முகப்பு
சிறுவர்மணி

ஓவியத் திருமகன்

ஒரு சிறந்த கலைஞனின் படைப்பு பரிசுக்காக மட்டுமல்லாமல் அதை ரசிப்பவர்களின் மனதில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

Updated On : 14 மார்ச், 2014 at 10:06 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:12 AM

ஒரு சிறந்த கலைஞனின் படைப்பு பரிசுக்காக மட்டுமல்லாமல் அதை ரசிப்பவர்களின் மனதில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுதான் கற்பனையை நமக்குள் விதைத்த கலைத்தாய்க்கு கலைஞன் செலுத்தும் உச்சகட்ட மரியாதை.
 தமிழ்மொழியின் கவிராஜனாக விளங்கிய பாரதியார், சமுதாயக் கருத்துக்களுடன்கூடிய தனது கேலிச்சித்திரங்கள் மூலம் வெள்ளையர்களை வியர்க்க வைத்தார். லியனார்டோ டாவின்சி, ஓவியம், பொறியியல், அறிவியல் என அத்தனையிலும் புதுமையைக் கையாண்டு உலகை வியக்க வைத்தார்.
 அந்த வரிசையில் என்று சொல்லாவிட்டாலும்கூட, சமூக அக்கறையுடன் கூடிய ஓவியங்களைத் தீட்டி, விருதுகளை வென்று தனது திறமையை நிலை நாட்டியிருக்கிறார் 13 வயதே நிரம்பிய கே.ராகுல் செல்வன். சென்னையின் பாடி பகுதியில் வசித்து வரும் இவர் சென்னை எஸ்.பி.ஒ.ஏ. சிபிஎஸ்இ பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை கண்ணன் மாணவர்களுக்கு ஓவியப்பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.
 குவியும் பரிசுகள்: மழை நீர் சேகரிப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, சுற்றுச்சூழல், பெண்கள் முன்னேற்றம், வல்லரசை நோக்கி இந்தியா, இயற்கைக் காட்சிகள், உலகத் தலைவர்கள், இந்திய ரயில்வே உள்பட இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஓவியங்களைப் படைத்துள்ள ராகுல் செல்வன் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் 150-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
 தொடக்கத்தில் பென்சிலில் ஆரம்பித்த இவரது கைவண்ணம் ஸ்கெட்ச், கிரையான், போஸ்டர் கலர், டிஜிட்டல் டியூப்ஸ் என பயணித்து தற்போது அக்ரலிக் எனப்படும் நவீன ரக வண்ணக்கலவை வரை வெற்றிகரமாகத் தொடர்கிறது.
 அமைதியான சுபாவம், மெல்லிய புன்னகை, தொடர் பயிற்சி, நவீன தொழில்நுட்பத்தையும் இயல்பாகக் கையாளுதல் ஆகியவை ராகுல் செல்வனின் அக்மார்க் அடையாளங்கள்.
 பிரபலங்களின் பாராட்டு: சமீப காலங்களில் தமிழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப்போட்டிகளில் கலந்துகொண்டு நடிகர்கள் சூர்யா, ஸ்ரீகாந்த், பிரசன்னா,பாண்டு, நடிகை ஆண்ட்ரியா, பாடகி அனிதா குப்புசாமி மற்றும் அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன் பெரும்பாலான போட்டிகளில் முதல் பரிசுகளைப் பெற்று முத்திரை பதித்துள்ளார்.
 பார்ப்பவர்களின் விழிகளைச் சில நிமிஷங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அளவுக்கு ஓவியம் வரையும் ராகுல் செல்வன், நம்மிடம் கூறியது:
 ஓவியப்போட்டிகளில் கலந்துகொள்ள என் தந்தைதான் எனக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளார். பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு அவர் ஓவியம் சொல்லிக் கொடுப்பதைக் கண்டு எனக்கும் ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
 ஓவிய நுணுக்கங்கள்: முதன் முதலாக பூனை, பூக்கள், மிக்கி மவுஸ், பொம்மைகளை வரையும் போது எந்த பாகத்தை முதலில் வரைவது என்பதுகூட எனக்குத் தெரியாது. அதைத் தொடர்ந்து ஓவியம் வரையும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய நுணுக்கங்கள், வரைபடத்தாளின் அளவு, கோடுகளால் அமையும் ஓவியம், வண்ணங்களின் தன்மை மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறை, எவ்வளவு கால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும்?, போர்ட்ரெய்ட் எனப்படும் மனித உருவங்களின் முக அமைப்புகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை என் தந்தை கற்றுக் கொடுத்தார். அதுவே இன்றுவரை எனக்கு உதவியாக இருக்கிறது.
 கார்ட்டூன்கள், இயற்கைக் காட்சிகள், மனித உருவங்களை நன்றாக வரையத் தொடங்கி பிறகு சமூகத்தில் நிலவும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வு குறித்த ஓவியங்களை வரையப் பயிற்சி மேற்கொண்டேன்.
 தொடக்கத்தில் சற்றுக் கடினமாக இருந்தது. ஏனெனில் குறிப்பிட்ட சம்பவம் குறித்து மனதில் தெளிவாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டும். அதை ஓவியமாக வரையும்போது அப்படியே உட்புகுத்தினால் நாம் எதிர்பார்த்தபடி தத்ரூபமாக அமையும்.
 மறக்க முடியாத வெற்றி: கடந்த சில வாரங்களுக்கு முன்பு தில்லியில் நிலத்தடி நீர் அமைச்சகம் சார்பில் தேசிய அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது நிலத்தடி நீரின் முக்கியத்துவம், அதனை சேமிக்கும் முறை ஆகியவை குறித்து நான் வரைந்த ஓவியத்துக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், கேடயம், சான்றிதழ் ஆகியவை பரிசாகக் கிடைத்தன. அதனை மத்திய நீர்வளத்துறை கேபினட் அமைச்சர் ஹரீஷ் ராவத் கையால் பெற்றதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
 இதுவரை நான் வரைந்ததில் கிருஷ்ணர்-யசோதா ஓவியம்தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். அதை வரைய கிட்டத்தட்ட 3 வாரங்கள் ஆனது. அதற்குப்பிறகு எலுமிச்சை வைத்திருக்கும் பெண் ஓவியம் வரைய ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். அதிக ஆர்வமும், கடுமையான பயிற்சியும் இருந்தால் எந்த ஒரு ஓவியத்தையும் நம்மால் அழகாக வரைய முடியும்.
 எதிர்காலத்தில் சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் படித்து சிறந்த ஓவிய ஆசிரியராக வேண்டும் என்பதே எனது லட்சியம். அப்போதுதான் என்னுடைய லட்சியமும் என் தந்தையின் கனவும் நிஜமாகும் என்று வெற்றிப் புன்னகையுடன் கூறினார் வளரும் ரவிவர்மாவாக உருவெடுத்து
 வரும் மாணவர் கே.ராகுல் செல்வன்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.