முகப்பு
சிறுவர்மணி

அவரவர் சிறப்பு

கடலை நோக்கிச் சென்ற ஆறு கடலைக் கண்டதும் ஆச்சரியப்பட்டது! அது கடலின் மிகப் பெரிய வடிவத்தைக் கண்டு வியப்படைந்தது. தான் எவ்வளவு சிறியவன் என்பதை நினைத்துத் துயருற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

கடலை நோக்கிச் சென்ற ஆறு கடலைக் கண்டதும் ஆச்சரியப்பட்டது! அது கடலின் மிகப் பெரிய வடிவத்தைக் கண்டு வியப்படைந்தது. தான் எவ்வளவு சிறியவன் என்பதை நினைத்துத் துயருற்றது. கடலைப் பார்த்து, கடல் அண்ணா, உன்னைப்போல் நான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ""ஆஹா எத்தனை பெரிய உருவம் உனக்கு? நான் உன்னுடன் கலந்து கரைந்துபோய் என் பெயரான "ஆறு' என்பதும் போய் "கடல்' என்ற உன் பெயரே நிலைத்திருக்கிறதே! எங்களைப் போன்ற ஆறுகள் உன்னைத்தானே அடைய வேண்டியிருக்கிறது. எவ்வளவு தூரம் ஓடி என்ன பயன்?''என்று புலம்பியது.

 கடலும் ஆற்றைப் பார்த்து, ""நீ என்னைப் பார்த்து இப்படிப் புகழ்கிறாய்! ஆனால் எனக்கு எவ்வளவு வருத்தம் தெரியுமா? நீ ஓடி வரும் நிலமெல்லாம் செழித்து இருக்கிறது. வயல்களும், தோட்டங்களும், உன்னால்தானே பிழைக்கின்றன. எத்தனை மலர்கள்...,காய்கள்...,கனிகள்? மண் பயனுள்ளதாக ஆவதும் உன்னால்தானே? ஜீவன்களின் தாகத்தையும் நீ முக்கியமாகத் தீர்க்கிறாய்! எனக்கு அந்த பாக்கியம் இருக்கிறதா? சொல்!''என்றது கடல்!

 இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது காற்று! அது கடலையும், ஆற்றையும் நோக்கி, ""நீங்கள் இருவருமே மெச்சத்தகுந்தவர்கள்! கடல் தன்னுள்ளே ஏராளமான செல்வத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. முத்துக்கள் என்ன...? பவளங்கள் என்ன? அது மட்டுமா? எத்தனை மீன்கள் உள்ளன கடலில்? மிக முக்கியமாக மனிதர்கள் கடல் கடந்து போகும் கப்பல்களை அல்லவா தாங்கி நிற்கிறது கடல்? உணவுக்கு ருசி சேர்க்கும் உப்பை கடல்தானே வழங்குகிறது! ஆற்றின் பெருமைக்கும் அளவே இல்லை. குடிநீர், தானியம், பழங்கள் காய்கனிகள், அனைத்தும் ஆற்றினால்தானே? மனிதர்களின் நாகரிகமே நதிக்கரையில்தானே மெருகேறியது! அவரவர் இடத்தில் அவரவர் பெரியவர்! நீங்கள் இருவருமே  பூமியின் செல்வங்கள்! தொடர்ந்து கடமையை ஆற்றுங்கள்!'' என்று காற்று இதமான தென்றலாய் வீசத்தொடங்கியது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.