முகப்பு
சிறுவர்மணி

அரங்கம்: ஒப்பில்லாப் பரிசு!

வசந்தி:ஏ, குமரன்! என்ன ஆச்சு உனக்கு? ஏன் உம்முன்னு மூஞ்சியை வச்சுக்கிட்டே நடந்துவரே?

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:27 AM
பகிர்:

காட்சி -1

இடம்:தெரு

பாத்திரங்கள்:வசந்தி, குமரன்

வசந்தி:குமரா...... குமரா.......

குமரன்:.................................

வசந்தி:ஏ, குமரன்! என்ன ஆச்சு உனக்கு? ஏன் உம்முன்னு மூஞ்சியை வச்சுக்கிட்டே நடந்துவரே?

குமரன்:ம் அப்படித்தான் வருவேன்.

வசந்தி:ஏய், சொல்லுடா! சுதந்திர தின விழாவுக்கு வரப்போ, நல்லாத்தானே பேசிச்சிரிச்சுக்கிட்டே என் கூட வந்தே... திடீர்னு இப்ப என்ன ஆச்சு?

குமரன்:இவ்வளவு தூரம் நடந்துவந்து விழாவுலே கலந்து கொண்டேன்..., எல்லாம் வீண்தான்..., போட்டியிலே எனக்குப் பரிசு கிடைக்கல்லே...

வசந்தி:ஓ, பட்டிமன்றப் போட்டியைச் சொல்றியா?

குமரன்:ஆமாம்...! "சுதந்திரப் பயிருக்கு வலிமை ஊட்டுவது மக்களா? அரசியல்வாதிகளா?'ன்னு பட்டிமன்றம் நடத்தினாங்க... மக்கள்தான்னு நான் எவ்வளவு அடிச்சுப் பேசினேன்... ஆனால் பரிசு கிடைக்கல்லே...

வசந்தி:சரி, விடு! குமரன் பரிசு கிடைக்கல்லேனா என்ன? நல்ல வேளை, நீ சுதந்திர தினக்கொடியை சட்டைப் பையிலே தலை கீழாவச்சு குத்திக் கொண்டிருந்ததை நான் கவனிச்சு சொன்னேன். இல்லேன்னா எல்லாரும் சிரிச்சிருப்பாங்க. முதல்லே கொடியை சரியா வச்சு குத்திக்க கத்துக்கோ.

குமரன்:ஆமாம் பெரிய கொடி...! எனக்குப் பரிசு கிடைக்கல்லே... இது எதுக்கு இன்னும் என் சட்டைப் பையிலே? (என்றபடி கொடியை சட்டையிலிருந்து கழட்டி காற்றில் வீசி எறிய அது பறக்கிறது)

வசந்தி:ஏ, குமரன்? சுதந்திரக் கொடியை அப்படி எறியாதே... எறியக் கூடாது... சீக்கிரம் பிடி...!

குமரன்:ஏ, வசந்தி! அதுகாத்துலே பறந்து எப்படியாவது போகட்டும்... நீ வா வீட்டுக்கு

வசந்தி:வரமாட்டேன்... இந்தக்கொடியை இப்படியே பறக்க விட்டா, அது கீழே விழுந்து எல்லார் காலிலேயும் மிதிபடும். இல்லேன்னா எச்சில்லே விழுந்திடும். நம்ம நாட்டு தேசியக் கொடி இப்படி அசிங்கப்படலாமா? கொஞ்ச நேரம் முன்னாலதான் நாம இதுக்கு கொடி வணக்கப் பாட்டு பாடினோம். இந்தக் கொடி என் கையிலே கிடைச்சப்புறம்தான் திரும்பி வருவேன் நீ போ.

குமரன்:ஏய், வசந்தி! இந்தக் காத்துலே அதை உன்னால பிடிக்க முடியாது. விட்டுட்டு வீட்டுக்கு வா. ஒரு சின்னக் கொடிக்காக வீணா கஷ்டப்படாதே ஐய்யோ... வசந்தி சைக்கிள்... பாத்து... பாத்து...

காட்சி - 2

இடம்: தெரு

பாத்திரங்கள்: சைக்கிள் காரர், சந்தி, பெரியவர், குமரன்

சைக்கிள் காரர்: ஏம்மா இப்படியா ஓடி வர்றது?

வசந்தி:மன்னிச்சுடுங்கய்யா பறந்துபோன அந்தக் கொடியைப் பிடிக்கத்தான் ஓடிவரேன்... எதிர்பாராம உங்க சைக்கிள்ளே மோதிட்டேன்...

சைக்கிள்: அதோ பார், முழங்கால்லே அடிபட்டு ரத்தம் கசியறது பேசாம வீட்டுக்குப் போம்மா... கொடியைத் துரத்திக்கிட்டுப்போய், ஏதாவது விபத்துலே மாட்டிக்காதே

வசந்தி:சுதந்திர தினமும் அதுவுமா நம்ம நாட்டுக் கொடியை இப்படி அலட்சியப்படுத்தக் கூடாதுங்கய்யா அதை எப்படியாவது பிடிச்சாகணும். முடிஞ்சா நீங்களே பிடிச்சுக் கொடுங்க...

சைக்கிள்: அட போம்மா எனக்கு வேலையிருக்கு... ஒரு சின்னக் கொடிக்கு உயிரை விடறே நான் வரேன்... ஐய்யோ பாத்தியா இப்ப வாழைப்பழத்தோல் சறுக்கி விழுந்துட்டே பாரு சொன்னா கேட்டியா.. வீணா மறுபடியும் அடிபட்டுக்கிட்டிருக்கே.

வசந்தி:பரவாயில்லை... அந்தக்கொடி எப்படியும் கீழே வரும் பிடிச்சுடுவேன். ஐய்யோ கொடி எங்கே காணோம்...?

சைக்கிள்:ஏ, பொண்ணு கொடி இப்போ அந்த முட்புதர்லே விழுந்திருக்கு. பக்கத்துலே சாக்கடைத் தண்ணிவேற ஓடிக்கிட்டிருக்கு... கொடியை எடுக்கப்போறேன்னு, முள்ளால கீறிக்கப்போறே..., பேசாம வீட்டுக்குப் போ... சொன்னா கேளு.

வசந்தி:ஐயா, முடிஞ்சா எனக்கு உதவுங்க... இல்லேன்னா பேசாம போங்க... (சைக்கிள்காரர் போய்விட) என்ன இவரு...? தன் சட்டையிலே காந்தித்தாத்தா போட்ட அட்டைக் கொடியைக் குத்தியிருக்காரு ஆனா இப்படி நடந்துக்கறாரு...?

பெரியவர்:ஏ, பொண்ணு என்னம்மா ஆச்சு? இப்படி அப்படி அல்லாடிக்கிட்டிருக்கே.

வசந்தி:நீங்க...

பெரியவர்:என்னம்மா என்னைத் தெரியல்லே... உங்க தெருவுக்குப் பக்கத்துத் தெருவுலே தான் இருக்கேன்... உனக்குச் சுதந்திர தின வாழ்த்துகள்...

வசந்தி: நன்றி தாத்தா!

பெரியவர்:கொஞ்சம் இரும்மா நானே அந்தக் கொடியை எடுத்துத் தரேன்.

வசந்தி:வேண்டாம் தாத்தா! முள்ளு அடர்த்தியா பயங்கரமா இருக்கு. நானே எடுத்துக்கறேன். (கொடியை எடுக்க) ஆ, ஐய்யோ அம்மா... அப்பா... நல்ல வேளை, கொடி கிழியாம முழுசா கிடைச்சுட்டுது.

குமரன்:(அருகில் வந்து) ஏ, வசந்தி, உனக்காக எவ்வளவு நேரம் காத்துக்கிட்டிருக்கேன். இந்தக் காகிதக் கொடிக்காக ஏன் இப்படி உயிரை விடறே?

பெரியவர்:தம்பி, இது வெறும் காகிதக் கெடி இல்லே. பலபேர் தங்கள் உயிரைவிட்டு இந்தக் கொடியை நம்ம நாட்டுச் சுதந்திரச் சின்னமாக்கி நமக்குக் கொடுத்திருக்காங்க. சுதந்திர தினமும் அதுவுமா இந்த மூவண்ணக் கொடிக்கு எந்த அசிங்கமும் வரக்கூடாதுன்னு இந்தப் பொண்ணு துடிக்கிறா...! ஏ, பொண்ணு! ஒரு நல்ல இந்தியப் பொண்ணுக்கு நீதான்மா நல்ல உதாரணம். தம்பி, அக்கா கையிலேயும் கால்லேயும் நல்லா அடிபட்டு இரத்தம் கசியறது... உடனே டாக்டர்கிட்டே அழைச்சுக்கிட்டு போ.

காட்சி - 3

இடம்: மருத்துவர் வீடு

பாத்திரங்கள்: மருத்துவர், ஓவியர், குமரன், வசந்தி.

மருத்துவர்:ஓவியர் ஐயா, இந்த ஓவியத்தை ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கீங்க... திருப்பூர் குமரனோட கண்கள்ளே தேசபக்தியை உணர்ச்சி ததும்பக் காட்டியிருக்கீங்க. நம்ம நாட்டுக் கொடியைப்பிடிச்சுக்கிட்டு, வந்தேமாதர முழக்கம் செய்துகிட்டு, வீரநடை போடற திருப்பூர் குமரனைக் கண்ணெதிரே பாக்கற மாதிரியே இருக்கு.

ஓவியர்:டாக்டர்! உங்க பாராட்டுக்கு நன்றி... டாக்டர் ஐயா, அதோ அங்கே பாருங்க யாரோ ஒரு பொண்ணு அடிபட்ட காயத்தோடு வந்து அங்கே நின்னுக்கிட்டிருக்கு.

மருத்துவர்:உள்ளே வாம்மா! தம்பி, உள்ளே வா! எப்படிம்மா இப்படி அடிபட்டுக்கிட்டிருக்கே?

குமரன்:பறக்கற காகிதக் கொடியைப்பிடிக்க ஓடினா சார்! வேண்டாம்னா கேட்கல்லே வழியிலே சைக்கிள் மேல மோதிக்கிட்டா.., வாழைப்பழத்தோல் சறுக்கி விழுந்தா..., முட்புதர்லே கையைவிட்டு கையெல்லாம் இப்படிக் கீறிக்கிட்டிருக்கா!

மருத்துவர்:உன் பேர் என்னம்மா.

குமரன்:என் பேர் குமரன், இவ என் அக்கா பேர் வசந்தி.

வசந்தி:ஆமாம் டாக்டர்! காத்துலே பறந்துபோன நம்ம தேசியக்கொடி சாக்கடையிலே விழுந்துடக் கூடாதேன்னு தான் அதைப் பிடிக்கப் போனேன். பிடிச்சுட்டேன். இந்தாங்க டாக்டர், மொதல்லே இந்தக் கொடியை நல்ல காகித உறையிலே போட்டுக்கொடுங்க... இல்லேன்னா அழுக்காயிடும். அப்புறம் என் காயத்துக்கு மருந்து போடலாம்.

மருத்துவர்:ம்... அப்படியா... என்ன தம்பி, உன் சட்டையிலே மட்டும் சுதந்திரக் கொடியைக் காணோம்!

வசந்தி:தனக்குப் போட்டியிலே பரிசு கிடைக்கல்லேங்கற கோபத்துலே, தன்னோட கொடியைக் கழட்டி இவன் வீசி எறிஞ்சுட்டான். அந்தக் கொடியைப் பிடிச்சுட்டு வரத்தான் போனேன்... அதுதான் இந்தக் கொடி.

மருத்துவர்:தப்புப்பா! முதல்லே போட்டியிலே வெற்றி கிடைக்கல்லேன்னு கோபம் வரது தப்பு. இரண்டாவது, கோபம் வந்து கொடியைச் சட்டையிலேந்து பிய்த்து எறிஞ்சது தப்பு. ஏம்மா, உன் கால்லே நல்லா காயம் பட்டிருக்கும்மா... இவ்வளவு ரத்தம் கசிஞ்சிருக்கு.., சிரிச்சுக்கிட்டே இருக்கே...? ஒரு ஊசிபோட்டு ஆயிண்ட்மென்ட் தரேன். சரியாயிடும்!

வசந்தி:நன்றி டாக்டர்! எவ்வளவு ரூபாய் தரணும்? வீட்டுக்குப் போய் கொண்டுவந்து தரேன்.

மருத்துவர்:வசந்தி, இதுக்கு நான் ரூபாய் வாங்

கினால் நானே என்னைத் தேசத்துரோகின்னு சொல்லிப்பேன்... எவ்வளவு கஷ்டப்பட்டு நீ இந்தக் கொடியைக் காப்பாத்திக் கொண்டு வந்திருக்கே... உன்னோட இந்தக் காயத்துக்கு வைத்தியம் செய்யறது என்னோட கடமைம்மா. தம்பி, இதோ, இந்த திருப்பூர் குமரன் படத்தைப் பார்த்தியா? சுதந்திரக் கொடியை எப்படிக் கையிலே கெட்டியா பிடிச்சிட்டு போறார் பார்த்தியா? பிரிட்டிஷ் போலிஸôர் திருப்பூர் குமரனை எப்படி அடிக்கறாங்க பாரு..., இதை வரைஞ்ச ஓவியர் இவர்தான்!

ஓவியர்:ஆமாம், ரத்தம் கசியக்கசிய அடிபட்டபோதுகூட குமரன் கொடியை விடல்லே. உயிரைத்தான் விட்டார். இது போல நம்ம நாடு சுதந்திரம் அடையறதுக்காக, இந்தக் கொடிக்காக, எத்தனையோ பேர் உயிரை விட்டிருக்காங்க. அவங்க தியாகத்தாலதான் இன்னிக்கு இந்தக் கொடி நம்ம சுதந்திரச் சின்னமா இருக்கு!

மருத்துவர்:ஆமாம் தம்பி! இந்தக்கொடியை சாதாரணமா நினைச்சுடாதே! கேட்டுக்கோ! அறுபத்து ஏழு வருஷங்களுக்கு முன்னால இது நம்ம பாரத தேசத்துக்குக் கிடைச்ச மிகப்பெரிய பரிசு! விடுதலைச் சின்னம் இது! நம்ம ஒவ்வொருவருக்குமே கிடைச்சிருக்கிற நல்ல பரிசு! இதைவிடப் பெரிய பரிசு நமக்கு எதுவும் இல்லே...!

ஓவியர்:தலைவர்களுக்குத் சுயநலம் கூடாது. பொருளாசை கூடாது. இந்த மனப் பக்குவத்தோடு, தியாக உணர்வோடு தங்கள் கடமைகளைச் செய்யணும். இதை நினைவூட்டத்தான் சிவப்பு. நம்ம நாட்டு விடுதலைக்காக உடல், பொருள், உயிரைத் தியாகம் செய்த தியாகிகள் பலபேர். இவர்கள் வரலாற்றைப் படிச்சா தந்நல உணர்வு மறைஞ்சு பொதுநல உணர்வு வளரும். அடுத்ததா இந்தத் தூய்மையான வெள்ளை நிறம் மேலான வாழ்க்கைக்கு வழிகாட்டும். உண்மை நெறியை நமக்கு அறிவுறுத்தும். வாழ்க்கையைத் தூய்மையா அமைச்சுக்க சொல்ற வண்ணம் இது. அசோக சக்கரம் நாம எல்லாரும் நீதிநெறி வழுவாத வாழ்க்கை வாழவேண்டியதன் அவசியத்தைச் சொல்லும். பச்சை நிறம் நாட்டில் பசுமை வளத்தைப் பெருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும்.

மருத்துவர்:அதனால இந்த பரிசைக் காப்பாத்தறதுதான் நம்மோட கடமை. போட்டியிலே உனக்குப் பரிசு கிடைக்கல்லேங்கறதுக்காக, இந்த ஒப்பில்லா பரிசையா தூக்கி எறிஞ்சே.

குமரன்:டாக்டர் சார்! ஓவியர் ஐயா! திருப்பூர் குமரன் வரலாறு எனக்கும் தெரியும். தெரிஞ்சும் இப்படி நான் நடந்துகிட்டதுக்காக ரொம்ப வருத்தப்படறேன். என் பேரும் குமரன்தான். இருந்தும் திருப்பூர் குமரன் வரலாற்றை மறந்து நடந்துகிட்டேன். நீங்க இப்ப சொன்னதை எப்பவும் மறக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க டாக்டர் சார்! அந்தக் கொடியை மறுபடியும் என் சட்டைப்பையிலே நீங்களே குத்திவிடுங்க!

மருத்துவர்:சபாஷ் தம்பி குமரா! இந்தத் திருப்பூர் குமரன் படத்தையும் உனக்கே பரிசா தரேன்... வீட்டிலே மாட்டிக்க ஜெய்ஹிந்த்!

வசந்தி, ஓவியர், குமரன்: வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(திரை)

முழு கட்டுரையைப் படிக்க →