிந்து கொள்ளும் சக்தி, ஆர்வம் ஆகியவை இவனுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.
 வெற்றி குறித்து கற்குவேல்ராஜாவிடம் கேட்டபோது: நான் வீட்டில் இருக்கும்போது கையில் கிடைக்கும் கம்பைச் சுற்றுவேன். இதைக் கவனித்துக் கொண்டிருந்த எனது பெற்றோர் சிலம்பு ஆசான் கிருஷ்ணமூர்த்தியிடம் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொடுத்த பயிற்சியும், ஊக்கமும்தான் எனக்கு பெரிதும் உதவியது என்றார்.
 மலேசியாவில் இறுதிப் போட்டியில் எந்த நாட்டு வீரருடனன் மோதினீர்கள்?
 இந்தியா, மலேசியா, வங்க தேசம்,நேபாளம், இலங்கை வீரர்கள் கலந்து கொண்டனர். நான் அனைத்து இறுதிப் போட்டியிலும் மலேசிய நாட்டு வீரர்களுடன்தான் விளையாடினேன். அது மிகவும் சவாலாக இருந்தது. மலேசியாவில் 2-வது ஆசியன் சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளச் செல்லும்போது தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன். எனினும், வெள்ளி,வெண்கலப் பதக்கம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் சர்வதேச சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
 சந்திப்பு, புகைப்படம்:
 எஸ்.பாலசுந்தரராஜ். சிவகாசி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.