முத்துக் கதை
""அம்மா! இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. நான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறேன்.
வெற்றியின் முதற்படி
""அம்மா! இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. நான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறேன். எனக்குத்தான் முதற்
பரிசு கிடைக்கும். அதற்காகப் பல நாளாகப் பயிற்சி எடுத்து வருகிறேன்'' என்றான் செந்தில்.
""மகனே! உனக்குத்தான் பரிசு. உன்னை வெல்ல எவர் இருக்கிறார்! நம்பிக்கையுடன் முயற்சி செய்'' என வாழ்த்தினார், அவன் தாய். எதிர்பார்த்த
படியே செந்திலுக்கு முதற்பரிசு கிடைத்தது. அவன் வெற்றிக் கோப்பையுடன் வீட்டுக்கு வந்தான். அம்மா விருந்து சமைத்துக்கொண்டு இருந்தார். தான் வெற்றி பெற்ற செய்தியை யாரோ அம்மாவிற்கு முன்னதாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனைக் கொண்டாடத்தான் அம்மா விருந்து செய்கிறார் என நினைத்தான்.
தாயை அணைத்துக்கொண்ட செந்தில், ""அம்மா! நான் வெற்றி பெற்றது உங்களுக்கு எப்படித் தெரியும்?'' எனக் கேட்டான். ""மகனே! நீ வெற்றி பெறுவாய் என எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த அட்டையைப் பார்'' என்றார், அம்மா.
""மகனே! உன் வெற்றிக்கு வாழ்த்துகள். அதற்காகத்தான் இந்த விருந்து'' என அதில் எழுதியிருந்தது. குடும்பத்தினருடன் செந்தில் விருந்தை மிக மகிழ்ச்சியுடன் சுவைத்துச் சாப்பிட்டான்.
சிறிது நேரத்திற்குப் பின் அம்மா கொடுத்த அந்த அட்டையைச் செந்தில் கையில் எடுத்தான். பின் பக்கமும் ஏதோ எழுதி இருப்பதுபோலத் தெரிந்தது; திருப்பிப் பார்த்தான்.
அதில், "அன்பு மகனே! தோல்வி ஏற்பட்டதற்காக வருந்தாதே; எதனையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்; தோல்வியே வெற்றியின் முதற்படி; முயற்சி செய்; வெற்றி பெறுவாய்! அதற்காகத்தான் இந்த விருந்து' என எழுதியிருந்தது. செந்தில் மகிழ்ச்சியோடு தன் அம்மாவைத் திரும்பிப் பார்த்தான்.