முகப்பு
சிறுவர்மணி

பறவையைத் தொடர்வோம்...

கோகிலம் குயிலினப் பறவை. தெற்கு ஆசியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாகக் காணப்படும்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:11 PM
பகிர்:

கோகிலம்
கோகிலம் குயிலினப் பறவை. தெற்கு ஆசியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாகக் காணப்படும். இதுதான் காகத்தின் கூடுகளில் தனது முட்டைகளை இட்டுவிட்டுச் செல்லும் பறவை.
 சற்றே பெரிய பறவை. நீள வால். 46 செ.மீ. வரை நீளம் இருக்கும். எடை 325 கிராம் வரை. பளபளவென்று கருநீல வண்ணத்தில் இருக்கும். வெளிர் பச்சை நிற அலகு. கண்களின் பாப்பாக்கள் சிவப்பு நிறம். சாம்பல் நிறக் கால்கள். இனிமையாகப் பாடும் பறவை. மரங்கள் நிறைந்த பகுதிகளில் வசிக்கும்.
 ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டை இடும். அந்த முட்டையையும் வேறு பறவைகளின் கூடுகளில் இட்டுவிட்டுச் சென்றுவிடும். 12 அல்லது 14 நாட்களில் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும்.
 புழு பூச்சிகள் மற்றும் சிறிய பழங்கள் ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடும். இந்தப் பறவையை வீடுகளில் கூண்டில் வளர்க்கலாம்.
 
கருந்தலை மாங்குயில்
 கருந்தலை மாங்குயில் ஆப்ரிக்க நாட்டுப் பறவை. ஆப்ரிக்காவில் சூடான், எதியோப்பியா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படும்.
 அடர்ந்த காடுகளில் வசிக்கும். அகலமான இலைகளைக் கொண்ட மரங்களில் வசிக்கும். சிறிய பழங்களையும் பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும். இள வயது மாங்குயில்கள் கம்பளிப் பூச்சிகளை விரும்பிச் சாப்பிடும்.
 நீண்ட சிவந்த அலகைக் கொண்டிருக்கும். தலை முழுவதும் கருப்பாக இருக்கும். இந்தக் கருப்பு நிறம் கழுத்து வரை தொடர்ந்திருக்கும். உடல் முழுவதும் பளீரென்ற மஞ்சள் நிறம் போர்த்தியிருக்கும். சிறகுகளின் முடிவுப் பகுதிகளில் மட்டும் சற்றே கருப்பு நிறம் தீற்றலாகக் காணப்படும்.
 பார்ப்பதற்கு மிகவும் அழகான பறவை.
 

செண்பகம்
செண்பகமும் குயிலினைத்தைச் சேர்ந்ததுதான்.
 ஆசிய நாடுகளிலும் இந்தியா, சீனா மற்றும் இந்தோனேஷியாவிலும் அதிகமாக இப் பறவையைப் பார்க்கலாம். பார்ப்பதற்குக் காகத்தைப் போலவே தோன்றும். சற்றே பெரிதாக இருக்கும். நீளமான வாலைக் கொண்டிருக்கும். உடல் முழுவதும் கருப்பாக இருந்தாலும் சிறகுகள் மட்டும் செம்பழுப்பு நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும். இந்தப் பறவை பறக்கும்போது பார்க்கக் கண்கோடி வேண்டும். அவ்வளவு அழகு. கண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
 செடிகள் நிறைந்த பகுதிகளில் வசிக்கும். பூச்சிகளையும் பிற உயிரினங்களின் முட்டைகளையும் விரும்பிச் சாப்பிடும்.
 48 செ.மீ. நீளப் பறவை. ஒரு சமயத்தில் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். 15 முதல் 16 நாட்களில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.