முகப்பு
சிறுவர்மணி

கொடுப்பதில் இன்பம்!

தன்னைத் தோண்டும் மனிதரையும்தாங்கி நிற்கும் பூமியைப் பார்!

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:30 AM
பகிர்:

தன்னைத் தோண்டும் மனிதரையும்

தாங்கி நிற்கும் பூமியைப் பார்!

தன்னை வெட்டும் மனிதர்க்கும்

தாகம் தீர்க்கும் இளநீர் பார்!

அசுத்தம் எல்லாம் தான் சுமந்து

அணிந்தவர்க் குதவிடும் செருப்பைப்பார்!

பசியென வந்திடும் யாவர்க்கும்

புசித்திடப் பழம் தரும் மரங்களைப் பார்!

வான்தரும் மழையைப் பார்த்தாயா?

விருப்பும் வெறுப்பும் அதற்குண்டா?

தேன்தரும் பூக்களைப் பார்த்தாயா?

தனக்கெனச் சேர்த்து வைப்பதுண்டா?

வீசிடும் தென்றல் காற்றினைப் பார்!

விலையை நம்மிடம் கேட்டதுண்டா?

காசும் பணமும் நம்மோடு

கடைசி வரையில் வருவதுண்டா?

பணத்தை வைக்கும் பெட்டியிங்கே

பசித்தவர் வயிறு எனச்சொல்லும்

குணத்தில் சிறந்த வள்ளுவரின்

குறள் தரும் கருத்தை எண்ணிப்பார்!

வியர்வை சிந்த உழைத்துப் பார்!

வருவதைப் பிறர்க்குக் கொடுத்துப்பார்!

உயர்ந்த வாழ்வு உனதாகும்

உலகம் உனது வசமாகும்!

இறைவன் கொடையால் உயிர் வாழ்க்கை!

அதில் சில காலம் நம் வாழ்க்கை!

அடுத்தொரு பிறவி எடுத்தாலும்

பிறர்க்கென வாழும் வாழ்வைக் கேள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.