இயற்கையின் கொடை
கோடை வெப்பம் தணிந்திடவேகுளிர்ந்த இளநீர் இங்குண்டு!
கோடை வெப்பம் தணிந்திடவே
குளிர்ந்த இளநீர் இங்குண்டு!
ஆடை கதரில் அணிந்திடவே
அதிலோர் சுகமும் நமக்குண்டு!
பனையின் விசிறி காற்றுண்டு
பருகிட இனிய நுங்குண்டு!
அனைத்தும் உடலைக் காத்திடவே
அழகாய் இயற்கை தருவதுண்டு!
குளிரும் பெட்டிக்குள் வைத்த
குடிநீர் அதனால் கேடுண்டு!
குளிர்ச்சி நமக்குக் கொடுத்திடவே
குளிர்ந்த எலுமிச்சை சாறுண்டு!
பதநீர் சூட்டைத் தணித்துவிடும்
பாங்காய் அருந்திட பயன்கொடுக்கும்!
உதவிடும் நமக்கு நீர்மோரும்
உடலும் உள்ளமும் குளிர்ந்திடவே!
வண்ண வண்ண குளிர்பானம்
வாங்கிக் குடிப்பது தவறாகும்!
உண்ணும் ஐஸ்கிரீம் நம்முடைய
உடலைக் கெடுக்கும் பொருளாகும்!
இயற்கை தந்த பொருளெல்லாம்
இனிதாய் வெப்பம் தணித்திடுமே!
செயற்கை பானம் அருந்துவதால்
சிறந்த உடல்நலம் கெட்டிடுமே!