உழைப்பே உயர்வு தரும்
கரடியும் நரியும் நண்பர்கள். இருவரும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை செய்து வந்தார்கள். கரடி வாங்கும் அளவுதான்
கரடியும் நரியும் நண்பர்கள். இருவரும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை செய்து வந்தார்கள். கரடி வாங்கும் அளவுதான் நரியும் ஊதியம் பெற்று வந்தது.
கரடி வாங்கும் ஊதியம் அதன் குடும்பச் செலவுக்குப் போதவில்லை. எதிர்பாராத செலவுகள் ஏற்படும்போது கடன் வாங்க வேண்டிய நிலையில் கரடி இருந்தது.
நரிக்கும் அதே நிலைமைதான்.
கரடி சிந்தித்தது. இப்படியே இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. காலையில் அலுவலகத்துக்குப் புறப்படுவதற்கும் முன்னும், மாலையில் அலுவலக நேரம் முடிந்த பின்னும், விடுமுறை நாட்களிலும் வேறு ஏதாவது பணி செய்து வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று நினைத்தது.
கடைத்தெருவில் யானையாரின் புரோட்டா கடை இருந்தது. அங்கே மாலையில்தான் வியாபாரம் நடக்கும்.
யானையாரிடம் தனது நிலையைக் கூறி, அங்கே வேலைக்கு அமர்ந்தது கரடி.
அதனால் கரடியின் வருமானம் கூடியது.
அதைப் பார்த்த நரியின் மனத்தில் கெட்ட எண்ணம் உதித்தது.
ஒருநாள் -
கடையை மூடிவிட்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த யானையாரைப் பார்த்து, "கரடியை வேலைக்கு வைத்திருந்தால் நஷ்டம்தான் ஏற்படும். அவன் உன்னிடம், வாடிக்கையாளரின் கணக்கைக் குறைத்துச் சொல்லிவிடுவான். வெளியில் போய் அவர்களிடம் பணம் வாங்கிக் கொள்வான்' என்றது நரி.
"அப்படியா? எனக்குத் தெரியாதே..!' என்றது யானை.
"இப்போதாவது தெரிந்துகொள். அவனை வேலையைவிட்டு நீக்கு...' என்று சொல்லியது நரி.
மறுநாள் மாலை...
வேலைக்குச் சென்ற கரடியிடம், "இனிமேல் உனக்கு இங்கே வேலை இல்லை' என்று கூறிவிட்டது யானை.
"என்ன காரணமாக இருக்கும்..?' என்று குழப்பத்துடன் திரும்பி நடந்தது கரடி.
எதிரில் வந்த குரங்கு, "புரோட்டா கடையில் வேலை போயிடுச்சா?' என்று கேட்டது.
"உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டது கரடி.
"எனக்குத் தெரியும். உன்னை யானை வேலையிலிருந்து நீக்கியதற்குக் காரணம் உன் நண்பன் நரிதான்...' என்றது குரங்கு.
"அவன் ஏன் இப்படிச் செய்தான்? நான் அவனுக்குத் தீமை ஏதும் செய்யவில்லையே?' என்று எண்ணிய கரடி, வேலைக்கு வேறு இடம் தேடி நடந்தது.
வேறு இடங்களில் வேலையைச் சம்பாதித்துக் கொண்ட கரடி, தனது கடும் உழைப்பினால் நிறையப் பணம் சேர்த்தது. தனது வீட்டை மச்சு வீடாக மாற்றிக் கட்டத் தொடங்கியது.
நரி, கரடியைப் போல உழைக்கவில்லை. செலவுக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் பன்றியாரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியது.
ஒருநாள் -
கரடி கட்டிய மச்சு வீட்டின் முன்னால் பந்தல் போடப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி முழங்கிக் கொண்டிருந்தது.
கரடி, புதுவீட்டுக்குக் குடியேறும் விழாவுக்கு நரிக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தது.
அன்று காலையிலேயே நரியின் வீட்டுக்கு வந்த பன்றி, தான் கொடுத்திருந்த கடனுக்கு ஈடாக நரியின் கூரை வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டது.
நரி, வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தனது புதிய வீட்டுக்கு வராத நரியைப் பார்ப்பதற்காக, நரியின் வீட்டுக்குச் சென்றது கரடி. அங்கே இருந்தவர்கள் நடந்ததையெல்லாம் கூறினார்கள்.
நரியைத் தேடி, காட்டுக்குள் நடந்தது கரடி. ஒரு பெரிய மரத்தடியில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தது நரி.
அதன் நிலையைப் பார்த்த கரடி, இரக்கப்பட்டு, "வா.. வீட்டுக்குப் போகலாம்...' என்று நரியின் கையைப் பிடித்து அழைத்து வந்தது.
சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்து, பன்றியிடம் கொடுத்து, கடனை அடைத்தது.
வீட்டுச் சாவியை வாங்கி, நரியிடம் கொடுத்தது.
அப்போது அங்கே வந்த குரங்கு, நரியைப் பார்த்து, "கரடியின் மச்சு வீடு அவனது உழைப்பால் உருவானது. நீ கரடியைப் போல உழைக்கவில்லை. அவனைப் பார்த்து பொறாமை கொண்டாய். அவனுக்குத் தீங்கு செய்து, அவனது வளர்ச்சியைத் தடுக்க முனைந்தாய். அதனால்தான் உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது..' என்றது.
"உண்மைதான்...' என்று வருத்தத்துடன் சொன்னது நரி.
"ஒருவரின் முன்னேற்றத்தைப் பார்த்து, அவன் முன்னேறிவிட்டானே என்று மனதுக்குள் வெறுப்பை வளர்ப்பது பொறாமை. நாமும் அவனைப் போல முன்னேற வேண்டும் என்று நினைப்பது போட்டி. வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறலாம். மாறாக, பொறாமை கொண்டால் இருப்பதையும் இழக்க நேரிடும்' என்றது குரங்கு.
கரடியின் கையைப் பிடித்துக்கொண்ட நரி, "நண்பா, உழைப்பே உயர்வு தரும் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னை மன்னித்து விடு. நான் திருந்திவிட்டேன்...' என்றது.
"நீயும் கரடியைப் போல் உழைத்து மச்சு வீடு கட்ட வேண்டும்...' என்றது குரங்கு.
"நிச்சயமாக...' என்றது நரி.
"பொறாமையா..?' சிரித்துக்கொண்டே, கேட்டது குரங்கு.
"இல்லை. ஒருவருக்கொருவர் போட்டி போட்டு முன்னேற வேண்டும் என்ற நல்லெண்ணம்தான்...' என்று சொல்லிச் சிரித்த நரி, கரடியின் மச்சு வீட்டு விழாப் பந்தலை நோக்கி மகிழ்ச்சியுடன் நடந்தது.