பறவையைத் தொடர்வோம்...
செந்தார் பைங்கிளி, கிளி இனத்தைச் சேர்ந்த பறவை. வீடுகளில் இதை வளர்க்கலாம். நம்மோடு எளிதில் பழகிவிடும். இந்த இந்தியக் கிளிகளை பழங்கால கிரேக்கர்கள் தங்கள் வீடுகளில் வளர்த்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
• செந்தார் பைங்கிளி
செந்தார் பைங்கிளி, கிளி இனத்தைச் சேர்ந்த பறவை. வீடுகளில் இதை வளர்க்கலாம். நம்மோடு எளிதில் பழகிவிடும். இந்த இந்தியக் கிளிகளை பழங்கால கிரேக்கர்கள் தங்கள் வீடுகளில் வளர்த்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. நமது குரலைக் காப்பியடித்துப் பேசக் கூடிய பறவை.
40 செ.மீ. நீளப் பறவை. சிறகுகளை விரித்தால் 18 செ.மீ. வரை இருக்கும். இதன் வால் பகுதியே உடலின் நீளத்தில் பாதியைக் கொண்டுவிடும். எல்லாவகையிலும் கிளியைப் போலவே இருக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி ஒரு சிவப்பு வளையம் காணப்படும். இதனால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது.
இந்தியாவெங்கிலும் மற்றும் ஆப்ரிக்காவின் மையப் பகுதியிலும் அதிகம் காணப்படும் பறவை.
பூவின் மொட்டுகள், சிறிய பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளை விரும்பிச் சாப்பிடும். மரப் பொந்துகளில் வசிக்கும்.
• பச்சைவாயன்
பாடும் குயில் இனத்தைச் சேர்ந்தது இந்த பச்சைவாயன். தென்னிந்தியாவிலும் ஸ்ரீலங்காவிலும் அதிகம் காணப்படும் பறவையினம். இதன் முகம் நீல நிறத்தில் இருக்கும். இதனால் இதற்கு நீலமுகத்தான் என்ற பெயரும் உண்டு.
காடுகளின் வெளிப்புறங்களில் வசிக்கும்.
39 செ.மீ. நீளப் பறவை. முதுகுப் பகுதியும் தலையும் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். நீண்ட வாலில் வெண்மையும் பச்சையும் கலந்து காணப்படும். இதனால் இது பறக்கும்போது பார்க்க அழகாக இருக்கும். தொண்டையும் வயிற்றுப் பகுதியும் வெளிர் பச்சை நிறம். கண்களைச் சுற்றி கருநீல வண்ணம் காணப்படும். இதன் அலகு முழுவதும் பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்குப் பச்சைவாயன் என்ற பெயர் வந்தது.
புழு பூச்சிகள், கம்பளிப் பூச்சிகள் மற்றும் சிறிய பழங்களை விரும்பிச் சாப்பிடும்.
ஒரு சமயத்தில் 2 முதல் 3 முட்டைகள் வரை இடும்.
• செவ்வாயன்
செவ்வாயனும் குயிலினம்தான். இந்தியாவில் அதிகம் காணப்படும். வங்காள தேசம், ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தானிலும் இந்தப் பறவையைப் பார்க்கலாம்.
சற்றே பெரிய பறவை. 42 செ.மீ. நீளம் இருக்கும். உடல் முழுவதும் செம்மண் நிறத்தில் இருக்கும். வால் சற்றே பெரிதாக நீண்டு இருக்கும். வாலில் முனைப் பகுதிகளில் வெண்மை நிறம் திட்டு திட்டாகக் காணப்படும். இதன் அலகு சற்றே வளைந்து சிவப்பு நிறத்தில் இருக்கும்.
முட்கள் நிறைந்த புதர்களில் வசிக்கும். ஜோடியாகவோ தனித்தோ காணப்படும்.
சிறு பூச்சிகள், பல்லிகள், கீழே விழுந்த சிறிய பழங்கள் ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடும். புதர்களில் வேகமாக ஓடும்போது பார்ப்பதற்கு கீரி போலத் தோற்றமளிக்கும்.
ஒரு சமயத்தில் 2 அல்லது 3 முட்டைகளை இடும்.