எண்ணும் எழுத்தும்
ஒன்றும் ஒன்றும் இரண்டாகும் ஒற்றுமை தானே பலமாகும்!
ஒன்றும் ஒன்றும் இரண்டாகும்
ஒற்றுமை தானே பலமாகும்!
இரண்டும் ஒன்றும் மூன்றாகும்
இனியவை பேசுதல் நலமாகும்!
மூன்றும் ஒன்றும் நான்காகும்
மூச்சுக் காற்றுத் தமிழாகும்!
நாலும் ஒன்றும் ஐந்தாகும்
நல்லறிவு நமக்குத் துணையாகும்!
ஐந்தும் ஒன்றும் ஆறாகும்
அன்பால் வாழ்வு செழிப்பாகும்!
பைந்தமிழ் கற்றல் சிறப்பாகும்
பணிவே அணிந்திடும் அணியாகும்!
ஆறும் ஒன்றும் ஏழாகும்
அகத்தில் தூய்மை அறமாகும்!
ஆறே ஊருக்கு அழகாகும்
ஆறில்லா ஊரும் பாழாகும்!
ஏழும் ஒன்றும் எட்டாகும்
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்!
பாழும் மூடப் பழக்கங்கள்
போக்குவதே பகுத் தறிவாகும்!
எட்டும் ஒன்றும் ஒன்பதாகும்
எட்டுத் திசையும் நமதாகும்!
சட்டென யாரும் சொல்லிடலாம்
ஒன்பதும் ஒன்றும் பத்தாகும்!
-கடலூர்
நா. இராதாகிருட்டிணன்