சிறுவர்மணி

அழகான வீடு

புதுவருஷத்தைக் கொண்டாட காடே பரபரப்பாயிருந்தது. விலங்குகளும் பறவைகளும் தங்கள் வீடுகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

சு. ராமையா

புதுவருஷத்தைக் கொண்டாட காடே பரபரப்பாயிருந்தது. விலங்குகளும் பறவைகளும் தங்கள் வீடுகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. காரணம் சிங்கராசாவும் சிங்கராணியும் புதுவருஷத்தன்று உலா வருவது வழக்கம். அப்போது எந்த வீடு மிகவும் அழகாக இருக்கிறதோ அதற்குப் பரிசு தருவதும் வழக்கம். எனவே இம்முறை அந்தப் பரிசை வாங்கிவிடுவதற்காக குரங்கும் மானும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. குரங்கு தன் குடும்பத்தோடு அறையில் உட்கார்ந்து யோசித்தது.

""இப்பவெல்லாம் மின்விளக்குகள்தான் சிறப்பு. பேசாம வீட்டை மின்விளக்குகளால் அலங்கரிக்கலாம். சிங்கராணிக்கு ஒளிவீசும் வீடு பிடிக்கும்...'' என்றது குரங்கின் மனைவி.

குரங்கின் அப்பா வேறுவித யோசனை சொன்னது-

""வீடு முழுதும் தோரணங்களைக் கட்டிவிடலாம். வாழை மரங்களை வெட்டி, வாசலில் வைத்து, ராசாவை வரவேற்போம்...''

""பட்டுத்துணிகளாலும் பட்டு ரிப்பன்களாலும் அலங்காரம் செய்யலாம்'' என்றது மகள் குரங்கு.

""வித்தியாசமாய் கனிவகைகளால் வீட்டை அலங்கரிக்கலாம்'' என்றது மகன் குரங்கு.

""நீங்க சொன்ன எல்லா யோசனைகளையும் நடைமுறைப்படுத்தலாம். சிங்கராசாவும் சிங்கராணியும் அசந்திடணும். அவ்வளவுதான். அந்த மான் மட்டும் பரிசு வாங்கிவிடக்கூடாது. அவ்வளவுதான்...'' என்றது குரங்கு.

அதேசமயம் மான் வீட்டிலும் உறுப்பினர்கள் கூடியிருக்க, மான் உரையாற்றியது.

""இங்கே பாருங்க... நம்மால முடிஞ்சவரைக்கும் வீட்டை அழகுபடுத்த முயற்சி செய்வோம். குரங்குக்குப் பரிசு கிடைச்சாலும் பரவாயில்லை. எந்த உயிரையும் துன்புறுத்தாம வீட்டை அழகு செய்யணும்...''

""அவ்வளவுதானேம்மா... அசத்திடறோம்... ஆனா நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குரங்குதானே வருஷாவருஷம் பரிசு வாங்குது'' - என்றது மகள் மான்.

""அதுக்கென்ன பண்றது... நம்மால முடிஞ்சவரை முயற்சி செய்வோம்'' என்றது மான்.

குரங்கு வீட்டில் வேலை துவங்கியது.

""மொதல்ல வீட்டைச் சுத்தியிருக்கிற செடிகள், மரங்கள் எல்லாத்தையும் வெட்டித்தள்ளுங்க...'' உத்தரவிட்டது குரங்கு.

சுற்றுப்புறமெங்கும் மரங்களையும் செடிகளையும் வெட்டியதும்தான் வீடு பளிச்சென்று தெரிந்தது. நடுநாயகமாக வீடு இருக்க, சுற்றிலும் தரை சமன் செய்யப்பட்டது. பிறகு வெட்டப்பட்ட வாழைக்கன்றுகளை அங்கங்கே கட்டி வைத்தது. பட்டுத்துணிகளாலும் தோரணங்களாலும் வாசல்படியை அழகு செய்தது. பிறகு பக்கத்துக் காட்டிற்குப்போய் மின்விளக்குகள் வாங்கி வந்து, வைத்துவிட்டு, காட்டிலாகா மின் அதிகாரியான கரடியிடம் போய் நின்றது.

""என் வீட்டிற்கு மின் வசதி வேணும்'' எனக் கேட்டது.

""சிங்கராசாவின் அரண்மனைக்கு மட்டுமே மின்வசதி செய்வது வழக்கம். அதுவும்கூட சிங்கராசாவின் பிறந்தநாள், சிங்கராணியின் பிறந்தநாள் இப்படித்தான் மின்வசதி செய்து தரப்படும். உனக்கெல்லாம் செய்து தர முடியாது'' என்றது கரடி.

""அப்படியெல்லாம் சொல்லாதே. எனக்கு அவசியம் வேணும்...'' கெஞ்சியது குரங்கு.

நெடுநேரம் வாதாடியபின் கரடி, குரங்கு வீட்டிற்கு மின்வசதி செய்து தர ஒப்புக்கொண்டது.

புத்தாண்டு கோலாகலமாய் பிறந்தது. மிருகங்கள் ஒன்றுக்கொன்று வாழ்த்து சொல்லிக்கொண்டு குதூகலித்தன. சிங்கராசாவும் சிங்கராணியும் சாரட்டு வண்டியில் வீதியுலா வந்தன. வரிசையாய் வீடுகளைப் பார்த்துவிட்டு, தலையை ஆட்டியபடியே வந்தன.

குரங்கின் வீடு வந்தது. வண்ண விளக்குகளால் மின்னிய வீட்டை பிரமிப்புடன் பார்த்தது சிங்கராசா தம்பதி.

வெட்டவெளியில் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது.

சிங்கராணி வீட்டைச் சுற்றிப்பார்த்து, அலங்காரங்களைக் கண்டு வியந்தது.

அது வாசற்கதவைத் தாண்டும்போது, மின்விளக்கில் இடித்துக்கொண்டு "ஷாக்' அடிக்கவே கத்தியது. சிங்கராசாவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. இருந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு வீட்டைச் சுற்றிப் பார்த்தது.

முதல்நாளே வெட்டப்பட்ட வாழைக்கன்றுகள் வாடி வதங்கிக் கிடந்தன.

ஆனால் பட்டுத்துணி சரிகைகள் மிகவும் பளபளத்தன.

குரங்கின் குடும்பம், சுடச்சுட கோழி வறுவலும், ஆட்டுக்கறி பிரியாணியும் செய்து பரிமாறின. சிங்கராசாவும் சிங்கராணியும் திருப்தியாகச் சாப்பிட்டன.

'"சுவை மிகவும் நன்றாக உள்ளது'' - என்றது சிங்கராசா.

அப்போதே பரிசு நமக்குத்தான் என்று முடிவு கட்டியது குரங்கு.

சாரட்டு வண்டி கிளம்பியது.

அடுத்ததாக மானின் வீட்டின் முன்பு வண்டி நின்றது.

மரங்கள், செடி கொடிகளிடையே வீட்டைக் கண்டுபிடிப்பதே சிரமமாயிருந்தது.

மான் ஓடிவந்து, பூக்களைக் கொடுத்து வரவேற்றது.

உள்ளே நுழைந்ததும், சிங்கராணி கண்ணில் பறவைக் கூடுகள்தான் பட்டன.

""இதென்ன... ஒரே குருவிக்கூடா இருக்கே... வீட்டைச் சுத்தம் பண்ணலியா?'' என்று கேட்டது.

""கூட்டைக் கலைச்சிட்டா பறவைகளோட வசிப்பிடம் போயிடுமே! என் வீட்டை அழகுபடுத்த, பறவைகளை எதுக்கு துன்புறுத்தணும். அதனால அப்படியே விட்டுட்டேன்'' என்றது மான்.

சன்னல் கதவு ஓரம் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு, நீரூற்றிப் பராமரிக்கப்பட்டிருந்தன. வீட்டில் ஆங்காங்கே மெழுகுவர்த்திகள் மென்மையான ஒளியைக் கொடுத்துக் கொண்டிருந்தன.  பத்தாததற்கு, மின்மினிப் பூச்சிகள் வேறு அங்கே சுற்றிக்கொண்டிருந்தன. இந்தச் சூழ்நிலை சிங்கராணியை மிகவும் கவர்ந்தது.

மான் ஐந்தாறு மரக்கன்றுகளைக் கொண்டு வந்து ""அரசே... உங்கள் கையால் இந்த மரக்கன்றுகளை நடுங்கள். புதுவருஷமென்றால் நான் நடுவது வழக்கம். இம்முறை தங்கள் மூலம் நட்டால் இன்னும் சிறப்பு...'' என்று சொன்னது. சிங்கராசா மிகவும் சந்தோஷப்பட்டது.

மரக்கன்றுகளை நட்டுவிட்டுக் கிளம்பினர் ராசாவும் ராணியும். ஒரு கூடை நிறைய பழங்களைக் கொடுத்து, அவர்களை வழியனுப்பியது மான் குடும்பம்.

ஒரு வழியாக, வீதியுலா முடிந்து, அரசவை வந்து சேர்ந்தது ராச தம்பதி.

எல்லா மிருகங்களும் ஒன்று கூடின. குரங்கு, நம்பிக்கையோடு காத்திருந்தது. அழகான வீட்டை அறிவிக்க சிங்கராசா எழுந்தது.

""இந்த ஆண்டு அழகான வீடாக மானின் வீட்டிற்குப் பரிசளிக்கப்படுகிறது...''

குரங்கு கபாலென்று எழுந்தது.

""அரசே.. என் வீட்டிற்கு என்ன குறைச்சல்? எப்படி நீங்கள் மொக்கை மானுக்குப் பரிசு தரலாம்?''

""மரியாதையாகப் பேசு குரங்கே.. உன் வீட்டில் எல்லாமே தப்பு. முதலில் காடுகள் அழிந்து போய்க் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் வீட்டைச் சுற்றியுள்ள மரங்களை அழித்திருக்கிறாய். அடுத்து உணவளிக்கும் வாழை மரங்களை வெட்டியுள்ளாய். எல்லாவற்றையும்விட அநியாயம், கரடியை எப்படியோ ஏமாற்றி உன் வீட்டிற்கு மின்வசதி செய்துள்ளாய். அதையும்கூட சரியாகச் செய்யாமல் சிங்கராணிக்கு ஷாக் அடித்து கொல்லப் பார்த்திருக்கிறாய்.

புத்தாண்டு தினமான இன்றைக்குப் பார்த்து என் பொருட்டு ஆட்டையும் கோழியையும் கொன்று சமைத்திருக்கிறாய். நான் இன்றைக்காவது சைவ உணவு உண்ணலாமென்று விரதம் இருந்தேன். என் விரதத்தையும் குலைத்துவிட்டாய்... இப்படி நீ செய்த தவறுகள் எக்கச்சக்கம்.

ஆனால் மான் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவண்ணம் மரங்களை வளர்த்திருக்கிறது. இயற்கையைச் சிறிதும் சீர்குலைக்காமல் வீட்டை அலங்கரித்திருக்கிறது. காட்டை வளப்படுத்த மரக்கன்றுகள் நட்டிருக்கிறது. எனவேதான் மானின் வீடு, சிறந்த அழகான வீடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது'' - சிங்கராசா அறிவித்ததும் காடே அதிரும்வண்ணம் மிருகங்கள் சந்தோஷமாக ஆர்ப்பரித்தன.

மானுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

""பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாத நல்ல பண்பே பரிசைப் பெற்றுக் கொடுத்திருக்கு...'' - என்று சொன்னது மான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT