குழந்தைகள் தினம்
ஆனந்த பவனம் ஏற்றிவைத்தஆசிய ஜோதி நேருமகான்
ஆனந்த பவனம் ஏற்றிவைத்த
ஆசிய ஜோதி நேருமகான்
தேனினும் இனிய சொற்கொண்டு
தேசம் காத்த மாமனிதர்!
இதயம் ரோசா சுமந்திருக்கும்
இதழில் புன்னகை மலர்ந்திருக்கும்
உதயம் தேடும் பாரதத்தை
உள்ளம் இனிதே நினைந்திருக்கும்!
இந்தியத் தாயின் விடுதலைக்கு
இணைந்தே உழைத்தார் காந்தியுடன்
இந்திய நாட்டுப் பிரதமராய்
இவரும் அமர்ந்தார் அரியணையில்!
ஐந்தாண்டுத் திட்டம் தந்தாரே
அன்பாய்ப் பாரதம் காத்தாரே
நைந்திடும் ஏழை மகிழ்ந்திடவே
நலமாய் ஆட்சி செய்தாரே!
நேருமாமா என்றே தான்
நேசமாய்க் குழந்தை அழைத்திடவே
வாரி அணைத்து மகிழ்ந்திடுவார்
வற்றா அன்பைப் பொழிந்திடுவார்!
நவம்பர் திங்கள் பதினான்கில்
நமது நேரு பிறந்தாரே!
நவயுகச் சிற்பி இவரென்றே
நாடே போற்றிப் புகழ்ந்ததுவே!
பாரத சிற்பியின் விருப்பம்போல்
பாரில் அவரது பிறந்தநாள்
நேரிய குழந்தைத் திருநாளாம்
நேருவைப் போற்றும் நன்நாளாம்!