சுட்ட பழமும் சுடாத பழமும்
அறம் செய விரும்பு எனத் தொடங்கிஆத்தி சூடியைப் பாடி வைத்தமறக்க முடியாத் தமிழ்ப் பாட்டிமணித்தமிழ் ஒளவைப் பெருமாட்டி!
அறம் செய விரும்பு எனத் தொடங்கி
ஆத்தி சூடியைப் பாடி வைத்த
மறக்க முடியாத் தமிழ்ப் பாட்டி
மணித்தமிழ் ஒளவைப் பெருமாட்டி!
தளரா நடையும் தனித்தமிழும்
தாய்மை உள்ளமும் துணையாக
வளரும் புலவர் பலருக்கும்
வழிகாட்டி யாக வாழ்ந்திட்டார்!
நாட்டை ஆளும் மன்னர்களை
நல்வழிப் படுத்தி திருத்திடவே
பாட்டைக் கருவியாய்க் கொண்டிட்டார்
பரிசில் பெற்று மகிழ்ந்திட்டார்!
நடந்து வந்த ஒளவை ஓர்நாள்
நடுவழி யதனில் களைப்புறவே
அடர்ந்த மரத்து நிழலின் கீழ்
அமர்ந்தே சற்று ஓய்வெடுத்தார்!
அருகில் நாவல் மரமொன்றில்
அமர்ந்து பழங்கள் பறித்திட்ட
சிறுவன் ஒருவன் அங்கிருந்து
செந்தமிழ்ப் பாட்டியைப் பார்த்திட்டான்!
பாட்டி உனக்கும் பசிக்கிறதா?
பழமும் வேண்டுமா? எனக் கேட்டான்
பாட்டியும் அவனிடம் பழமொன்றைப்
பாசத் தோடு கேட்டிட்டாள்!
சுட்ட பழமா? சுடாத பழமா?
சொல்வாய்ப் பாட்டி எனக் கேட்டான்!
சுட்டிப் பையன் சொற்கேட்டுச்
சிரிப்பு வந்தது ஒளவைக்கு!
சுடாத பழத்தைக் கேட்டவர்க்கு
சிறுவன் போட்ட ஒருபழம் தான்
இடறி மண்ணில் விழுந்திடவே
எடுத்த ஒளவைப் பாட்டியுமே
ஒட்டி யிருந்த மண்ணதனை
ஊதினார் தனது வாயாலே!
சுடுதா பாட்டி பழமென்று
குறும்பாய்ச் சிரித்தான் அச்சிறுவன்!
சுட்டிப் பையன் அறிவதனைக்
கண்டு ஒளவை வியந்திட்டார்!
குட்டிப் பையன் முருகனாகக்
காட்சி தந்தான் ஒளவைக்கு!
சிறுவர்க் கென்ன தெரியுமெனச்
சிறுமை யாக எண்ணாதீர்
சிறிய வயதில் கரிகாலன்
சிறப்பாய் ஆண்டதை மறவாதீர்!
உருவு கண்டு இகழாதீர்
உரைத்த வள்ளுவன் சொல் கேட்பீர்!
வரும் பொருள் உரைக்கும் அறிவிற்கு
வயதும் உண்டோ? சொல்லிடுவீர்!