முகப்பு
சிறுவர்மணி

ஜென்னி மால்லின் பாதுகாத்த எள்ளுப் பாட்டி சமையல் குறிப்புகள்!

யாராவது ஐந்து தலைமுறைகளாக எழுதி வரும் சமையல் குறிப்புகளைப் பத்திரமாகத் தொகுத்து வைத்துக் கொண்டதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:47 AM
பகிர்:

யாராவது ஐந்து தலைமுறைகளாக எழுதி வரும் சமையல் குறிப்புகளைப் பத்திரமாகத் தொகுத்து வைத்துக் கொண்டதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் அந்தக் குறிப்புகளைப் பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைத்த செய்தியைக் கேட்டதுண்டா? "சமைத்துப் பார்' மீனாட்சி அம்மாளுக்கே சவால் விடக்கூடிய அந்த எள்ளு-கொள்ளுப் பாட்டிகளின் ஐநூறு வகைச் சமையல் குறிப்புகளைப் பற்றி, சென்னை பிரிட்டிஷ் கௌன்சிலில் பகிர்ந்து கொண்டார் ஜென்னி மால்லின் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. இந்தப் பாட்டிகள் எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்கால இந்தியாவில் வசித்தவர்கள்.

தற்போது ஜென்னி வசிப்பது லண்டனில்தான் என்றாலும், "கிரான்ட் மதர்ஸ் லெகஸி' (பாட்டியின் சொத்து) என்ற தம் நூலை அறிமுகம் செய்வதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறாராம். புத்தகத்தின் விலை அதிகமில்லை. 3700 ரூபாயில் ஒரு ரூபாய் குறைவு, அவ்வளவுதான். ஜென்னி மால்லின் பிபிஸி செய்திப் பிரிவில் சில வருடங்கள் பணியாற்றியிருக்கிறார்.

ஜென்னி மால்லினின் பூர்வீகம் சென்னைதான் என்றால் வியப்பாக இருக்கும். சிப்பாயாக 1778இல் பிரிட்டன் யார்க்ஷயரிலிருந்து சென்னை வந்த பெஞ்சமின் ஹார்டியின் எள்ளு-கொள்ளுப் பேத்திதான் ஜென்னி. (அதாவது நாலு கிரேடுக்கு அப்புறம் போடக் கூடிய டாட்டர்) ஆனால் இன்னமும் சுமார் 200 வருடங்களாகப் பத்திரமாகப் பாதுகாத்து வரும் சமையல் புத்தகம் பற்றிப் பேசினார் ஜென்னி. இந்தப் புத்தகத்தை எழுதத் தன் தந்தைதான் காரணம் என்றார். அவர் மறைந்த பிறகு, அம்மாவிடம் தினம் ஒரு ரெஸிபி பற்றிச் சொல்வேன். சமைத்துப் பார்ப்பேன். அவளுடைய கருத்தைக் கேட்பேன். மூன்று வருடங்களில் சுமார் 500 வகை உணவுகளைப் பற்றி ஆராய்ந்துவிட்டேன். பெயர் தெரியாத பண்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரி துப்பறிந்ததும் உண்டு என்றார்.

சரி, புத்தகம் பிறந்த கதை என்ன?

பெஞ்சமின் ஹார்டியின் மகன் ஜோசப்பை மணந்த வில்மினா என்ற வேலூர்க்காரப் பெண்மணிதான் இந்தக் குறிப்புகளைச் சேகரித்து வைக்கத் தொடங்கினாராம். குருமாவும், புலாவும் தயாரிப்பது எப்படி? என்று கூடக் குறிப்புகள் வைத்திருந்தாராம். ஜென்னியின் தாயார் சிந்தியா கொல்கத்தாவில் பிறந்தவர். அவரே ஏராளமான உணவு வகைகளைக் கற்பனை செய்து தயாரித்துவிடுவாராம். தொடர்ந்து எழுதப்பட்டு வந்த குறிப்புகள் தம்மைப் புத்தகம் எழுதத் தூண்டியதாகவும், அதில் இடையிடையே அந்தக் காலத்து வாழ்க்கை நடைமுறை நிகழ்வுகளையும் சேர்த்திருக்கிறதையும் சொன்னார். தன் பாட்டி ஐகிசின் ராவல்பிண்டியில் 16 வயது பேநசீர் புட்டோவுக்கு கவர்னஸ் ஆக இருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தன் தாத்தா ரெயில்வேயில் பணியாற்றியதால் பல இடங்களிலும் குடும்பம் நடத்த வேண்டியிருந்தது அந்தந்தப் பகுதியில் வழக்கத்தில் இருந்த சில சமையல் வகைகளைப் பாட்டி கற்றுக் கொண்டு குறித்து வைத்திருந்தார் என்றார்.

புத்தக அறிமுகத்தின்போது, சென்னை எழுத்தாளர் கீதா டாக்டர் அவருடன் உரையாடினார். தாம் பெங்களூரில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கூடவே நிறைய ஆங்கிலோ-இந்தியப் பெண்கள் படித்ததைக் குறிப்பிட்டார். அவர்கள் மிக அழகாக இருப்பார்கள் என்றபோது ஜென்னியின் முகத்தில் மலர்ச்சி. பார்ஸி சமூகம் போல, ஆங்கிலோ}இந்திய சமூகமும் குறுகியதாக இருந்தாலும் அவர்கள் தங்கள் பழக்கங்களை இந்திய வாழ்க்கையோடு இணைத்துக்கொண்டு வாழ்வதைக் குறிப்பிட்டார் கீதா டாக்டர்.

முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர், ""மோட் என்று ஒரு பதார்த்தம் உண்டா? உங்கள் சமையலில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்'' என்று ஒரு சிபிஐ பாணி கேள்வி கேட்டார்.

""தெரியுமே. அதை அல்மோட் என்போம். வெறும் மோட் அல்ல'' என்றார் ஜென்னி.

மூன்று தலைமுறை வாழ்க்கையை நாவலாகப் படித்திருக்கிறோம். இப்படி ஐந்து பாட்டிமார்கள் ஆங்கிலோ-இந்திய உணவுகள் தயாரிப்பது பற்றியும், இடையிடையே சமூக நிகழ்வுகளைச் சேர்த்துக் கொடுத்திருப்பதும் சமையல் புத்தகத்துக்கு தனிச் சிறப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →